இம்ரான் தாஹிரின் சுழலால் வீழ்ந்த டெல்லி கெப்பிட்டல்ஸ்

114
iplt20.com

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களின் உதவியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று, இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்

உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி….

இரண்டு அணிகளும் ஏற்கனவே ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த போதும், முதலிடத்தை தக்கவைப்பதற்கான பலப்பரீட்சையில் நேற்று மோதின. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோர் சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்த, சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய பங்குக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதிசெய்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சுரேஷ் ரெய்னா மற்றும் பாப் டு ப்ளெசிஸ் ஆகியோரின் நிதான துடுப்பாட்டங்களின் மூலமாக முன்னேறியது. பின்னர், டோனி தனது அதிரடியை வெளிப்படுத்த 179 ஓட்டங்களை குவித்தது. ரெய்னா அதிகபட்சமாக 59 ஓட்டங்களையும், டோனி 22 பந்துகளில் 44 ஓட்டங்களையும், ப்ளெசிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சில் ஜெகதீஷா சுச்சித் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ப்ரிதிவி ஷாவ் முதல் ஓவரில் ஆட்டமிழக்க, தவான் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் தவான் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக பெவிலியன் திரும்பினர்.

டெல்லி அணி சார்பில் தனியாளாக துடுப்பெடுத்தாடிய ஸ்ரேயாஷ் ஐயர் ஒரு பக்கம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன. தொடர்ந்து ஸ்ரேயாஷ் ஐயர், மகேந்திரசிங் டோனியின் மிகச்சிறந்த ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

வோர்னரின் அசத்தல் துடுப்பாட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (29) நடைபெற்ற …

டெல்லி அணி முதல் 10 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த போதும், 16.2 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஷ் ஐயர் 44 ஓட்டங்களையும், பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டெல்லி அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்த பருவகாலத்தின் மூன்றாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணி 70 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்ததுடன், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

சென்னை சுப்பர் கிங்ஸ் – 179/4 (20), சுரேஷ் ரெய்னா 59 (37), மகேந்திரசிங் டோனி 44 (22), பாப் டு ப்ளெசிஸ் 39 (41), ஜெகதீஷா சுச்சித் 28/2

டெல்லி கெப்பிட்டல்ஸ் – 99/10 (16.2), ஸ்ரேயாஷ் ஐயர் 44 (31), சிக்கர் தவான் 19 (13), இம்ரான் தாஹிர் 12/4, ரவீந்திர ஜடேஜா 9/3

முடிவு – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<