இலங்கை கால்பந்தில் ஒரு காலம் அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வந்த மன்னார் பிரதேசத்தின் கால்பந்து லீக் தற்போது முடங்கிக் கிடப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலைமையானது, அப்பிரதேச கால்பந்தின் எதிர்காலம் குறித்து ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக திறமையான கால்பந்து வீரர்களையும், சிறந்த அணிகளையும் கொண்டிருந்த ஒரு பிரதேசமாக மன்னார் மாவட்டம் இருந்தது. கடந்த 3 தசாப்த யுத்தத்தினால் வடக்கின் பல பகுதிகளிலும் விளையாட்டு, குறிப்பாக கால்பந்து சில பாதிப்புக்களை ஏற்படுத்திய போதும், மன்னாரின் கால்பந்து சிறந்த நிலையில் காணப்பட்டது.

அதற்கு சான்றாக, கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை தேசிய கால்பந்து அணி, மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணி என்பவற்றில் மன்னார் மாவட்ட வீரர்கள் பலர் பிரதிநிதித்துவம் பெற்று சிறப்பித்து வந்தனர். அதற்கு மேலதிகமாக, மன்னாரில் உருவெடுத்த பல வீரர்கள் இலங்கையின் முன்னணி கழகங்களிலும் தமது ஆதிக்கத்தை செலுத்தினர். இன்றும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோன்று, தேசிய மட்டத்தில் பார்க்கும்பொழுது, இலங்கையின் கால்பந்து வளர்ச்சிக்காக நாளுக்கு நாள் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் வீரர்களின் வளர்ச்சி, அவர்களது எதிர்காலம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கால்பந்து சம்மேளனம் உட்பட பல தரப்பினர் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் பிரசித்து பெற்று விளங்கிய மன்னார் கால்பந்து லீக் முன்பிருந்ததை விட மிக மோசமான நிலைமையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அங்கு அதிகம் லீக் போட்டிகளும் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எனவே இது தொடர்பில் மன்னார் கால்பந்து லீக்கின் முன்னாள் உறுப்பினரும், இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளருமான ஜெஸ்மினிடம் ThePapare.com தொடர்புகொண்டு வினவியபோது,

முன்னர் மன்னார் கால்பந்து லீக்கில் இருந்த அனைவரும் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டனர். ஒரு காலத்தில் எமது லீக்கிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 ரூபாய் மாத்திரமே கிடைத்தது. அது எமக்கு போதாத சிறிய ஒரு தொகையாகவே இருந்தது. எனினும் எமது லீக் உறுப்பினர்கள் பல தரப்பினருடனும் கொண்டிருந்த நட்புறவின் காரணமாக நாம் மிகப் பெரிய செயற்பாடுகளை மேற்கொண்டோம். அதற்குக் காரணம் அன்று ஒரு சிறந்த நிருவாக முறைமை இருந்தது.

மன்னாரில் தற்பொழுது நாம் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளைக் காண்பது மிகவும் அரிது. போட்டிகள் இல்லையெனின் எதிர்காலத்தில் எவ்வாறு சிறந்த வீரர்களை நாம் பெறுவது? சிறந்த நிருவாக முறைமைகள் இருந்தால் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவது இலகுவாக இருக்கும்என்று குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் கால்பந்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தரப்பாக ஒவ்வொரு கால்பந்து லீக்கும் திகழ்கின்றது. அவர்களது செயற்பாடுகளைப் பொறுத்தே குறித்த லீக்கினதும், அந்த லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளினதும் வளர்ச்சி தங்கியுள்ளது.

முன்னர் ஒரு லீக்கிற்கு 25,000 ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்பொழுது அத்தொகை 2 லட்சம் ரூபாய் அல்லது அதை விட கூடிய தொகையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்பொழுது அதிகமான கால்பந்து லீக்கள் தமது செயற்பாடுகளை விரிவு படுத்தியுள்ளதுடன், லீக்கில் இடம்பெறும் போட்டிகளை அதிகரித்தும், தமக்கு கீழ் உள்ள கழகங்களுக்கு பல உதவிகளை வழங்கியும் சிறந்த லீக்காக தமது லீக்கை முன்னேற்றும் நோக்கில் செயற்படுகின்றன.

எனவே மன்னார் லீக்கின் குறித்த விடயம் தொடர்பில் அதன் முன்னாள் தலைவர் அன்டன் பிகுராடோவை ThePapare.com தொடர்புகொண்டபோது, நாம் முன்னர் இலங்கையிலேயே உள்ள சிறந்த கால்பந்து லீக்காக தெரிவாகினோம். அதற்கான விருதும் எமக்குக் கிடைத்தது. காரணம் நாம் சிறந்த முறையில் அனைத்து விதமான போட்டிகளையும் நடாத்தினோம். எனினும் தற்பொழுது இங்கு அதிகமான லீக் போட்டிகள் இடம்பெறுவதில்லை.

