பற்பல தடைகளுக்கும் ,பல சிக்கல்களுக்குப் பின்னும் மைலோ றக்பி நொக் அவுட் போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் லீக் போட்டிகளில் வெற்றியைப்பெற்ற இசிபதன கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதிக்கொண்டன.

பாடசாலை றக்பி போட்டிகளின் முடிசூடா மன்னர்களாகிய இசிபதன கல்லூரி அபாரமாக விளையாடி, கொழும்பு றோயல் கல்லூரியை 47 புள்ளிகளுக்கு 12 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.

அனைவரும் இரு அணிகளுக்கும் இடையில் ஒரு கடுமையான போட்டியை எதிர்பார்த்தனர். இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியைக் காணாது இசிபதன கல்லூரி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அடுத்த முனையில் றோயல் அணி அரையிறுதி போட்டியில் புனித தோமஸ் கல்லூரியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது.

ஆரம்பம் முதலே இசிபதன கல்லூரி தமது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பந்தை உதைத்து விளையாடாமல் சிறந்த முறையில் பாஸ் செய்து பந்தை நகர்த்தி இசிபதன கல்லூரி தமது திறமையை வெளிக்காட்டியது. எனினும் றோயல் அணி இசிபதன அணிக்கு நெருக்கடி கொடுத்து இசிபதன அணியின் 22 மீட்டரினுள் நுழைந்தது. றோயல் கல்லூரி தொடர்ந்து இரு பெனால்டிகளை வென்றது. தமது பலம் எது என்பதை நன்கு அறிந்த றோயல் அணி ரோலிங் மோல் மூலம் பந்தை நகர்த்திய போதும் முன்னைய போட்டிகளில் புள்ளிகளைப் பெற்றது போல் பெறமுடியாமல் இசிபதன கல்லூரியின் திறமையான விளையாட்டினால் திருப்பிப் பின்னால் அனுப்பப்பட்டனர்.

லீக் போட்டிகளைப் போன்றே இப்போட்டியில் இசிபதன கல்லூரியே முதலில் புள்ளிகளைப் பெற்றது. இசிபதன கல்லூரி வீரர் சுமுது ரன்கொத்கே றோயல் அணி வீரர்களைத் தாண்டி சென்று ட்ரை வைக்க அதை இலகுவாக கயான் விக்ரமரத்ன உதைத்து இசிபதன அணியை 7-0 என்று முன்னிலை அடையவைத்தனர். றோயல் அணி முன் வரிசை வீரர்களால் தமது வழமையான விளையாட்டை விளையாட முடியாமல் போனது.

றோயல் அணிக்கு நெருக்கடி கொடுத்த இசிபதன கல்லூரி, றோயல் அணியின் 50 மீட்டருக்குள் பந்தை நகர்த்த றோயல் அணி பந்தை உதைத்து விளையாடியது. இது இசிபதன கல்லூரிக்கு சிறந்த முறையில் தமது விளையாட்டை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து அசத்திய இசிபதன கல்லூரி ஓர் அருமையான ட்ரை வைத்தது. பந்தைப் பெற்ற ரன்கொத்கே ரோல் வீரர்களை முறியடித்து, அவர்களது விங் ரனிது பிரமோத்க்கு பந்தை பாஸ் செய்ய ,பின்  ரனிது மிக அருமையாக உட்பக்கமாகத் தலைவர் குஷான் இந்துனில்கு பாஸ் செய்ய அதை ஒரு கையால் தலைவர் கட்டுப்படுத்தி மற்ற வீரர் ரெண்டி சில்வாவுக்கு பாஸ் செய்து ,ரெண்டி சில்வா ட்ரை வைத்தார். விக்ரமரத்ன உதையை தவறவிட்ட போதும் 12-0 என்று இசிபதன கல்லூரி முன்னிலைகொண்டது.

கடுமையான போட்டிக்கு பின் இசிபதனவின் 22 மீட்டருக்குள் நுழைந்த  றோயல் கல்லூரி தனது ஸ்க்ரம் ஹாப் அஷோக் விஜேகுமார் மூலமாக தமது முதலாவது ட்ரையை வைத்தது. இசிபதன கல்லூரிக்கு எதிராக கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பைத் துரிதமாக செயல்படுத்திய விஜேகுமார் ட்ரை வைத்தார். ஓவின் விஸ்க்கே உதையை தவறவிடாததால் றோயல் அணி 12-7 என்று புள்ளி  வித்தியாசத்தைக் குறைத்துக்கொண்டது.

