சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் வெற்றியை சுவைத்த லிவர்பூல்

163

முஹமது சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றதோடு, கிரிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் மறுக்கப்பட்டபோதும் இத்தாலி சீரி A தொடரை ஜுவாண்டஸ் அணி வெற்றியுடன் ஆரம்பித்தது.

மறுபுறம் ஸ்பெயின் லா லிகாவில் பலம்மிக்க ரியல் மெட்ரிட், வல்லடோலிட் கழகத்துடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது.

கடந்த சனிக்கிழமை அன்பீல்டில் நடந்த போட்டியில் லிவர்பூல் அணி ஆர்சனலை எதிர்கொண்டது. ஜோல் மாடிஸ் தலையால் முட்டி பெற்ற கோல் மற்றும் சலாஹ்வின் பெனால்டி மூலமும் லிவர்பூல் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

இந்நிலையில் எதிரணி பக்கமாக பந்தை வேகமாக கடத்திச் சென்ற எகிப்தின் முன்கள வீரர் சலாஹ் பெனால்டி பகுதிக்குள் நுழைந்து அபாரமாக தனது இரண்டாவது கோலையும் 58 ஆவது நிமிடத்தில் வைத்து பெற்றார். இதன் மூலம் லிவர்பூல் அணி 3-0 என போட்டியில் முன்னிலை பெற முடிந்தது.  

செல்சி முதல் வெற்றி; மான்செஸ்டர் யுனைடட் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் இன்று (24)…

ஆர்சனலின் பதில் வீரர் லூகாஸ் டொரைரா கடைசி நேரத்தில் கோல் ஒன்றை போட்டபோதும் அது அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவே இருந்தது. 

இதன் மூலம் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் லிவர்பூல் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

இதனிடையே சீரி A தொடரில் ஜுவாண்டஸ் தனது முதல் போட்டியில் பார்மா (Parma) அணியை எதிர்கொண்டது. சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஜுவாண்டஸ் அணியின் தலைவர் ஜோர்ஜியோ சிலினி 21 ஆவது நிமிடத்தில் புகுத்திய கோலே அந்த அணியின் வெற்றி கோலாக இருந்தது. 

இதில் ஜுவாண்டஸ் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஒன்றை புகுத்தியபோதும் அது ஓப் சைட் என வீடியோ நடுவர் மூலம் அறிவிக்கப்பட்டது. 

ரியல் மெட்ரிட் அணி இந்த பருவத்தின் லா லிகா தொடரில் தனது சொந்த மைதானமான சான்டியாகோ பெர்னபுவில் விளையாடிய முதல் போட்டி அந்த அணிக்கு ஏமாற்றத்தை தந்தது. ரியல் வலடோலிட் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி நிமிடங்கள் வரை பரபரப்பு நீடித்தது.

எனினும் 82 ஆவது நிமிடத்தில் வைத்து கரிம் பென்சமா கோல் புகுத்த ரியெல் மெட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் 6 நிமிடங்கள் கழித்து வலடோலிட் வீரர் சர்ஜியோ குவார்டியோலா நவர்ரோ பதில் கோல் திருப்பியதால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 

இதேவேளை ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடரில் நடப்புச் சம்பியன் பயேர்ன் முனிச் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஸ்சல்கே அணிக்கு எதிராக 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதில் பயேர்ன் அணியின் ரொபட் லொவன்டோஸ் ஹெட்ரிக் கோல் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<