நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்து சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

1185

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (30) சுகததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்று முடிந்திருக்கும் நட்புரீதியிலான சர்வதேச அழைப்பு வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை வலைப்பந்தாட்ட அணி சிங்கப்பூர் வலைப்பந்தாட்ட அணியை 72-70 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் ஆளுகையின் கீழ் இலங்கை வலைப்பந்து அணி புதிய அத்தியாயத்தையும் அடைந்திருக்கின்றது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியிருந்தது. இறுதிப்போட்டியில் இத்தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது புள்ளிகள் தரவரிசையில முதலிடத்தினை பெற்ற இலங்கை வலைப்பந்து அணி தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட சிங்கப்பூர் அணியை எதிர் கொண்டிருந்தது. தமது ஆரம்ப போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வியடைந்திருந்த சிங்கப்பூர் அணி அதற்கு பதிலடி தர இறுதிப் போட்டியில் எதிர்பார்த்திருந்தது.

எந்தவிதத் தோல்வியையும் சந்திக்காத இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் புள்ளிகள் பெறுவதை ஆரம்பித்து வைத்தார். பின்னர் இரண்டு அணிகளினதும் சம ஆதிக்கத்துடன் போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் நகர்ந்தன. தொடர்ந்த நிமிடங்களில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை சேர்க்க அணியொன்றுக்கு முன்னிலையைப் பெறுவது கடினமாக இருந்தது. எனினும் இப்பகுதியின் இறுதி நேரத்தில் சிறப்பாக செயற்பட்டு இலங்கை வலைப்பந்து அணி முதல் கால்பகுதியை 21:18 என கைப்பற்றியது.

இரண்டாம் கால்பகுதியில் சிங்கப்பூரை விட மூன்று புள்ளிகளால் மாத்திரமே இலங்கை அணி முன்னிலையில் இருந்த காரணத்தினால் அவர்களுக்கு இந்த முன்னிலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தது. இதனால் இலங்கை மங்கைகள் துரித கதியில் செயற்பட்டு புள்ளிகள் வேட்டையில் இறங்கினர். இதில் தர்ஜினி சிவலிங்கம் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி புள்ளிகள் பெறுவதில் அதிக  பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டாம் கால்பகுதியில் 20 புள்ளிகளை இலங்கை அணி பெற்றுக்கொள்ள, சிங்கப்பூரினால் 15 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. இந்த புள்ளிகள் அடிப்படையில் இலங்கை மகளிர் அணி தாம் எதிர்பார்த்த முன்னிலையைப் பெற்றுக் கொண்டதுடன், இறுதிப் போட்டியின் முதல் அரைப்பாதியும் 41:34 என இலங்கை அணியின் ஆதிக்கத்துடன் முடிந்தது.

ஆசியாவின் வலைப்பந்து அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிங்கப்பூர் மூன்றாம் கால்பகுதிக்கான முதல் புள்ளியை அவ்வணி வீராங்கனை லீ பெய் சான்னின் உதவியுடன் பெற்றுக் கொண்டது. எனினும், அடுத்த கணத்திலேயே தர்ஜினி சிவலிங்கம் இலங்கை சார்பில்  எதிரணிக்கு பதிலடி தந்தார்.

தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் மூலம் சிங்கப்பூர் மங்கைகள் இலங்கை அணியின் புள்ளிகளை சமப்படுத்த நெருங்கி அதில் வெற்றியும் கண்டனர். இதனால், ஒரு கட்டத்தில் 47:46 என போட்டியின் ஆதிக்கம் சிங்கப்பூர் அணியின் பக்கம் சென்றது.  பின்னர் தமது தடுப்புக்களை பலப்படுத்திய இலங்கை மகளிர் அணி கிடைத்த வாய்ப்புக்கள் மூலம் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. இதனால், தமது எதிர்த் தரப்பின் புள்ளிகளை மெதுவாக அண்மித்த இலங்கை அணி இந்தப் பகுதியில் 15 புள்ளிகளை எடுத்து 56:53 என போட்டியில் தொடர்ந்தும் ஆதிக்கத்தை நீடித்தது. எனினும், இப்பகுதியில் 19 புள்ளிகளை எடுத்துக் கொண்ட சிங்கப்பூர் அணி மூன்றாம் கால்பகுதியை அவர்களுக்கே சொந்தமாக்கியது.