இங்குள்ள பிரபலமான பல கழகங்களும் தமக்கு போட்டிகளுக்கான வாய்ப்பு இல்லை என்று கவலைப்படுகின்றன. அதேபோன்றுதான் எமது லீக்கில் இருந்து தேசிய அணிக்கு 2 வீரர்கள் தெரிவாகியிருந்தனர். எனினும் அவர்களுக்கு லீக்கினால் எந்த பாராட்டோ, சலுகைகளோ வழங்கப்படுவதில்லை. எனினும் இவ்வாறான செயற்பாடுகளை லீக் மேற்கொள்ளும்பொழுதே இன்னும் பல வீரர்கள் அதனைக் கண்டு உட்சாகமடைவார்கள்.

ஒரு லீக்கின் செயற்பாட்டைப் பொருத்தே அங்கு கால்பந்து வளர்ச்சியடைவதும் வீழ்ச்சியடைவதும் தங்கியுள்ளது. என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நாம் உண்மையான நிலையை அறிந்துகொள்வதற்காக மன்னார் லீக்கின் தற்போதைய தலைவர் ஏ.ஜெராட்டை தொடர்புகொண்டு, லீக்கின் செயற்பாடுகள் குறித்து வினவினோம்.

அதற்கு அவர், எமது செயற்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் நாம் கால்பந்து சம்மேளனத்திற்கு சமர்ப்பித்துள்ளோம். அவர்களிடம் கேளுங்கள், தருவார்கள் என்றார்.    

அதன் பின்னர் அவர்களது செயற்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் முகமாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி U.L.ஜஸ்வரை ThePapare.com தொடர்பு கொண்டது.

அதன்போது அவர், எமக்கு மன்னார் லீக்கின் 2015ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் 2016ஆம் ஆண்டின் எந்த அறிக்கைகளும் வரவில்லை. இவ்வாண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை 2016 டிசம்பர் 31ஆம் திகதியின் பின்னரே அனுப்பப்படும்.

மன்னார் லீக் பல தேசிய வீரர்களை உருவாக்கிய ஒரு சிறந்த லீக். அவ்வாறு போட்டிகள் இடம்பெறவில்லை என்றால் அது நிச்சயமாக எதிர்கால வீரர்களை கடுமையாகப் பாதிக்கும் என்றார்.

இதனைக் கண்கானிப்பதற்கு எந்த நடவடிக்கையும் சம்மேளனத்தினால் எடுப்பதில்லையா என்று வினவியதற்கு, நாம் அனைத்து லீக்கினதும் செயற்பாடுகள், அவர்களது முகாமைத்துவம் குறித்து அவதானிப்பதற்கு 2017ஆம் ஆண்டில் இருந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதனால் எமக்கு எதிர்காலத்தில் சிறந்த பயனைப் பெறலாம் என்று ஜஸ்வர் மேலும் தெரிவித்தார்.

ஜஸ்வரின் இந்த கருத்தைத் தொடர்ந்து மன்னார் கால்பந்து லீக் எம்மிடம் அவர்களது செயல்பாடுகள் குறித்து வெளியிடாமல் மறைப்பது நிரூபணமானது. பின்னர் நாம் அங்குள்ள நிலைமைகள் குறித்து சற்று அதிகமாக ஆராய்ந்தபோது இன்னும் பல தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

அதாவது, குறித்த லீக்கில் உள்ள சில கழகங்களுக்கு தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டு வருதல், சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு தமது லீக் போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டிருத்தல், இளம் மற்றும் பாடசாலை வீரர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் தற்பொழுது லீக்கினால் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டிருத்தல் போன்ற தகவல்கள் எமக்குக் கிடைத்தன.  

இவை தவிர, மன்னார் லீக்கில் போட்டிகள் மிகவும் குறைவாக இருப்பதனால் அங்குள்ள பல அணிகள் நீண்ட தூரம் பயணம் செய்து யாழ்ப்பாணத்தில் போட்டிகளில் பங்கு கொள்வதாகவும் அங்குள்ள பல வீரர்கள் மற்றும் கழக நிருவாகிகள் தமது கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இந்த நிலைமை தொடர்ந்து அங்கு நிலவாமல் ஒரு மாற்றம் ஏற்பட்டு, மன்னாரின் பிரதானமான மற்றும் பழமையான விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்தைப் பாதுகாத்து, எதிர்காலத்திலும் தேசம் போற்றும் சிறந்த வீரர்களையும், சிறந்த கழகங்களையும் கொண்ட லீக்காக தமது லீக்கை மாற்ற வேண்டும் என்பதே மன்னார் கால்பந்து ரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

கால்பந்து நிருவாகத்தைப் பொருத்தவரை சிறந்த நிருவாகிகள் இருந்து மட்டும் போதாது. அவர்கள் தம்மையும் தமது நேரத்தையும் லீக்கிற்காக அர்ப்பணிக்கும்பொழுதே அங்கு ஒரு வளர்ச்சி ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.