இந்தியாவுடனான ஒருநாள் தொடரைத் தக்க வைத்துக் கொண்ட நியூசிலாந்து அணி

198
Ind V Nz

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 4ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தீர்க்கமான இந்த போட்டியில்,தொடரை தக்க வைத்துகொள்வதற்காக வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மார்டின் கப்டில் மற்றும் டொம் லாத்தம் 93 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக்கொடுத்தனர்.

மார்டின் கப்டில் 29 ஓட்டங்களைப் பெற்றிந்த வேளை அமித் மிஷ்ராவுக்கு கிடைக்கப்பெற்ற பிடியை கைவிட்டதால், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கப்டில் 84 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசி அரைச்சதம் கடந்தார்.

இறுதியில், 5௦ ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மார்டின் கப்டில் 12 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஷ்ரா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாதவ், குல்கர்னி, பாண்டியா மற்றும் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றிக்கொண்டனர்.

260 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி ஆரம்ப ஓவர்களில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் 32.2, 32.3 ஓவர்களில் கேதர் ஜாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்சியாகக் கைப்பற்றியும் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதே நேரத்தில் வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷாம் அஜிங்க்யா ரஹனே மற்றும் MS தோனி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளினார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு எந்தவிதமான வாய்ப்புகளையும் வழங்கவில்லை.

குல்கர்னி மற்றும் உமேஷ் யாதவ் கடைசி விக்கெட்டுக்காக 34 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றபோதும், 48.4 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை உமேஷ் யாதவ் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

போட்டியி சுருக்கம் ;

நியூசிலாந்து – 260/7(50) 

மார்டின் கப்டில் 72, கேன் வில்லியம்சன் 41, டொம் லாத்தம் 39, ரொஸ் டெய்லர் 35

அமித் மிஷ்ரா 2/41

இந்தியா – 241(48.4)

அஜிங்க்யா ரஹனே 57, விராத் கொஹ்லி 45, அக்ஸர் படேல் 38, தவால் குல்கர்னி 25* டிம் சௌதி 3/40, ஜேம்ஸ் நீஷாம் 2/38 

போட்டி முடிவு – 19 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி

போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் தெரிவு செய்யப்பட்டார்.

ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பகல் இரவுப் போட்டியாக விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.