இலங்கை சிங்கப்பூர் அணிகளுக்கிடையிலான போட்டியைப் பார்வையிட

இரண்டு அணிகளுக்கும் இடையில் இறுதிக் கால்பகுதியில் மூன்று புள்ளிகள் மாத்திரமே வித்தியாசமாக இருந்த காரணத்தினால், விறுவிறுப்பிற்கும் சுவாரஸ்யத்திற்கும் எந்தப் பஞ்சமும் இல்லாமல் இருந்தது. சிங்கப்பூர் மகளிர் அணியினர் இந்தப் பகுதியில் தமக்கு புள்ளிகள் பெறுவதற்காக கிடைத்த வாய்ப்புக்கள் சிலவற்றை கோட்டை விட்டிருந்தனர். இது இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு அதிர்ஷ்டமாக மாறியிருந்தது. ஆனாலும், தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் மிகவும் வேகமாக செயற்பட்ட சிங்கப்பூர் அணி இலங்கை மங்கைகளுக்கு நெருக்கடி தந்தனர். எனினும், ஒன்றிணைந்த செயற்பாடுகளினால் இலங்கையின் வீராங்கனைகளும் மறுமுனையில் புள்ளிகள் பெற்றிருந்தனர்.  சிங்கப்பூர் அணி இறுதிக் கால் பகுதியை 17:16 எனக் கைப்பற்றியிருந்த போதிலும் இலங்கை மகளிர் அணிக்கு போட்டியில் வெற்றிபெற இக்கால் பகுதியில் பெற்ற 16 புள்ளிகளே போதுமாக இருந்தது.

மூன்றாம் இடத்திற்கான போட்டி

மாலை 3.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் முறையே மூன்றாம், நான்கம் இடங்களைப் பெற்ற இலங்கை அபிவிருத்தி மகளிர் அணியும்  இங்கிலாந்தின் PSTAR வலைப்பந்து கழக அணியும் மோதின.

அதிக இளம் வீராங்கனைகளைக் கொண்டிருந்த இலங்கை அபிவிருத்தி  அணி அதி மும்முரமாக போட்டியின் முதல் கால்பகுதியில் புள்ளிகள் சேர்க்கத் தொடங்கியிருந்தனர்.

மிகச்சிறந்த ஆட்டத்தினை காட்டிய இலங்கை அபிவிருத்தி அணி 25 புள்ளிகளை முதல் கால் பகுதியில் சேர்க்க, இங்கிலாந்து வீராங்கனைகளால் 04 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

பாரியளவான புள்ளிகள் இடைவெளியில் ஆரம்பித்த இரண்டாம் கால்பகுதியிலும் புள்ளிகளுக்கான நுழைவாயிலை இலங்கை அபிவிருத்தி அணியே திறந்து வைத்தது. இந்த கால்பகுதியில் சஜினி ரத்னநாயக்க, மெலோனி விஜயசிங்க ஆகியோரின் சிறப்பாட்டத்தினால் அதிக புள்ளிகள் இலங்கை அபிவிருத்தி அணிக்கு கிடைத்தன. ஆனால், இந்தக் கால்பகுதியிலும் இங்கிலாந்தின் PSTAR அணிக்கு இலங்கை வீராங்கனைகளை தாண்டி புள்ளிகள் எடுப்பது சிரமமாக இருந்தது.

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் குலதுங்க, லொக்குஹெட்டிகே

இதன்படி போட்டியின் முதல் அரைப்பகுதி நிறைவில் மேலதிகமாக 21 புள்ளிகளை இலங்கை அபிவிருத்தி அணி பெற்றுக் கொண்டதுடன், 04 புள்ளிகளை மாத்திரமே இங்கிலாந்தின் PSTAR அணி எடுத்தது. இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி 46:08 என இலங்கை அபிவிருத்தி அணியின் முன்னிலையுடன் முடிந்தது.

மூன்றாம் கால்பகுதியை எதிரணியினைவிட 38 புள்ளிகள் முன்னிலையுடன் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணிக்கு இந்தப் பகுதியிலும், மிக இலகுவாக புள்ளிகளை எடுத்தது. மொத்தமாக  19 புள்ளிகளை இலங்கை அபிவிருத்தி அணி மூன்றாம் கால்பகுதியில் எடுக்க, PSTAR கழகத்திற்கு அதன் தலைவி கரோலினின் குறிப்பிடும்படியான ஆட்டத்துடன் 07 புள்ளிகள் கிடைத்தன. எனினும், மூன்றாம் பகுதியில் பெற்றுக் கொண்ட புள்ளிகளால் இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு இலங்கை அபிவிருத்தி அணியை அருகில் கூட நெருங்க கூட முடியவில்லை. இதன் அடிப்படையில், 65-15 என மூன்றாம் கால்பகுதியையும் இலங்கை வீராங்கனைகளே கைப்பற்றிக் கொண்டனர்.  

இலங்கை மகளிர் அணி PSTAR கழகத்தினைவிட 50 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருந்ததால், அவர்களுக்கு போட்டியின் இறுதிக் கால்பகுதியில் பெற்றுக் கொண்ட 15 புள்ளிகளே போட்டியில் வெற்றிபெற போதுமாக இருந்தது. மறுமுனையில் 07 புள்ளிகளை மாத்திரமே இங்கிலாந்தின் PSTAR வலைப்பந்து கழகம் பெற்றுக் கொண்டது.

எனவே, 80-22 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அபிவிருத்தி அணி ஆட்டத்தில் வெற்றியாளர்களாகமாறி சர்வதேச அழைப்பு வலைப்பந்தாட்ட தொடரின் மூன்றாம் இடத்தினைப் பெற்ற அணியாகவும் மாறியது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க