ரோஹித் ஷர்மாவின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

203
Image Courtesy - BCCI Twitter

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என கைப்பற்றியுள்ளது.

நேற்று (6) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.  

>> முதல் டி-20 இலும் இந்தியாவிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஷிகர் தவான் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பான்ட் வெறும் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 8 பௌண்டரிகள் 7 சிக்ஸர்கள் அடங்கலாக 61 பந்துகளில் 111 ஓட்டங்களை பெற்று சர்வதேச டி20 போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார்.

மேலும் இந்த சதத்தின் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் நான்கு சதங்கள் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். மேற்கிந்திய தீவுகளின் இரண்டு பந்து வீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியுற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது டி20 போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே டி20 தொடரை தக்க வைப்பதாயின் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் 196 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் சிம்ரோன் ஹிட்மயர்  ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவ்வணியின் வெற்றிக் கனவு கலைந்தது என்றால் அது மிகையாகாது.

தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய ஏனைய வீரர்களும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்காமல் குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 71 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

>> தொடர் முடிவுக்காக இறுதிப் போட்டியை எதிர்பார்க்கும் இலங்கை – பங்களாதேஷ் இளம் அணிகள்

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டத்தில் டர்ரன் பிராவோ அதிக பட்சமாக 23 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹமட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.  போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி டி20 போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 195/2 (20) – ரோஹித் ஷர்மா 111*, ஷிகர் தவான் 43, குருநால் பாண்டியா 26*, பேஹ்பியன் அலென் 33/1

மேற்கிந்திய தீவுகள் – 124/9 (20) – ட்ர்ரன் பிராவோ 23, கீமோ போல் 20, புவனேஷ்வர் குமார் 12/2, ஜஸ்ப்ரிட் பும்ரா 20/2

முடிவு – இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<