ஆசிய விளையாட்டு விழாவில் கயந்திகா, இந்துனில் முன்னேற்றம்

200

ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான நிலானி ரத்னாயக்க, 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் இலங்கையின் மூன்றாவது பதக்க வாய்ப்பும் நிறைவேறாமல் போனது.

45 ஆசிய நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் ஒன்பதாம் நாளுக்கான போட்டிகள் இன்றும் (27) நடைபெற்றதுடன், இதில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாகவும், இலங்கைக்கு ஒருசில பதக்கங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற மெய்வல்லுனர் போட்டிகள் மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றன.

ஆசிய விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தை பெறும் வாய்ப்பை இழந்த இலங்கை

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டி இன்று (27) இரவு நடைபெற்றது.

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் ஆரம்பமாகிய இப்போட்டியில் நிலானி ரத்னாயக்க ஆரம்பம் முதல் முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து 5 சுற்றுக்கள் வரை சிறப்பாக ஓடி முன்னிலை பெற்றிருந்த நிலானிக்கு பஹ்ரெய்ன் மற்றும் இந்திய வீராங்கனைகள் பலத்த சவால் கொடுத்திருந்ததை காணமுடிந்தது.

இதன் காரணமாக போட்டியின் உத்வேகத்தை தொடர்ந்து தக்கவைப்பதில் பின்னடைவை சந்தித்த நிலானி, இறுதிவரை போராடினாலும் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் தோல்வியைத் தழுவினார்.

இதன்படி, 09 நிமிடம் 36.52 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த பஹ்ரெய்ன் வீராங்கனை யாவி வின்பிரெட், தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய வீராங்கனை சுதா சிங் (09 நிமி. 40.03 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாமின் தீ நிகுயேன் (09 நிமி. 43.83 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவிய இலங்கையின் நிலானி ரத்னாயக்க, 09 நிமிடம் 54.65 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த நிலானி ரத்னாயக்க, குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 46.76 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இது இவ்வாறிருக்க, முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற முன்னோடி மெய்வல்லுனர் போட்டியில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற நிலானி ரத்னாயக்கவுக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் தனது சொந்த சாதனையாவது முறியடிக்க முடியாமல் போனதுடன், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமொன்றையாவது பெற்றுக்கொள்ள முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.

800 மீற்றரில் இந்துனில், கயந்திகா

18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்களான இந்துனில் ஹேரத் மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகியோர் தகுதிபெற்றனர்.

நிரல்படுத்தல் போட்டியில் மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கை கரப்பந்து அணி

இதன்படி, நாளை (28) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் இந்த இரண்டு வீரர்களும் இலங்கைக்காக குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் மூன்றாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியனான கயந்திகா அபேரத்ன, போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 06.31 செக்கன்களில் ஓடி முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மூன்று சுற்றுக்களைக் கொண்ட தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீராங்கனைகளில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கயந்திகா அபேரத்னவு இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றார்.

இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்துனில் ஹேரத், இன்று இரவு (27) நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.

இந்துனிலுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இந்தியாவின் ஜின்சன் ஜொன்சன் (ஒரு நிமிடம் 47.39 செக்.) முதலிடத்தையும், கட்டாரின் ஹைரனா ஜமால் (ஒரு நிமிடம் 47.45 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு கடந்த ஏழு மாதங்களாக கென்யாவில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றுவந்த இந்துனில் ஹேரத், கடந்த ஜுன் மாதம் கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்கான சுமார் 25 வருடகால இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் விட்டு அழுத நிமாலி

பெண்களுக்கான 800 மீற்றரில் தேசிய சம்பியனும், ஆசிய மெய்வல்லுனர் சம்பியனுமான நிமாலி லியனாரச்சி, இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

பெண்களுக்கான 800 மீற்றர் முதலாவது தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில்  நிமாலி லியனாரச்சி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.

இந்தியாவை வீழ்த்தி கரம் உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற இலங்கை

குறித்த போட்டியில் ஏழாவது சுவட்டில் ஓடிய நிமாலிக்கு பஹ்ரெய்ன் மற்றும் ஜப்பான் வீராங்கனைகள் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர். எனினும், இறுதி 100 மீற்றரில் பின்னடைவை சந்தித்த நிமாலி, 2 நிமிடங்கள் 06.07 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, ஒட்டுமொத்த நிலையில் ஏழாவது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த நிமாலி லியனாரச்சிக்கு துரதிஷ்டவசமாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எது எவ்வாறாயினும், குறித்த போட்டிப் பிரிவில் தமது தனிப்பட்ட அதிசிறந்த காலத்தையோ அல்லது இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பதிவுசெய்த காலத்தையோ நிமாலிக்கு முறியடிக்க முடியாமல் போனமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நிமாலி, நான் கலந்துகொண்ட சுற்றில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு போட்டியைக் கொடுத்து வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது உண்மையில் கவலையளிக்கின்றது. எனினும், அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற சர்வதேசப் போட்டிகளிலும் என்னுடைய பயிற்றுவிப்பாளர் இன்றியே தான் நாட்டுக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவிலும் எனது பயிற்றுவிப்பாளர் இருந்தால் ஆலோசனைகளைப் பெற்றிருப்பேன். அவ்வாறு நடக்காத காரணத்தால் தான் நான் தோல்வியைத் தழுவினேன் என கண்ணீர் மல்க அழுது பதிலளித்தார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<