இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியில் ஆறு ஓட்டங்களால் வெற்றி பெற்று 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 5௦ ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முதல் ஓவரிலேயே, உமேஷ் யாதவ் வீசிய பந்தில் மாட்டின் கப்டில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இக்கட்டான சூழ்நிலையில் தொடர்ந்து துடுப்பாட களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 43வது ஓவர் வரை தாக்குப்பிடித்து 14 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக 128 பந்துகளுக்கு 118 ஓட்டங்களை விளாசினார்.

இரண்டாம் விக்கெட்டுக்காக 12௦ ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளை, அவருடன் இணைந்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டொம் லேத்தம் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ரொஸ் டெய்லர் மற்றும் கோரி ஆண்டர்சன் தலா 21 ஓட்டங்களைப் பெற்ற போதும் ஏனையோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

242 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 6 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

பரபரப்பான இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக தோல்வியைத் தழுவியது. MS தோனி 39 ஓட்டங்களையும், கேதர் ஜாதவ் 41 ஓட்டங்களையும் மற்றும் ஹர்திக் பாண்டியா 36 ஓட்டங்களையும் பெற, ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதன் முலம் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த சுற்றுதொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து அணி : 242/9 (50) கேன் வில்லியம்சன் 118, டொம் லாதம் 46, ஜஸ்ப்ரிட் பும்ரா 3/35, அமித் மிஸ்ரா 3/60

இந்திய அணி : 236 (49.3) கேதர் ஜாதவ் 41, MS தோனி 39, ஹர்திக் பாண்டியா 36, டிம் சவுத்தி 3/52, ட்ரென்ட் போல்ட் 2/25

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி மொகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு 

Crawler