உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி பிளேட் சம்பியன்

1351
ICC

ஹசித்த போயகொடவின் மற்றொரு அபார சதத்தின் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டியில் இலங்கை இளையோர் அணி பிளேட் கேடயத்தை சுவீகரித்தது. தொடரில் 9ஆவது இடத்தை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது.

[rev_slider LOLC]

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தின் பிளேட் கேடய இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (28) லின்கன் மைதானத்தில் நடைபெற்றது. குழுநிலை போட்டிகளில் சோபிக்கத் தவறிய இலங்கை அணி சம்பியன் கிண்ணத்திற்கான போட்டிகளில் இருந்து வெளியேறியபோதும் பிளேட் கேடயத்திற்கான காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பாக ஆடியது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி மேற்கிந்திய தீவுளை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கீகொன் சிம்மன்ஸ் மற்றும் பாஸ்கர் யாத்ரம் 53 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு சிறப்பான தொடக்கத்தை பெற்றனர். எனினும் இலங்கை அணியின் சுழற்பந்து தந்திரம் பயன்தந்தது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.

இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

அவர் யாத்ரமை 32 ஓட்டங்களில் வெளியேற்றியதோடு அடுத்து வந்த கிமானி மெலியஸை வந்த வேகத்தில் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார். அதனை அடுத்து விரைவாக மற்றொரு விக்கெட் பறிபோக மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த 3 விக்கெட்டுகளும் 10 ஓவர்களுக்குள்ளேயே வீழ்ந்தன.

மத்திய வரிசையில் வந்த அலிக் அதன்சே நிதானமாக ஆடி கிஸ்டன் கலிசரனுடன் இணைந்து அணியை மீட்டார். இருவரும் 4ஆவது விக்கெட்டுக்கு 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். எனினும் கலிசரன் 59 பந்துகளில் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய அதன்சே இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பெற்றார். 110 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றதோடு அவருக்கு உதவியாக துடுப்பெடுத்தாடிய பிரட் பேர்னஸ் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றார். இருவரும் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை பெற்றனர்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.  

இலங்கை இளையோர் அணிக்காக ஜயவிக்ரமவுடன் 17 வயது வேகப்பந்து வீச்சாளர் நிபுன் மாலிங்வும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிங்கிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் ஆரம்ப வீரர்களான தனஞ்சய லக்ஷான் மற்றும் ஹசித்த போயகொட ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தனர்.  

இந்த தொடரில் இரண்டாவது சதத்தை விளாசிய கண்டி, திரித்துவ கல்லூரியைச் சேர்ந்த போயகொட 124 பந்துகளில் 116 ஓட்டங்களை குவித்தார். முன்னதாக அவர் கென்யாவுடனான போட்டியில் 191 ஓட்டங்களை பெற்று 19 வயதுக்கு உட்பட்ட சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவரென உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் சிறப்பாக ஆடிய தனஞ்சய லக்ஷான் தனது சதத்தை இரண்டு ஓட்டங்களால் தவறவிட்டார். 119 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

 ஹத்துருசிங்க மீதான நம்பிக்கை வீண் போகவில்லை – சந்திமால்

எவ்வாறாயினும் 38ஆவது ஓவரில் போயகொட ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை அணி நெருக்கடியை எதர்கொள்ள ஆரம்பித்தது. ஆரம்ப வரிசையின் சரிவை அடுத்து 3, 4 மற்றும் 5 ஆவது விக்கெட்டுகள் வெறும் 8 ஓட்டங்களையே பெற்றன. லக்ஷான் சதத்தை பறிகொடுத்து ஆட்டமிழந்தபோது இலங்கை இளையோர் அணி மேலும் நெருக்கடியை சந்தித்தது. 6ஆவது விக்கெட்டில் நுவன் பெர்னாண்டோ தீர்க்கமான இரு பௌண்டரிகளை விளாசி போட்டியை வெல்ல சிக்சர் ஒன்றை பெற பந்தை உயர்த்தியபோது அது பிடியெடுப்பில் முடிந்தது.  

218 ஓட்டங்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்த இலங்கை மேலும் 31 ஓட்டங்களை பெறுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவருக்கு இலங்கை அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெறவிருந்தபோதும் பரபரப்பு முடியவில்லை. 50ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் எந்த ஓட்டமும் பெறப்படவில்லை. பின்னர் நான்காவது பந்திலேயே இலங்கை இளையோர் அணி அவசரமாக ஓட்டம் ஒன்றை பெற்று போட்டியை வென்றது.

இறுதியில் இலங்கை அணி 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 255 ஓட்டங்களை எட்டியது. ஹசித்த போயகொடவுக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.   

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி வரும் பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 254/5 (50) – அலிக் அதன்சே 110*, பிரட் பேர்னஸ் 37*, பிரவீன் ஜனவிக்ரம 2/33, நிபுன் மாலிங்க 2/63

இலங்கை – 155/7 (49.4) – ஹசித்த போயகொட 116, தனஞ்சய லக்ஷான் 98, ஜரியோன் ஹொயிட் 2/44, பாஸ்கர் யத்ரம் 2/42

முடிவு – இலங்கை இளையோர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி