இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகளின் நேர மாற்றம்

2970

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் சீரற்ற காலநிலை மற்றும் அதிக குளிர் ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாற்றியமைக்கவுள்ளதாக BCCI இன்று (19) அறிவித்தது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தரம்சாலாவிலும், 2ஆவது ஒரு நாள் போட்டி டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மொஹாலியிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டிசம்பர் மாதம் 17ஆம் திகதி விசாகபட்டினத்திலும் நடைபெறவுள்ளது.

துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா

3 போட்டிகளும் பகல்-இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் வகையில் முன்னதாகவே அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் அதிக அளவில் குளிரும், பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு தரம்சாலா மற்றும் மொஹாலியில் நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டிகள் ஆரம்பமாகும் நேரத்தை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்துள்ளது.

இதன்படி, ஆரம்பத்தில் பகல் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது காலை 11.30 மணியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால், இரவு 7.30 மணியளவில் போட்டி முடிந்துவிடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3ஆவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி ஏற்கனவே அறிவித்ததன் படி பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த விடயம் தொடர்பில் இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்துடன் BCCI ஆலோசனை நடத்தியதுடன், அப்போது அவ்விரண்டு கிரிக்கெட் சங்கங்களும் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது.