பென்சமா, லுவிஸ் சுவாரெஸ் ஆகியோரின் இரட்டை கோலுடன் ரியல் மெட்ரிட், பார்சிலோனா வெற்றி

80

ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (14) நடைபெற்றதோடு இத்தாலி சிரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும் ஜெர்மனி புன்டஸ்லிகா தொடர்களிலும் சில போட்டிகள் இடம்பெற்றன.

ரியல் மெட்ரிட் எதிர் லெவன்டே  

கரிம் பென்சமா பெற்ற இரட்டை கோல்கள் மூலம் லெவன்டே அணியுடனான முக்கிய போட்டியில் ரியல் மெட்ரிட் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. 

நோர்விச் சிட்டியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த மென்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (14)…

பிரான்ஸின் முன்கள வீரரான கரிம் பென்சமா முதல் பாதியில் ஆறு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களை புகுத்தியதோடு தொடர்ந்து கசிமிரோ (Casemiro) மற்றொரு கோலை பெற முதல் பாதி முடிவில் ரியல் மெட்ரிட் கழகம் 3-0 என முன்னிலை பெற்றது. 

எனினும் தனது முந்தைய இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய லெவன்டே இரண்டாவது பாதியில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தி போர்ஜா மயோரல் (Borja Mayoral) மற்றும் கொன்சலோ மெலரோ (Gonzalo Melero) மூலம் கோல் போட்டபோதும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. 

ரியல் மெட்ரிட் அணி தனது முந்தைய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்த நிலையில் சினடின் சிடேனின் அணிக்கு இது தீர்க்கமான வெற்றியாக இருந்தது. 

இதில் செல்சி அணியில் இருந்து 110 மில்லியன் டொலருக்கு ரியல் மெட்ரிட் வந்த ஈடன் ஹசார்ட் கடைசி பாதி நிமிடங்களில் களமிறங்கி லா லிகாவில் தனது கன்னிப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 

பார்சிலோனா எதிர் வலன்சியா

பார்சிலோனா அணியின் 16 வயது வீரர் அன்சு பெட்டி (Ansu Fati) சிரேஷ்ட அணிக்காக 2 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்திய நிலையில் வலன்சியா அணியுடனான போட்டியில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது. 

நூ கேம்பில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பிரங்கி டி ஜொன் பரிமாற்றிய பந்தை வலைக்குள் புகுத்தினார் பெட்டி. தொடர்ந்து செயற்பட்ட பெட்டி ஐந்து நிமிடங்களின் பின் பந்தை டி ஜொங்கிடம் வழங்க பார்சிலோனாவின் கோல் எண்ணிக்கை உயர்ந்தது.  

எதிரணிக்காக கெவின் கடைரோ முதல் பாதியில் ஒரு கோலை போட்டபோதும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெராட் பிகே (Gerard Piqué) மற்றும் லுவிஸ் சுவாரெஸ் இரட்டை கோல் புகுத்த பார்சிலோனாவின் வெற்றி உறுதியானது. மெக்சி கோமஸ் மேலதிக நேரத்தில் வலன்சியா சார்பில் மற்றொரு கோலை பெற்றார்.   

நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி உபாதைக்கு உள்ளான நிலையிலேயே பார்சிலோனா லா லிகா பருவத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


நெய்மரின் கடைசி நேர கோலால் வென்ற PSG

இதனிடையே லா லிகாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரியல் சொசிடாட் அணிக்கு எதிராக அட்லெடிகோ மெட்ரிட் அணி 2-0 என தோல்வியை சந்தித்ததோடு, பிரான்சின் லீக் 1 தொடரில் நடப்புச் சம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி ஸ்டர்போர்க் அணிக்கு எதிராக நெய்மர் கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் வெற்றியீட்டியது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் நீடிப்பதில் இழுபறி இருந்து வந்த நிலையில் மீண்டும் அந்த அணிக்கு திரும்பிய அவர் பைசிகள் கிக் (Bicycle kick)  முறையில் தாவி உதைத்து அபார கோல் ஒன்றை பெற்றார். 

இதேவேளை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜுவான்டஸ் அணி சிரி A தொடரில் பியோரன்டினா அணியுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்தது. கடைசியாக போர்த்துக்கல் அணிக்காக நான்கு கோல்களை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் கடைசி நேரத்தில் பைசிகல் கிக் ஒன்றை உதைத்தபோது அது கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது. 

ஜெர்மனி புன்டஸ்லிகா தொடரிலும் சனிக்கிழமை இரு முக்கிய போட்டிகள் இடம்பெற்றன. அதில் பயேர்ன் அணிக்கு எதிரான போட்டிகளில் டோர்ட்முண்ட் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு பயேர்ன் அணி லீப்சிக் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமநிலை செய்தது.     

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<