சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம்

598
Image Courtesy- PTV

2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று (9) இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) நிர்வாக கூட்டத்தினை அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் பாரிய விளையாட்டுத் தொடர் ஒன்று நடைபெறும் போது அத்தொடருக்காக விஷேட வரிவிலக்கு வழங்கப்படும். இப்படியான சலுகை ஒன்றை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்திருந்தது. எனினும், இதுவரையில் அப்படியான ஒரு வரிவிலக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த காரணத்துக்காக இந்தியா போன்ற நேரவலயத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை இத்தொடரை நடாத்த தற்போது ஐ.சி.சி தேடுகின்ற அதேவேளை, இந்திய அரசாங்கத்துடனும் தொடர்ந்து குறித்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில்…

இந்த விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் “ஏற்கனவே இந்தியாவில் நடாத்தப்பட்டிருந்த ஐ.சி.சி இன் கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய அரசு வரிவிலக்கு வழங்காத காரணத்தினால் ஐ.சி.சி பாதிப்படைந்திருந்ததாகவும், பெரிய விளையாட்டுத் தொடர் ஒன்றுக்கான இந்த வரிவிலக்கைப் பெற சர்வதேச கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் எடுத்திருந்த முயற்சிகள் வீணாகியிருந்தது“ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நிர்வாகக் குழுவின் சம்மதத்தின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஆதரவோடு தொடர்ந்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. இதே நேரத்தில் ஐ.சி.சி இன் முகாமைத்துவக் குழு, இந்தியாவின் நேரவலயத்தைக் கொண்ட வேறு ஒரு நாட்டையும் 2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடாத்துவதற்காக தேடி வருகின்றது.

அத்தோடு இந்த கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஐ.சி.சி இன் முழு அங்கத்துவ நாடுகளாக மாறியிருந்த அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு இனி வரும் காலங்களில் கொடுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

புதிய மாதிரியின்படி, அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிக நிதியைப் பெறுவதை பார்க்க முடியும். இப்போதைய கணிப்புக்களின்படி எட்டு வருட வர்த்தக உடன்படிக்கைகளில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஒவ்வொரு நாடும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி ரூபா.  450 கோடி) பெற்றுக் கொள்ளும் என ஐ.சி.சி இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்னும் இக்கூட்டத்தில், பெப்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான இந்திரா நூயி ஐ.சி.சி. இன் முதல் பெண் சுயாதீன இயக்குநராக மாறுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது..