முதல் டி-20 இலும் இந்தியாவிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

183

குல்திப் யாதவ்வின் சுழலுக்கு முன் தடுமாற்றம் கண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் மீண்டும் ஒருமுறை துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியது.    

மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் …..

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களையே பெற்றது. இது அந்த அணி இந்தியாவுக்கு எதிராக டி-20 போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாக இருந்தது.  

தடுமாற்றத்துடன் பதிலெடுத்தாடிய இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற அந்த அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 110 ஓட்டங்களை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.     

எனினும் கன்னிப் போட்டியில் களமிறங்கிய ஒஷேன் தோமஸ் 16 ஓட்டங்களிலேயே இந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தார். அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை ஆறு ஓட்டத்துடன் ஆட்டமிழக்கச் செய்து டி-20 சர்வதேச போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பெற்ற தோமஸ், ஷிகர் தவானை 3 ஓட்டங்களுடன் போல்ட் செய்தார்.

அணித்தலைவர் கார்லொஸ் பிரத்வெயிட் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

எனினும், கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே ஐந்தாவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இந்திய அணியை வெற்றி இலக்கை நெருங்கச் செய்தனர். மனிஷ் பாண்டே 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அடுத்து வந்து தனது கன்னிப் போட்டியில் ஆடிய குருனல் பாண்டியா ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றதோடு இந்திய அணியின் வெற்றி ஓட்டத்தையும் எடுத்தார். பந்துவீச்சில் அவர் விக்கெட் ஒன்றையும் வீழ்த்தினார்.

நியுஸிலாந்திற்கு எதிராக 2 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ….

எனினும் யாதவ் மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு முழுமையாக தலையிடி கொடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓவர்களுக்குள்ளேயே தனது முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது தனது இடதுகை சுழற்பந்து வீச்சு மூலம் அதிரடி வீரர் கிரோன் பொல்லார்டை 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமே முதல் சர்வதேச விக்கெட்டை பாண்டியா வீழ்த்தினார்.    

இந்நிலையில் குல்தீப் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முக்கிய விக்கெட்டாக பிரெத்வெயிட்டை 4 ஓட்டங்களுடன் சாய்த்தார். கன்னிப் போட்டியில் களமிறங்கிய கலீல் அஹமட் மேற்கிந்திய தீவுகளுக்காக முதல் டி-20 போட்டியில் ஆடிய பபியன் அலனின் விக்கெட்டை வீழ்த்தினார். அலன் 20 பந்துகளில் பெற்ற 27 ஓட்டங்களுமே அதிகமாகும்.    

மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களிலும் இதேபோன்று துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் கண்டது. அந்த அணி டெஸ்ட் தொடரை 2-0 என இழந்ததோடு கடைசி ஒருநாள் போட்டியில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மிகக் குறைந்த ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி லக்னோவில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 109/8 (20) – பபியன் அலன் 27, கீமோ போல் 15*, குல்தீப் யாதவ் 3/13

இந்தியா – 110/5 (17.5) – தினேஷ் கார்திக் 31*, குருனல் பாண்டியா 21*, கார்லொஸ் பிரெத்வெயிட் 2/11, ஒஷேன் தோமஸ் 2/21

முடிவு – இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி