கம்பீர், கிறிஸ் லின் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தினால் இலகு வெற்றியை சுவீகரித்த கொல்கத்தா

258

10ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

கோலாகல ஆரம்ப நிகழ்வு, நடப்புச் சம்பியனின் வெற்றி என்பவற்றுடன் ஆரம்பித்த ஐ.பி.எல்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி சார்பில் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா 7 பவுண்டரிகள் அடங்கலாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 25 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 184 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14.5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 184 ஓட்டங்களை பெற்று பத்து விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் கிறிஸ் லின் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 41 பந்துகளுக்கு 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அதேவேளை, அந்த அணியின் தலைவர் கௌதம் கம்பீர் 12 பவுண்டரிகள் அடங்கலாக 48 பந்துகளுக்கு 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்மூலம் 10ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தமது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா அணியின் நேற்றைய வெற்றி, இருபதுக்கு இருபது போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை கடந்த சாதனையையும் படைத்துள்ளது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 41 பந்துகளுக்கு 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கிறிஸ் லின் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

குஜராத் லயன்ஸ் – 183/4 (20) – சுரேஷ் ரெய்னா 68(51), தினேஷ் கார்த்திக் 47(25),

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 184/0 (14.5) – கிறிஸ் லின் 93(41), கௌதம் கம்பீர் 76(48)

குஜராத் லயன்ஸ் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளமை அந்த அணிக்கு பெறும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

அத்துடன் இதுவரையில் அவர்களின் இடங்களுக்கு மாற்றுவீரர்கள் எவரும் அறிவிக்கப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் ஆரம்பாகும் புதிய கிரிக்கெட் தொடர்

இந்த போட்டியில் 68 ஓட்டங்கள் குவித்த சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதுவரை 148 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு சதம் மற்றும் 29 அரைச் சதங்களுடன் 4,166 ஓட்டங்களை குவித்துள்ளார்.

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லி 4,110 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 3,877 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்துள்ளது.

10ஆவது ஐ.பி.எல் தொடரின் 2ஆவது போட்டி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் மந்தமாக ஆடினாலும் இறுதி 2 ஓவர்களில் 35 ஓட்டங்களைக் குவிக்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் கிரோன் பொல்லார்ட் 27 ஓட்டங்களையும்,  ஹர்திக் பாண்டியா 35 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 38 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 185 என்ற வெற்றி இலக்குடன் களம் புகுந்த ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு ரஹானே, ஸ்மித் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவையான நிலையில் ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியினரால் பூம்ராவின் 19ஆவது ஓவரில் 7 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையான நிலையில் பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் 4ஆம் மற்றும் 5ஆம் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ஸ்மித் பூனே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

கடந்தமுறை தோனி தலைமையில் 7ஆவது இடம்பிடித்த ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணி இம்முறை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.


டெல்லி, பெங்களூர் அணிகள் தங்களது மாற்று வீரர்களை அறிவித்தது

10ஆவது ஐ.பி.எல் தொடரிலிருந்து உபாதையால் விலகியுள்ள முக்கிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை ஐ.பி.எல் அணிகள் அறிவித்துள்ளன.

டெல்லி அணியின் சகலதுறை வீரர் டுமினிக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஹில் பென்ஹாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீஷன் அணியில் இடம்பிடிப்பார் என செய்திகள் வெளியாகினாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கேரளாவைச் சேர்ந்த 23 வயதான அதிரடி வீரர் வினோத் அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பூனே அணி உபாதையடைந்த மிட்சல் மார்ஷ் மற்றும் அஷ்வின் ஆகியோருக்குப் பதிலாக இம்ரான் தாஹிர் மற்றும் தமிழகத்தின் வொசிங்டன் சுந்தர் ஆகியோரை அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.