இலங்கை கிரிக்கெட் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்தவும் – ஐ.சி.சி உத்தரவு

159
ICC warn SLC to hold elections

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 75 ஆவது மாநாடு அயர்லாந்தின் டப்லின் நகரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

ஐ.சி.சி இன் அனைத்து அங்கத்துவ நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத் தொடரில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

காலியில் வரும் (ஜூலை) 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள…

இதன்போது பந்தை சேதப்படுத்தல் மற்றும் வீரர்களின் நடத்தை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை வெளியிட்டிருந்த அறிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரதிநிதியொருவர் தேர்தல் நடைபெறும் வரை ஐ.சி.சி இன் கூட்டங்களில் மேற்பார்வையாளராக பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இழுபறி நிலையில் உள்ள இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக சபைத் தேர்தலை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு தேர்தல் நடைபெறாவிட்டால் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலில் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், ஜுன் மாதம் 14 ஆம் திகதி வரை தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றையும் பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை..

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் கீழ் கொண்டுவருவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து உள்ளூரில் மாத்திரமல்லாது சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் அதிகம் பேசப்பட்டிருந்தது. இதனால் ஐ.சி.சி இன் உறுப்புரிமையையும், வருடாந்த நிதி ஒதுக்கீடுகளையும் இலங்கை அணி இழக்க நேரிடும் உள்ளிட்ட பல செய்திகளும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்தன.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் தொடர்பில் ஐ.சி.சி இன் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா  உள்ளிட்ட குழுவினர் டுபாய் சென்று ஐ.சி.சி இன் அவைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடி, தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீதி பத்மன் சுரசேன, வழக்கறிஞர் அர்ஜுன் ஒபேசேகர உள்ளிட்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டது.

அத்துடன், புதிய தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.)…

எனவே, நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்ற வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஐ.சி.சி இன் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஆறு மாதங்களில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக சபைத் தேர்தலை நடத்த முடியாது போகும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிக்க வேண்டி ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<