குஜராத் லயன்சின் இரண்டாவது வெற்றிக்கு கைகொடுத்த சுரேஷ் ரெய்னா

315
Suresh Raina BCCI

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த போட்டியொன்றில் அபாரத்தினை வெளிக்கொணர்ந்த குஜராத் லயன்ஸ் அணி, 4 விக்கெட்டுக்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை வீழ்த்தியது.  

கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா முதலில் எதிரணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கினார்.

அம்லாவின் சதம் வீண் : பட்லர், ராணாவின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்

இதன்படி, சுனில் நரேன் மற்றும் அணித் தலைவர் கெளதம் கம்பிர் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை கொல்கத்தா ஆரம்பித்திருந்தது.

ஆரம்ப வீரராக வந்திருந்த மேற்கிந்திய தீவுகளின் நரேன், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் மாத்திரம் ஓட்டங்களினை பெற்று, வெறும் 17 பந்துகளில் 42 ஓட்டங்களினை 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடகளாகப் பெற்றிருந்தார்.

இதனால், அபார ஆரம்பத்தினை பெற்றுக்கொண்ட கொல்கத்தா அணி, இந்த பருவகாலத்திற்காக முதலில் துடுப்பாடி, பவர் பிளேயில் அதிக ஓட்டங்களைப் (65) பெற்ற அணியாக தமது நாமத்தை பதிவிட்டுக் கொண்டது.

தொடர்ந்து, கம்பீரும் பெறுமதியான ஓட்டங்களைச் சேர்த்து வெளியேற, களத்திற்கு வந்த ரொபின் உத்தப்பா எதிரணி பந்து வீச்சாளர்களினை துவைக்கத் தொடங்கினார்.

பிரவீன் குமாரின் பந்து வீச்சில் வீழ்ந்த உத்தப்பா மொத்தமாக, 48 பந்துகளிற்கு 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 72 ஓட்டங்களினை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

இதனால், வலுவடைந்த கொல்கத்தா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களினை குவித்திருந்தனர்.

பந்து வீச்சில், குஜராத் லயன்ஸ் அணி சார்பாக அணித் தலைவர் சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார், ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் பேஷில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பகிர்ந்து கொண்டனர்.

சவாலான வெற்றி இலக்காகக் காணப்பட்ட 188 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடியிருந்த குஜராத் அணிக்கு, அவுஸ்திரேலிய T-20 அணியின் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கலம் ஆகியோர் நல்லதொரு ஆரம்பத்தினைப் பெற்றுத் தந்திருந்தனர்.

இதில் பின்ச் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 15 பந்துகளிற்கு 31 ஓட்டங்களையும், மெக்கலம் 17 பந்துகளிற்கு 33 ஓட்டங்களையும் பெற்று ஓய்வறை திரும்பினர்.

தொடர்ந்து களத்திற்கு வந்த குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சாளர்களை சிதைத்து, ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.

இளையோர் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இலங்கை கனிஷ்ட அணி

வெறும் 46 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்ட ரெய்னா 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாச்சித்தள்ளி மொத்தமாக 84 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

இவரது ஆட்டம் பெரும் உதவியாக அமைய முடிவில், ஆறு விக்கெட்டுக்களை இழந்தவாறு 18.2 ஓவர்களில் 188 ஓட்டங்களினைப் பெற்று குஜராத் லயன்ஸ் அணி இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ரெய்னாவை ஆட்டமிழக்கச் செய்யும் சந்தர்ப்பங்களை கோட்டை விட்ட கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் மொத்தமாக நேத்தன் கொல்டர்-நைல் மற்றும் குல்தீப் யதோவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 187/5 (20) ரொபின் உத்தப்பா 72(48), சுனில் நரேன் 42(17), கெளதம் கம்பீர் 33(28), மனீஷ் பாண்டே 24(21), சுரேஷ் ரெய்னா 11/1(2)

குஜராத் லயன்ஸ் – 188/6 (18.2) சுரேஷ் ரெய்னா 84(46), ப்ரெடன்டன் மெக்கலம் 33(17), ஆரோன் பின்ச் 31(15), குல்தீப் யாதவ் 33/2(4)

போட்டி முடிவுகுஜராத் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி