சலாஹ்வின் இரட்டை கோலால் லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி

69

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் வட்போர்ட்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிவர்பூல் அணி மொஹமட் சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியை 2-0 என வெற்றியீட்டியது.

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அபாரமாக பந்தைக் கடத்தி வந்து தொலைவில் இருந்து மேலால் உதைத்து முதல் கோலை புகுத்தினார் சலாஹ். முதல் பாதியில் பெறப்பட்ட இந்த கோலை தொடர்ந்து வட்போர்ட் இரண்டு பாதிகளிலும் இரு கோல் வாய்ப்புகளை தவறவிட்டதோடு லிவர்பூலின் சாடியோ மானே தலையால் முட்டிய கோல் ஓப் சைட்டாக நிராகரிக்கப்பட்டது

எனினும் போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் வைத்து சலாஹ் தனது இரண்டாவது கோலையும் பெற்றார்.

இந்த வெற்றியுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெய்சஸ்டர் சிட்டியை விடவும் 11 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் உள்ளது

மறுபுறம் வட்போர்ட் வெறுமனே 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது

செல்சி எதிர் போர்ன்மௌத்

டான் கொஸ்லிங் கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் சந்தித்த தோல்விகளுக்கு முடிவுகட்டிய போர்ன்மௌத் அணி செல்சிக்கு எதிராக 1-0 என வெற்றியீட்டியது.

போட்டியின் 84 ஆவது நிமிடத்தில் செல்சி கோல்காப்பாளர் கேபா அரிசபலாகாவின் தலைக்கு மேலால் செலுத்தி கொஸ்லிங் அந்த கோலை செலுத்தியபோதும். ஓப் சைட் தொடர்பில் வீடியோ உதவி நடுவரின் காத்திருப்புக்குப் பின்னரே அந்த கோல் உறுதி செய்யப்பட்டது

ஸ்டான்ட்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இந்தப் போட்டியில் செல்சி 60 வீதமான நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செல்சி தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடித்தபோதும் கடந்த நவம்பர் 2 தொடக்கம் ப்ரிமியர் லீக் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த காலப்பிரிவில் அந்த அணி ஐந்து லீக் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.   

பார்சிலோனா எதிர் ரியல் சொசிடாட்

லா லிகாவில் முன்னிலையில் உள்ள பார்சிலோனா நான்காவது இடத்தில் இருக்கும் ரியல் சொசிடாட் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என சமநிலை செய்தது

டிகோ லொரன்டேவுக்கு எதிராக செர்கியோ பஸ்குட்ஸ் செய்த தவறை அடுத்து வழங்கப்பட்ட பெனால்டியைக் கொண்டு மிகேல் ஒயர்சபால் சொசிடாட் சார்பில் கோல் பெற்றார். எனினும் தனது முன்னாள் கழகத்திற்கு எதிராக அன்டொயினே கிரீஸ்மன் பதில்கோல் திருப்பினார்.    

லியொனல் மெஸ்ஸி பரிமாற்றிய பந்தைக் கொண்டு லுவிஸ் சுவாரஸ் தலையால் முட்டி கோல் திருப்பினார்.   

இந்நிலையில் 62 ஆவது நிமிடத்தில் அலக்சாண்டர் இசாக், சொசிடாட் அணி சார்பில் இரண்டாவது கோலை திருப்பி போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்

ஒரு புள்ளி வித்தியாசத்தில் லா லிகா புள்ளிப் பட்டியலில் ரியல் மெட்ரிட்டை பின்தள்ளி பார்சிலோன முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கு இடையிலான எல் கிளாசிகோ போட்டி கேம்ப் நூவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.      ccc c