சர்ரே அணிக்காக T20 போட்டிகளில் விளையாடவுள்ள இம்ரான் தாஹிர்

111
BCCI

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், இங்கிலாந்தின் T20 பிளாஸ்ட் (Vitality T20 Blast) தொடரில் சர்ரே அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இங்கிலாந்தின் கோடை காலத்தினை சிறப்பிக்கும் T20 பிளாஸ்ட் தொடர், இந்த ஆண்டு இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம் இந்த T20 தொடரில் சர்ரே அணிக்காக விளையாடுவதன் மூலம் தாஹிர், குறித்த அணியில் விளையாடவுள்ள இரண்டாவது வெளிநாட்டு வீரராகவும் மாறியுள்ளார். சர்ரே அணியில் அவுஸ்திரேலிய வீரரான ஆரோன் பின்ச் ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க குணவர்தனவின் இடத்தை நிரப்ப வரும் சமிந்த வாஸ்

T20 போட்டிகளில் 300 இற்கும் மேலான விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள தாஹிர், அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியன் ப்ரீமியர் லீக் T20 தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி குறித்த தொடரில் அதிக விக்கெட்டுக்களை (26) சாய்த்த வீரராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது தனது 40 ஆவது அகவையினை கடக்கும் இம்ரான் தாஹிர், சர்ரே அணியில் இணைந்தது பற்றி பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“சர்ரே என்பது மிகப் பெரிய ஒரு கழகம், அதற்கு மீண்டும் ஒரு தடவை என்னால் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்க முடியும் அது நல்ல விடயமாக அமையும்.”

சர்ரே அணி ஒரு புறமிருக்க, இம்ரான் தாஹிர் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் அணிகளான டேர்பைஷைர், டேர்ஹம், ஹம்ப்ஷைர், மிடில்செக்ஸ், நொட்டின்ஹம்ஷைர், ஸ்டபோர்ட்சைர், வேர்விக்ஷைர் மற்றும் யோக்ஷைர் போன்றவற்றிற்காக கடந்த காலங்களில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்ரான் தாஹிர் சர்ரே அணியில் இணைந்தமை தொடர்பில் பேசிய அதன் கிரிக்கெட் இயக்குனர் அலெக் ஸ்டூவர்ட், தாஹிர் உள்ளூர், சர்வதேச போட்டிகளில் பெற்றுக் கொண்ட அனுபவம் சர்ரே அணிக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனக் கூறியிருந்தார்.

இம்ரான் தாஹிரை இணைத்துக் கொண்டுள்ள சர்ரே அணி, T20 பிளாஸ்ட் தொடரில் தமது முதல் போட்டியில் எசெக்ஸ் அணியினை ஜூலை மாதம் 19ஆம் திகதி எதிர் கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க