முதற் பாதி முடிவடைய முன் றோயல் அணிக்கு  தான் புள்ளி சேர்த்தது நம்பிக்கை கொடுத்த போதும், நீண்ட நேரம் அதை நீடிக்க விடாத இசிபதன கல்லூரி தலைவர் குஷான்  இன்னொரு ட்ரை வைத்து றோயல் அணிக்கு எதிரி ஆனார். இந்த முறை விக்ரமரத்ன உதையை தவறவிடாததால் முதற் பாதி 19-7 என்று இசிபதன கல்லூரிக்கு சாதகமாக முடிந்தது.

முதற் பாதியின் முதல் 5ஆவது நிமிடத்திலேயே இசிபதன அணி அதிர்ச்சி கொடுத்தது. இசிபதன கல்லூரியின் ஸ்க்ரம் ஹாப் ஹரித் பண்டார சிறப்பாக செயற்பட்டு ரெண்டி சில்வாவிற்கு பந்தை பாஸ் செய்ய, ரெண்டி சில்வா தனது இரண்டாவது ட்ரையையும் வைத்து புள்ளியை 26-7 என்று உயர்த்தினார்.

போட்டியின் நடுவாரான ரொஹான் பெர்னாண்டோ இசிபதன அணி வீரர்களாகிய சுதீர, அதிஷ ஆகியோர்களை மஞ்சள் அட்டை கொடுத்து வெளியே அனுப்ப, இசிபதன கல்லூரி 13 வீரர்களுடன் விளையாடியது. தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய றொயல் கல்லூரி ரோலிங் மோல் மூலமாக அமீர் ஊடாக ட்ரை வைத்து புள்ளியை 12 ஆக்கியது.

13 வீரர்களை மட்டும் கொண்டு இசிபதன கல்லூரி விளையாடிய போதுபம், தனக்கு கிடைத்த வாய்ப்பை றோயல் அணி சரியாக பயன்படுத்த தவறியது. தொடர்ந்து றோயல் கல்லூரியின் அஸ்மீரும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட றோயல் அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

தனது வழமையான விளையாட்டை வெளிப்படுத்திய இசிபதன கல்லூரி வேகமான தனது விளையாட்டால் றோயல் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தால் சுமுது ரன்கொத்கே கம்பங்களுக்கு அடியில் ட்ரை வைத்து றோயல் அணியின் கனவுகளைக் கலைத்தார். அவரைத் தொடர்ந்து ரெண்டி சில்வா தனது மூன்றாவது ட்ரையை வைத்து இசிபதன கல்லூரியின் வெற்றியை உறுதிசெய்தார். இரு சந்தர்ப்பங்களிலும் விக்ரமரத்ன உதையை தவறவிடாததால் 40-12 என்று முன்னிலைகொண்டது.

தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ள விரும்பாத இசிபதன கல்லூரி இறுதி சில நிமிடங்களில் ரனிது மூலமாக இன்னொரு ட்ரை வைத்தது.

றோயல் அணிக்கு மிக மோசமாக அமைந்த இப்போட்டியில் றோயல் அணி தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டவில்லை. இசிபதன கல்லூரியின் வேகமான அதிரடி ஆட்டத்தினால் பின்னுக்கு தள்ளப்பட்ட றோயல் அணி பாரிய புள்ளி வித்தியாசத்தில் தோல்விகண்டது. இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாத இசிபதன கல்லூரி லீக் மற்றும் நோக் அவுட் இரண்டிலும் வெற்றிபெற்று, றக்பி போட்டிகளின் முடிசூடா மன்னர்களாக திகழ்கின்றனர். இசிபதன கல்லூரி இரண்டு கிண்ணங்களையும் வெல்வது இது 10ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம் – (இசிபதன கல்லூரி 47 – றோயல் கல்லூரி 12)

ThePapare.com ஆட்ட  நாயகன் – ராண்டி சில்வா ( இசிபத்தன )

நடுவர்ரொஹான் பெர்னாண்டோ

இசிபதன : 47
ட்ரை : ராண்டி சில்வா (3), சுமுது ரன்கொத்கே (2), குஷான், ரனிது
உதைகள் : கயான் விக்ரமரத்ன (6)

றோயல் : 12
முயற்சிகளின் : அசோக் விஜேகுமார் , அஸ்மீர்
உதைகள் : ஓவின் அஸ்க்கே (1)