ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

819

மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத் தொழிலும், தச்சுத் தொழில் செய்வருக்கு மேசன் தொழிலும் செய்ய முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பதால் எந்தவொரு வேலையை கொடுத்தாலும் அவர்களால் அதை செய்ய முடியும். எனவே, மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத் தொழிலை செய்யக் கொடுத்த கதைதான் தற்போது இலங்கை கிரிக்கெட்டுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. ஆனால் இதற்கான உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுப்பது விளையாட்டுத்துறை அமைச்சரின் பொறுப்பாகும் என்பதையும் அடிக்கடி ஞாகப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

தொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்?

இலங்கை – நியூசிலாந்து அணிகள்…

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், அணித் தேர்வு, பதவி மற்றும் சம்பள உயர்வுகள், தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் உள்ளிட்ட பல செய்திகள் அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இதுஇவ்வாறிருக்க, புதிய அரசாங்கத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ, தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளவுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து பகிரங்கமாக ஒருசில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தற்போது அதுதொடர்பில் பலரும் தமது ஆதரவையும், எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.

புதிய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிப்பதற்காக இடைக்கால குழுவொன்றை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த 27ஆம் திகதி .சி.சியின் அதிகாரிகளை சந்தித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சில் அண்மையில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”இடைக்கால நிர்வாக சபையல்லாமல் புதிய தொனிப்பொருளைக் கொண்ட ஒரு நிர்வாகத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளேன். இவையனைத்தையும் செய்வதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆதரவை வழங்கும் என நம்புகிறேன். அவர்களது நிர்வாகக் குழுக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது. அதன்பிறகு இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பேன்” என்றார்.

புதிய விளையாட்டு அமைச்சரின் அவதானம் கிரிக்கெட்டில்

ஜனாதிபதி மாளிகையில் கௌரவ…

இதன்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் முடியும்வரை ஊழல் மோசடிகள் அற்ற, எந்தவிதமான அரசியல் தொடர்புமற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரை இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக சபைக்கு நியமிக்க எண்ணியுள்ளதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

”இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2002 முதல் 2012 வரை இடைக்கால நிர்வாக பையின் கீழ் இயங்கி வந்திருந்தமை அனைவரும் அறிந்த விடயம். அந்த காலப்பகுதியில் தான் மஹேல, சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியை உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றனர். எனவே, எனது பதவியின் கீழ் இடைக்கால கிரிக்கெட் சபையை நியமித்தால் பல எதிர்ப்புகள் எழும்பலாம் என்பதையும் நன்கு அறிந்துள்ளேன். ஆனால், அவற்றுகெல்லாம் முகங்கொடுக்க நான் தயாராக உள்ளேன். இதய சத்தியுடன் கிரிக்கெட் விளையாடின் வளர்ச்சிக்கு சேவையாற்றக்கூடிய ஒரு நபரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும்.

அதேபோல, இடைக்கால நிர்வாக குழுவை நியமித்து இலங்கை கிரிக்கெட்டின் யாப்பை மாற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளேன். இன்று இலங்கையில் 142 சங்கங்கள் உள்ளன. ஆனால் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 18 சங்கங்களும், அவுஸ்திரேலியாவில் 9 சங்கங்களும் மாத்திரமே உள்ளன. எமது நாட்டில் இவ்வாறு சங்கங்கள் அமைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதை முதலில் மாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக பெரும்பாலான சங்கங்கள் கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆனால், கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான பணம் ஒதுக்கப்படுகின்றது. இதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு நான் கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளேன்” என்றார்.  

அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்ட தருணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக் கோரல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதன்போது திலங்க சுமதிபால, ரணதுங்க தரப்பிலிருந்து பலரும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால அரசியல் ரீதியான காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை விளையாட்டுத்துறைக்கு புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரீன் பெர்னாண்டோவினால் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமிப்பது தான் பொருத்தமானது என்ற கருத்து தற்போது இலங்கை கிரிக்கெட்டில் முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.  

இந்த திடீர் அறிவிப்பை கேள்வியுற்ற பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் ரணதுங்க மற்றும் சுமதிபால தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இடைக்கால நிர்வாக சபை  

கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றையும் பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் கீழ் கொண்டுவருவதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் தொடர்பில் .சி.சியின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மூன்று தடவைகள் டுபாய் சென்று .சி.சியின் அவைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடி, தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் தேர்தலில் அர்ஜுன களமிறங்க திலங்க விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்…

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை கடந்த ஜுலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக ஆலோசனைக் குழு, சுற்றுப் போட்டிகள் குழு மற்றும் மத்தியஸ்தர்கள் குழு என 3 குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

எனவே, விளையாட்டுத்துறை அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் தற்போது இயங்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை, இடைக்கால நிர்வாக சபையாக குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

எனவே, புதிய அரசாங்மொன்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அமைச்சுப் பதவிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சூலானந்த சமரநாயக்க நியமிக்கப்பட்டடுள்ளதால், அவர் தான் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் முன்னெடுத்துச் செல்கின்ற அதிகாரியாக செயற்படவுள்ளார்.

இந்தப் பின்னணியில் தான் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பது குறித்து பேசுவதற்காக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் கடந்த 27ஆம் திகதி டுபாய்க்குச் சென்றிருந்தனர்.

