முதலாவது தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முன்னிலை

243
SAAC - India Win 1st Water polo

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளின், 5 போட்டிகளைக் கொண்ட வோட்டர் போலோ போட்டியின் முதல் போட்டியில் 10-8 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இலங்கை நீர்சார் விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, முதல் முறையாக இடம்பெறும் இந்த தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று(18) ஆரம்பித்தன.

அந்த வகையில், முதலாவது வோட்டர் போலோ கண்காட்சிப் போட்டி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இலங்கை அணியை, புனித தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆஷான் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பாசித் யாகூப் முலம் பெற்றுக் கொடுத்தாலும், இந்திய அணி பதிலடியாக சாரங் வைத்தியா முலம் கோல் ஒன்றை போட்டுக்கொண்டது.

இலங்கை அணியின் நட்சத்திர வீரரான சசித ஜயதிலக கோல் போட முடியாதவாறு இந்திய அணியினால் தடுக்கப்பட்டார். எனினும் தடைகளைத் தாண்டி முதல் காலிறுதி நேரத்திற்கு சற்று முன்னர் கோலொன்று போட்டு இலங்கை அணியை 2-1 என முன்னிலை பெறச்செய்தார்.

இரண்டாவது காலிறுதியில் ஆட்ட நேரத்தில், சம பலம் கொண்ட இரு அணிகளும் இரண்டு பக்கமும் கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தன. சசித ஜயதிலக இரண்டு கோல்களையும் சாக்கிய குணதிலக ஒரு கோலையும் இலங்கை அணி சார்பாகப் போட்டனர்.

இந்திய அணி சார்பாக பதிலடியாக, சிவம் கஜே மற்றும் கார்த்திக் சந்திரா ஆகியோர் தலா ஒரு கோலினைப் பெற்றுக் கொண்டனர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இலங்கை அணி முன்றாவது காலிறுதி ஆட்ட நேரம் வரை இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்த போதும், நான்காவது காலிறுதி ஆட்ட நேரத்தில் இந்திய அணி அடுத்தடுத்து நான்கு கோல்களை அடித்தது. பதிலாடியாக இலங்கை அணியால் ஒரு பெனால்டி கோலை மட்டுமே போட முடிந்தது. அந்த வகையில், இரட்டை இலக்கத்தை அடைந்த இந்திய அணி10-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முழு நேரம் : இந்தியா 10-8 இலங்கை  

கோல் போட்டவர்கள்

இந்தியா – போகேஷ் குல்டே, சிபின் வர்கீஸ் (2), சாரங் வைத்யா, கார்த்திக் சந்திரா (3), சிவம் கஜே, பிரகாஷ் எஸ் (2)

இலங்கை – சச்சித ஜயதிலக்க (4), பாசித் யாகூப் (2), சாக்ய குணதிலக்க கிசல் அசலாராச்சி