அன்யா ஷ்ரப்சோலின் அபார பந்துவீச்சின் மூலம் லோட்ஸில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வெற்றியைப் பெற்று கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  அந்த அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இதுவே இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும். மத்திய வரிசையில் வந்த நடாலியா சைவர் 68 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களை பெற்றார்.

அவர் விக்கெட் காப்பாளர் சாரா டெய்லருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு பெற்ற 83 ஓட்ட இணைப்பாட்டமே அணிக்கு வலுச் சேர்த்தது. டெய்லர் 63 பந்துகளில் எந்த ஒரு பௌண்டரி, சிக்ஸரும் இன்றி 45 ஓட்டங்களை பெற்றார்.

ஆறுதல் வெற்றியுடன் மகளிர் உலக கிண்ணத்திலிருந்து விடைபெறும் இலங்கை

மகளிர் உலக கிண்ணத்திற்கான குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும்…

இந்திய அணிக்கு 34 வயது வீராங்கனை ஜுலான் கொஸ்வாமி தனது 10 ஓவர்களுக்கும் 23 ஓட்டங்களை  மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.                 

பதிலெடுத்தாடிய இந்திய அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியும் 191 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி உறுதியான நிலையிலேயே இருந்தது. ஆனால் 26,000க்கும் அதிகமான பார்வையாளர் முன் ஷ்ரப்சோல் நிகழ்த்திய சாகசம் போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றியது.  

புதிலெடுத்தாட களமிறங்கிய இந்திய மகளிர் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டது. இங்கிலாந்துடனான தொடரின் ஆரம்ப போட்டியில் 90 ஓட்டங்கள் பெற்ற ஸ்மிரிதி மன்தனா டக் அவுட் ஆனார்.

அணித் தலைவியான மிதாலி ராஜ் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  2005ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய அணிக்காக விளையாடி வரும் 34 வயதான  அவருக்கு இது கடைசி உலகக் கிண்ணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

எனினும் அவரது வெளியேற்றத்திற்குப் பின்னர் களமிறங்கிய அதிரடி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் ஒருமுறை அணிக்கு கைகொடுத்தார். கவுர் அரையிறுதியில் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களை பெற்றதே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற காரணமானது.

கவுர் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலெக்ஸ் ஹார்ட்லிக்கு இரண்டு சிக்ஸர்களை விளாசினார். மறு பக்கம் ரவுத் 78 பந்துகளில் அரைச் சதம் எட்டினார். கவுர் 80 பந்துகளில் அரைச் சதத்தை அடைந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.

86 ஓட்டங்களுடன் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த இந்திய அணியின் ஆரம்ப வீராங்கனை பூனம் ரவுத்தை lbw முறையில் அட்டமிழக்கச் செய்தார் ஷ்ரப்சோல். ஹார்ட்லியின் பந்துக்கு கவுர் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய மகளிர் அணி தடுமாற்றம் காண ஆரம்பித்தது. இந்திய அணியின் பின் வரிசை வீராங்கனைகள் எவரும் கடைசி நேரத்தில் கைகொடுக்கவில்லை.

உள்ளூர் சுழல் ஜாம்பவானுடன் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் இலங்கை டெஸ்ட் அணி

காலியில் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும்…

அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷரப்சோல் 19 பந்துகளுக்குள் 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லும் இந்திய மகளிர் அணியின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. இதே லோட்ஸ் மைதானத்தில் 1983 ஆம் ஆண்டு இந்திய ஆண்கள் அணி தனது முதல் உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில் அவ்வாறான ஒரு வாய்ப்பு மகளிர் அணிக்கு தவறிப்போனது.  

இதன்போது, இந்திய அணி போட்டியில் இன்னும் எட்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 219  ஓட்டங்களுக்கு சுருண்டதால் இங்கிலாந்து மகளிர் அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.       

போட்டியை திசைதிருப்பிய ஷ்ரப்சோல் 9.4 ஓவர்களில் 46 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வீராங்கனை ஒருவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சந்தர்ப்பமாக இருந்தது.

இந்த எதிர்பாராத வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதோடு சொந்த மண்ணில் கிண்ணத்தை வெல்வது மூன்றாவது தடவையாகும்.  இந்த உலகக் கிண்ணத்தில் குழு நிலை போட்டியில் இந்தியாவுடன் தோற்றதற்கு பதிலடியாகவும் இங்கிலாந்துக்கு இந்த வெற்றி அமைந்தது.

ஆட்டத்தை இங்கிலாந்து சார்பில் திசைதிருப்பிய அன்யா ஷ்ரப்சோல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகியாக தெரிவானதோடு, டொம்மி பியுமொன்ட் தொடர் நாயகி விருதைக் கைப்பற்றினார். பியுமொண்ட் இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மொத்தம் 410 ஓட்டங்களை பெற்றார்.  

>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<