பானிபூரி விற்று ஐ.பி.எல் மூலம் கோடீஸ்வரனான 17 வயது இளைஞன்

100

மும்பையை சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்டாலும், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற வெறியில் இருந்தவர். அவரது விடா முயற்சி இன்று அவரை கோடீஸ்வரனாக மாற்றி இருக்கிறது. அத்துடன் அவரது கனவான கிரிக்கெட்டிலும் அவர் அடுத்த நிலைக்கு சென்று இருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மும்பை வீதிகளில் பானிபூரியை (ஒரு வகை இனிப்பு பலகாரம்) விற்று கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு  இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தின் திருப்புமுனையாக இம்முறை ஐ.பி.எல் ஏலம் விளங்கியது.

2020 ஐ.பி.எல் தொடருக்கான 8 அணிகளினதும் குழாம்கள்

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் ஏலம்…

2020 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த பணத்தை விட நிறைய வீரர்களுக்கு அதிக தொகை பணம் சென்றிருந்தாலும், அவரது வாழ்க்கை ஒரு விசித்திரமான ஒரு கதையைக் கொண்டதாக உள்ளது. 

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் மும்பையைச் சேர்ந்த 17 வயதான கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூபா 2.4 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு அடிப்படை விலையாக ரூபா 20 இலட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலம் தொடங்கியதும் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் போட்டியிட்டு ரூபா 80 இலட்சத்துக்கு கொண்டு சென்றன. 

ஆனால் விடாமல் துரத்திய கொல்கத்தா அணி ரூபா 1.90 கோடிக்கு ஜெய்ஸ்வாலை ஏலம் கேட்டது. ஆனால் இறுதியாக ராஜஸ்தான் அணி ரூபா 2.4 கோடிக்கு ஜெய்ஸ்வாலை விலைக்கு வாங்கியது. 

பானிபூரி விற்று, சாதாரண டென்ட் குடிசையில் வாழ்ந்து, கிரிக்கெட் விளையாடிப் பழகியவர் ஜெய்ஸ்வால், அவரை இந்த ஏலத்தின் மூலம் ராஜஸ்தான் அணி கோடீஸ்வரராக்கி அவருக்கு மறுவாழ்க்கை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

மும்பபைக்கு வந்த ஜெய்ஸ்வால்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11 ஆவது வயதில் மும்பைக்குப் பிழைப்புத் தேடியும், கிரிக்கெட்டில் இலட்சிய வீரராக மாற வேண்டும் என்ற நோக்கில் ஜெய்ஸ்வால் வந்துள்ளார்.

ஆனால், தெரியாத ஊரில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் என்ற நிலையில், அவரது தந்தை சில நாட்களில் உத்தர பிரதேசத்திற்கு திரும்பினார்.

கிரிக்கெட் மீது இருந்த காதலை விட தயாராக இல்லாத ஜெய்ஸ்வால், மும்பையிலேயே தனியாக இருந்தார். தங்க இடம் இல்லை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை.

பானிபூரி கடையில் மாலை நேரத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், பகலில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். காசு கொடுத்து அறை வாடகைக்கு எடுக்க முடியாததால் அந்த மைதானத்திலேயே தங்கினார்.

மும்பையில் உள்ள முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டிக் குடிசை அமைத்து ஜெய்ஸ்வால் தங்கியுள்ளார். பானிபூரி தயாரிக்கும் ஒருகடையில் வேலைபார்த்துக் கொண்டே கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

பரிசாக கிடைத்த கூடாரம் 

ஜுவாலா சிங் எனும் பயிற்சியாளரிடம் ஜெய்ஸ்வால் பயிற்சி பெற்றுவந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டுள்ளார். 

ஒரு 11 வயது இளைஞன், இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற கனவோடு மும்பைக்கு வருகிறான் என்றால், அது பொலிவுட்டில் மட்டும்தான் நடக்கும். ஆனால், நிஜத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் முடியும் என்று பாராட்டி முழுவேகத்துடன் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். 

ஜெய்ஸ்வாலைவிட வயதில் மூத்த அணி வீரர்களுடன் விளையாட வைத்திருக்கிறார் அவர். ஆனால், ஜெய்ஸ்வால் ஒருபோதும் அவர்களைப் பார்த்து பயந்ததில்லை.

இதனிடையே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடினால் ஒரு கூடாரம் ஏற்பாடு செய்து தருவதாக பயிற்சியாளர் கூற, அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி தனக்கு தங்க ஒரு கூடாரத்தைப் பெற்றுக் கொண்டார். அதுமாத்திரமன்றி, அவரது விளையாட்டைக் கண்டு சிலர் அவருக்கு பொருள் உதவி செய்ய ஜெய்ஸ்வாலின் கஷ்டங்கள் சற்று தளர்ந்தது.

இந்த நிலையில், ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டம், பந்துவீச்சு திறமையைப் பார்த்த பயிற்சியாளர் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார். அதன்பின் மும்பையில் கடந்த 2015 ஆம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ஓட்டங்களை ஜெய்ஸ்வால் விளாசினார்.

பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

மாலிங்கவுடன் ஐ.பி.எல் தொடரில் இணையும் இசுரு உதான

கொல்கத்தாவில் இன்று (19) நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) ஏலத்தில்…

ஜெய்ஸ்வால் சாதனை 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத்தில், 318 ஓட்டங்களை விளாசி, அந்தத் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 இல் நடைபெற்ற இளம் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 273 ஓட்டங்கனை அடித்தார். 2018 -2019 ரஞ்சி கிண்ணத்தில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 16, இவரது வாழ்வில் பெரிய திருப்பத்தை உருவாக்கியது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கிண்ணத்தில், இரட்டைச் சதம் அடித்து ஜெய்ஸ்வால் மிரட்டினார். மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் நிலைநாட்டினார். 

அந்த இரட்டைச் சதம், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப்பார்க்கவைத்தது. 

மேலும், இந்தத் தொடரில், 6 போட்டிகளில் மட்டுமே ஆடி 564 ஓட்டங்களைக் குவித்தார். சராசரி 112.80. இந்த சாதனைகள் தான் இந்திய ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதையடுத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இதன்படி, அடுத்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட அணியிலும் அவர் இடம்பெற்று தென்னாபிரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி என்னைத் தேர்வு செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான விடயங்களை கற்றுக் கொள்ள எனக்கு இது சிறந்த வாய்ப்பு. என் கிரிக்கெட் வாழ்க்கையைச் சிறப்பாக்க இது எனக்குக் கிடைத்த சிறந்த அடித்தளமாகப் பார்க்கிறேன்.

நான் சிறுவயதில் பானிபூரி விற்றுக் கொண்டு விளையாடியதை வீரர்கள் என்னைப் பலரும் கிண்டல் செய்வார்கள். ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எப்போது பணம் கிடைக்கிறதோ, சாதகமான நேரம் கிடைக்கிறதோ அப்போது சாப்பிடுவேன். மிகுந்த கஷ்டத்தோடு வாழ்ந்துவந்த எனக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில்,

நான் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கழகத்தின் கூடாரத்தில் மைதான வீரர்களுடன் தான் தூங்கினேன். ஆனால் நான் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தேன். 

மும்பையில் இடம்பெறுகின்ற பிரமாண்ட திருவிழாக்களிலல் ஒன்றான ராம் லீலாவின் போது நான் நன்றாக சம்பாதித்தேன். எனது அணி வீரர்கள் பானி-பூரிக்கு அங்கு வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்தேன். சில நேரங்களில் அவர்கள் அங்கு வருவார்கள், அவர்களுக்கு சேவை செய்வதில் நான் சங்கடமாக உணர்வேன் என்று கூறினார்.

நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடிய பிறகு, நான் சோர்வடைந்து தூங்கப் போவேன். ஒருநாள், நான் ஒன்றும் செய்யவேண்டாம், அவர்களுக்கு உதவ வேண்டாம், தூங்குங்கள் என்று கூறி என் பொருட்களை வெளியே எறிந்தார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன், சர்வதேச பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு என்னைத் தயார்செய்கிறேன். முடிந்த அளவு அதற்காக உழைக்கிறேன். இதையெல்லாம்விட என் மீது நம்பிக்கை இருக்கிறது. எனது இலக்கை நோக்கி நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மனநிலை எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.

இந்திய ஒருநாள் குழாமிலிருந்து வெளியேறும் தீபக் சஹார்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள்…

சிறந்த வாய்ப்பு 

ஒருவேளை ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைக்காமல் போனாலும், சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்களை அருகே சந்தித்து அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.

எனவே பல்வேறு போராட்டங்களுக்கும் பின்னர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை 2020 இல் மாறவுள்ளது, ஏனெனில் அவர் இந்தியாவின் பிரகாசமான இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மிக விரைவில் உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<