கரீபியன் ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்ற இர்பான் பதான்

225
Image Courtesy - AFP

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க வீரரும், இடதுகை வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் இம்முறை நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரைப் போல, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகள் டி-20 லீக் போட்டித் தொடர்களை நடத்தி வருகிறன. பொதுவாக இந்திய கிரிக்கெட் சபை இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை.

பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

பாகிஸ்தானுடனான நான்காவது ஒருநாள் போட்டியிலும் சவாலான வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இங்கிலாந்து

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை நடத்தும் கரீபியன் ப்ரீமியர் லீக் டி-20 தொடரில் வீரர்கள் ஏலத்தின் வரைவு பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இருபது நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியலில் இர்பான் பதானும் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான 34 வயதுடைய  இர்பான் பதான் முதல் தடவையாக இடம்பிடித்துள்ளார்.

எனினும், இம்முறை கரீபியன் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 22ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. எனவே, இந்த தொடரில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபையினால் இர்பான் பதானுக்கு அனுமதி வழங்கி தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

எது எவ்வாறாயினும், இர்பான் பதானை ஏதாவது ஒரு அணி ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

கடந்த இரு வருடங்களாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடமல் இருந்த இர்பான் பதான் முதல் முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள பதான் 300 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளதுடன் 2,800 ஓட்டங்களையும் குவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட்டில் இர்பான் பதான் ஹெட்ரிக் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரையில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே சுப்பர் ஜெயன்ட், குஜராத் லையன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் உள்ளிட்ட அணிகளில் இர்பான் பதான் விளையாடியுள்ளார். அதேநேரம், இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பராடோ மாநிலத்துக்காக விளையாடி வந்த பதான் அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக விளையாடி, அங்குள்ள மாநில அணிக்கு ஆலோசகராகவும் செயற்பட்டார்.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற முஷ்டாக் அலி டி-20 தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடிய அவர், 5 போட்டிகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 76

உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் நம்பிக்கையோடு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி, மாலிங்கவின்

இதேநேரம், கரீபியன் லீக் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் ஹோல் கூறுகையில், எங்கள் லீக்கில் இடம்பெறுவதற்காக ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தார்கள். கரீபியன் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும், உயர்தரமான கிரிக்கெட்டை வழங்கும் என்பதால் வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு லீக்கை வித்தியாசமாக நடத்த விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

இந்த கரீபியன் லீக் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், தென்னாபிரிக்க வீரர் ஜே.பி டுமினி, பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம், உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க