ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் மிகப் பெரிய பதக்க எதிர்பார்ப்புகளாக அமைந்த இந்துனில் ஹேரத் ஆண்களுக்கான 800 மீற்றரில் 8 ஆவது இடத்தையும், கயந்திகா அபேரத்ன பெண்களுக்கான 800 மீற்றரில் 6 ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

இதேநேரம், பெண்களுக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க, 6 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

ஆசிய விளையாட்டு விழாவில் கயந்திகா, இந்துனில் முன்னேற்றம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவரும் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

போட்டியின் 10 ஆவது நாளான இன்று நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்துனில் ஹேரத் மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகியோர் பங்குற்றியிருந்தனர்.

இலங்கை நேரப்படி இன்று மாலை 6.10 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இந்துனில் ஹேரத், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 51.36 செக்கன்களில் ஓடி முடித்து எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற தகுதிச் சுற்றில் சிறப்பாக ஓடி அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்த (ஒரு நிமிடம் 47.54 செக்.) முதல் மூன்று வீரர்களுக்குள் இடம்பிடித்த இந்துனில் ஹேரத் இறுதிப் போட்டியில் பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, இறுதிப் போட்டியில் கட்டார், இந்தியா, பஹ்ரைன், ஜப்பான் ஆகிய வீரர்களுடன் இந்துனில் ஹேரத் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக்கொடுக்க மிகவும் போராடினார்.

எனினும், இப்போட்டியில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த இந்திய வீரர்களான மன்ஜித் சிங் மற்றும் ஜொன்சன் ஜின்சன் ஜோடி, இறுதி 50 மீற்றரில் ஏனைய வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, போட்டியை ஒரு நிமிடமும் 46.15 செக்கன்களில் கடந்த மன்ஜித் சிங் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். மற்றுமொரு இந்திய வீரரான மொஹமட் அனாஸ் ஒரு நிமிடமும் 46.35 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், கட்டாரின் அபூபக்கர் அப்தல்லாஹ் ஒரு நிமிடமும் 46.38 செக்கன்களில் போட்டியைக் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினர்.

ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் திறன்களை கையாளும் பாகிஸ்தான் பேஸ்போல் அணி

மத்திய தூரப் போட்டிகளில் தேசிய சம்பியனான இந்துனில் ஹேரத், ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு கடந்த ஏழு மாதங்களாக கென்யாவில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றுவந்தார். இதன் பிரதிபலனாக கடந்த ஜுன் மாதம் கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்கான சுமார் 25 வருடகால இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 47.13 செக்கன்களில் ஓடி முடித்தே இந்த சாதனையை இந்துனில் ஹேரத் நிலைநாட்டினார்.  

இந்த நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்துக்கு இந்துனில் ஹேரத் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் எதிர்பார்த்ததைவிட என்னால் சிறப்பாக ஓட முடியாமல் போனது. அதுதான் போட்டியில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஓடியவாறு இன்றும் ஓடியிருந்தால் எனக்கு மூன்றாவது அல்லது நான்காவது இடத்தையாவது பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. அதிலும் குறிப்பாக, கடைசி 100 மீற்றர் தூரத்தை ஓடுவதற்கு நான் கடுமையாக முயற்சி செய்தேன். ஆனால் அதை எனக்கு செய்ய முடியாமல் போனது. எது எவ்வாறாயினும், நான் ஆசியாவில் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டேன். இதே உத்வேகத்துடன் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இறுதிப் போட்டிவரை செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.

இதேநேரம், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன 2 நிமிடங்கள் 05.50 செக்கன்களில் இலக்கை அடைந்து ஐந்தாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இப்போட்டியில், சீன வீராங்கனை சுன்யூ வேங் (2 நிமிடம் 01.08 செக்.) இவ்வருடத்துக்கான சிறந்த காலத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தான் வீராங்கனை நாகரிடா முகசெவா வெள்ளிப் பதக்கத்தையும் (2 நிமிடம் 02.40 செக்.) பஹ்ரெய்னின் மனால் எல்பஹ்ரை (2 நிமிடம் 02.69 செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

முன்னதாக நேற்று (27) காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் மூன்றாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட கயந்திகா அபேரத்ன, போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 06.31 செக்கன்களில் ஓடி முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீராங்கனைகளில் 6 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்துக்கு கயந்திகா அபேரத்ன கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், என்னுடைய தனிப்பட்ட சிறந்த காலப்பெறுமதியையாவது முறியடிக்க முடியாமல் போனது கவலையளிக்கின்றது. கடந்த சில தினங்களாக எனக்கு தடுமல் மற்றும் சலி ஏற்பட்டிருந்தது. அதனால்தான் என்னால் எதிர்பார்த்ததைவிட நன்றாக ஓட முடியாமல் போனது. எனினும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதைவிட சிறந்த காலத்தைப் பதிவுசெய்து ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பேன்” என தெரிவித்தார்.

ருமேஷிகாவுக்கு 6 ஆவது இடம்

நேற்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க, போட்டியை 24.05 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 6 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

இதன்படி, 16 வீராங்கனைகள் பங்குபற்றிய அரையிறுதிப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில், 10 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.

எனினும், முன்னதாக நேற்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றில் பங்குகொண்ட ருமேஷிகா, போட்டியை 23.79 செக்கன்களில் நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்கு கொண்ட இந்திய வீராங்கனை டுட்டீ சந்த்,  (24.27 செக்.), முதலிடத்தையும், பஹ்ரெய்னின் எடிடியாங் ஒடியாங் (24.73 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் டுட்டீ சந்த், பெண்களுக்கான 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், எடிடியாங் ஒடியாங் தங்கப் பதக்கத்தினையும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பு

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் கடைசி பதக்க எதிர்பார்ப்பாக அமைந்துள்ள ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்தின் தகுதிச் சுற்றுப் போட்டி நாளை மாலை (6.45 மணிக்கு) நடைபெறவுள்ளது. இதில் தகுதிபெற்றால் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலப்பு அஞ்சலோட்டத்தில் சாதனை

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் முதl  தடவையாக அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டம் இன்று இரவு நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. இதில், பஹ்ரைன் முதல் இடம் பிடித்ததோடு, 3:11.89 செக்கன்களில் ஓடி உலக சாதனையும் நிகழ்த்தியது. இதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியா 3:15.71 செக்கன்களில் போட்டி தூரத்தை அடைந்தது. மூன்றாம் இடத்தை கஜகஸ்தான் அணி பிடித்தது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<