>>புகைப்படங்களைப் பார்வையிட<<

.சி.சியின் நிலைப்பாடு

சர்வதேச கிரிக்கெட் பேரவை எப்பேதும் சுயாதீனமாகவும், ஜனநாயகத்துடனும் செயற்படுகின்ற அமைப்பாகும். சர்வதேச விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளுக்கு அமைய அரசியல் தலையீட்டுடன் நியமிக்கப்படுகின்ற இடைக்கால நிர்வாக சபைகள் ஒரு நாட்டின் சுயாதீன நிறுவனமாக தொடர்ந்து இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், முரண்பாடுகளுக்கு மத்தியில் அந்த நிறுவனம் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டு இருக்குமாயின், நாட்டின் நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் முடியும்வரை இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய அமைச்சரின் நியமனத்துக்கு முன்னால், அதாவது கடந்த ஏழு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட அனுமதியுடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இடைக்கால குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இந்திய கிரிக்கெட் சபையில் தற்போது நிலவி வருகின்ற நிர்வாக முரண்பாடுகளினால் அந்நாட்டின் உயர்நீதிமன்ற உத்தரவிக்கு அமைய இடைக்கால நிர்வாக சபையொன்று தான் கடந்த சில மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. எனவே, இந்தியாவிற்கு வழங்கிய இடைக்கால அனுமதியை, இலங்கைக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ரொஷானை நாடும் ஹரீன்

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், .சி.சியின் முன்னாள் போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹானாமவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளதாகவும், அதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இதுதொடர்பில் ரொஷான் மஹானமாக சிங்கள தேசிய நாளிதழொன்றுக்கு கருத்து வெளியிடுகையில், இதை ஒரு நாளில் செய்ய முடியாது. இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வது பற்றி நிறைய யோசிக்க வேண்டும். எனவே இதற்காக நிறைய காலங்கள் தேவை என தெரிவித்திருந்தார்.

இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன்…

அதேபோல, இலங்கை கிரிக்கெட்டின் யாப்பையும், வினையாட்டுத்துறை சட்டத்திட்டங்களையும் மாற்றியமைத்தால் மாத்திரம் இதுதொடர்பில் அவதானம் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்குமாறு குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம உள்ளிட்ட வீர்ர்களிடம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இலங்கை கிரிக்கெட்டின் யாப்பை மாற்றியமைக்காத வரையில் ஒருபோதும் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து செயற்பட முடியாது என அனைவரும் ஒருமித்த தீர்மானமாக அறிவித்திருந்தமை நினைவுகூறத்தக்கது.

இதேவேளை, கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சிதத் வெத்தமுனி, ரொஷான் மஹானாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட அனைத்து வீரர்களுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இலங்கை கிரிக்கெட்டின் சட்டத்தை மாற்றினால், இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து செயற்பட தயார் என அவர்கள் அனைவரும் தெரிவித்திருந்தனர். அதேபோல, நேர்மையான ஒருவருக்கு தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் .சி.சியும் எந்தவொரு எதிர்ப்பினையும் வெளியிடவில்லை என தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாக சபை தேவையா?

இந்த நாட்டில் இடம்பெறுகின்ற பெரும்பாலான தேர்தல்களில் பதவிகளுக்காக போட்டியிடுகின்ற பலர் பல்வேறு மோசடிகள், இலஞ்சம், மேலதிக சலுகைகள், பதவி உயர்வுகள், பண உதவிகள், பொய்யான வாக்குறுதிகள், ஆள் மாறாட்டம் போன்றவற்றை செய்வது வழக்கமான விடயம்தான். இவ்வாறான மோடிகளில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன்னாள் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டணைக்கும் ஆளாகியுள்ளனர். அதேபோல அவ்வாறான விடயங்களைத் தடுப்பதற்காக அரசியல் தலைமைகளினால் இதுவரை சரியான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படவும் இல்லை. ஆகவே, மிகவும் பழைமை மிக்க இலங்கை கிரிக்கெட் யாப்பையும், அதன் தேர்தல் முறையையும் மாற்றம் செய்யாத வரையில் நேர்மையானவர்கள் உயர் பதவிகளுக்கு வருவது வெறும் பகல் கனவாகவே இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2018 மீள் பார்வை

கடந்து சென்றுள்ள 2018ஆம் ஆண்டானது…

எனவே, தற்போதைய புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இவ்வாறான காரணங்களையெல்லாம் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முன்வைத்து இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறுவதை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்து இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபுறத்தில், இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் முறையை மாற்றி, விளையாட்டு சங்கங்களின் எண்ணிக்கையை குறைத்து இனிவரும் காலங்களிலும் மோசடிகள் செய்யாத நேர்மையானவர்களை இலங்கை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகும்.

எனவே, புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட்டுக்காக முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைககள் குறித்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மாத்திரமல்லாது, முழு கிரிக்கெட் உலகமுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோல, தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், விளையாட்டில் அரசியலை நுழைக்காமல் இருப்பதே எனது முதற்கட்ட நிலைப்பாடாகும். இவ்வாறான விடயங்களிலிருந்து நாம் முழுமையாக விடுபட்டிருக்க வேண்டும். இதுவே, எமக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்தது.  விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதும், அதனை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதுமே எனது நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

எனவே, இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற, கிரிக்கெட்டை முற்றுமுழுதாக அரசியல் தலையீட்டிலிருந்து மீட்டு, இலங்கை கிரிக்கெட்டை உலகளில் பேசுகின்ற ஒரு நாடாக மாற்றுவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<