ரோகித் ஷர்மா மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணிக்கு அபார வெற்றி

221

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி இன்று (21) குவாஹட்டியில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இப்போட்டியின் விஷேட அம்சமாக இந்திய அணி சார்பாக ரிஷாஃப் பான்ட் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரராகவும் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சந்திரபோல் ஹேம்ராஜ் மற்றும் ஒசேன் தோமஸ் ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

திசரவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் – தசுன் சானக

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சிம்ரோன் ஹிட்மயரின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய சிம்ரோன் ஹிட்மயர் 6 சிக்சர்கள் 6 பௌண்டரிகள் அடங்களாக 78 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரைத் தவிர கிரண் பவல் 51 ஓட்டங்கள் ஜேசன் ஹோல்டர் 38 ஓட்டங்கள் ஷாய் ஹோப் 32 ஓட்டங்கள் என அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்திருந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் யுஸ்வேந்திரா சஹால் 3 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 323 ஓட்டங்கள் என்ற பாரிய வெற்றி இலக்கு உலகின் சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ள இந்திய அணியினால் தவிடுபொடியாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. இந்திய அணி 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் வெறும் 4 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ரோகித் ஷர்மா மற்றும் அணித் தலைவர் விராட் கோஹ்லி ஜோடியின் அனுபவம், அதிரடி மற்றும் நிதானமான துடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக தமக்கிடையே 246 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 36 ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோஹ்லி 140 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ரோகித் ஷர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகிய இருவருக்குமிடையே பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக பெறப்பட்ட 70 ஓட்டங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் ஷர்மா 152 ஓட்டங்களை பெற்றிருந்தார். இறுதியில் இந்திய அணி 42.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 326 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்தியாவிடம் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு மீண்டும் தோல்வி

இன்றைய போட்டியின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 322/8 (50) – சிம்ரோன் ஹிட்மயர் 106, கிரண் பவல் 51, ஜேசன் ஹோல்டர் 38, யுஸ்வேந்திரா சஹால் 41/3, ரவீந்திர ஜடேஜா 66/2, மொஹமட் ஷமி 81/2

இந்தியா – 326/2 (42.1) – ரோகித் ஷர்மா 152*, விராட் கோஹ்லி 140, அம்பதி ராயுடு 22*, பிசூ 72/1, தோமஸ் 83/1

முடிவு – இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<