ஊக்க மருந்து சர்ச்சை: இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு போட்டித் தடை

250

தடை செய்யப்பட்ட அளவு ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத காலம் விளையாட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷா கடந்த வருடம் (2018) ஒக்டோபரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானர். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த (134 ஓட்டங்கள்) இந்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்த பிரித்வி ஷா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு அணியில் இடம்பெறவில்லை. 

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் ராஜகுமாரனுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற ஆசிய ஆணழகன்…

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயதான பிரித்வி ஷாவுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் சையத் முஸ்டாக் அலி டி-20 போட்டியின் போது, அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் அவர் தடைசெய்யப்பட்ட ‘டெர்புடாலின்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்ட போது கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாக பிரித்வி ஷா அளித்த விளக்கத்தை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டதால் அவர் பெரிய தண்டனையில் இருந்து தப்பினார். 

இதுஇவ்வாறிருக்க, பிரித்வி ஷாவுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட 8 மாதம் போட்டித் தடை விதிக்க இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அவரது இடைநீக்கம் காலம் கடந்த மார்ச் 16ஆம் திகதி தொடங்கி நவம்பர் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள பிரித்வி, ஒரு சதத்துடன் 237 ஓட்டங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் பிரித்வி ஷா கூறுகையில், ”இந்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் காயத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் 8 மாத போட்டித் தடை என்னை உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக எந்த ஒரு மருந்தை உட்கொண்டாலும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன். 

மற்ற விளையாட்டு பிரபலங்களும் எனது தவறை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. இந்திய அணிக்காகவும், முதல்தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும் விளையாடுவதை தவிர வேறு எதுவும் எனக்கு பெருமை கிடையாது. தடை முடிந்து வலுவான வீரராக மீண்டு வருவேன்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்வி ஷாவை தவிர முதல்தர கிரிக்கெட் வீரர்கள் அக்ஷய் துலர்வார் (விதர்பா), திவ்யா காஜ்ராஜ் (ராஜஸ்தான்) ஆகியோரும் ஊக்கமருந்து விதிமுறையை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு முறையே 8 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<