டெஸ்ட் தரவரிசையில் டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்

187
@ICC

புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விக்கெட் காப்பாளராக பல சாதனைகளை நிகழ்த்திய ரிஷாப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளரான எம்.எஸ் டோனியின் சாதனையும் முறியடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி போன்ற மூவகையான தொடர்களிலும் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு தொடர்களும் நிறைவடைந்துள்ள நிலையில் டி20 தொடர் சமநிலையில் முடிவடைய, டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

>> அவுஸ்திரேலிய மண்ணில் சதம் குவித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளராக ரிஷாப் பண்ட்

இந்திய அணியின் இந்த டெஸ்ட் தொடர் வெற்றியானது 72 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் பெற்ற வரலாற்று வெற்றியாக மாறியுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இதன் மூலம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் குறிப்பாக இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக பிரகாசித்திருந்தனர். சடீஸ்வர் புஜாரா, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய பங்குதாரர்களாக இருந்தனர்.

இந்நிலையில் குறித்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (08) வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வீரர்களான ரிஷாப் பண்ட், சடீஸ்வர் புஜாரா, மார்கஸ் ஹாரிஸ், மயங்க் அகர்வால் ஆகியோரும், பந்துவீச்சில் நைதன் லயன், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், முஹம்மட் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் தரப்படுத்தலில் மேலிடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பிடியெடுப்புக்களை நிகழ்த்திய இந்திய விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்ற ரிஷாப் பண்ட் தற்பொழுது ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முன்னனி வீரரான டோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷாப் பண்ட் டெஸ்ட் வீரர்களுக்கான துடுப்பாட்ட வரிசையில் 673 புள்ளிகளை பெற்று 21 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். தற்பொழுது 17 ஆவது இடத்தில் ரிஷாப் பண்ட் உள்ளார்.

இந்த முன்னேற்றத்தின் மூலம் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மகேந்திர சிங் டோனி பெற்றிருந்த அதிகபட்ச புள்ளிகளான 662 புள்ளிகளை முறியடித்து பண்ட் சாதனை புரிந்துள்ளர். மேலும் எம்.எஸ் டோனியின் உயர்ந்த நிலையான 19 ஆவது இடத்தையும் ரிஷாப் பண்ட் தாண்டியுள்ளார்.

இந்திய – அவுஸ்திரேலிய தொடரில் மொத்தமாக 521 ஓட்டங்களை பெற்று தொடர் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சடீஸ்வர் புஜாரா அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி 881 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 21 இடங்கள் முன்னேறியுள்ளார். மேலும், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

>> ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு: சிராஜிற்கு அழைப்பு

சகலதுறையில் பிரகாசித்த ரவீந்திர ஜடேஜா துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு போன்ற துறைகளுக்கான தரவரிசையில் பல இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார். துடுப்பாட்டத்தில் 6 இடங்களும், பந்துவீச்சில் ஒரு இடமும், சகலதுறையில் ஒரு இடமும் முன்னேறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் ஜடேஜா இரண்டாமிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 7 இடங்களும், முஹம்மட் ஷமி, அவுஸ்திரேலிய வீரர் நைதன் லயன் ஆகியோர் ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளனர். பந்துவீச்சில் அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு தரவரிசையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்தும் 16 ஆவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலாக தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு புள்ளிகளில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் இந்திய அணி தொடர்ந்தும் டெஸ்ட் ஜாம்பவான்களாக முதலிடத்தில் உள்ளது. மாறாக தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி ஒரு புள்ளியை இழந்து தொடர்ந்தும் ஐந்தாமிடத்தில் நீடிக்கின்றது.   

இன்றைய நாளின் அடிப்படையில் புதிய டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தல் பின்வருமாறு,

  1. இந்தியா – 116 புள்ளிகள்
  2. இங்கிலாந்து – 108 புள்ளிகள்
  3. நியூஸிலாந்து – 107 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா – 106 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 101 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 92 புள்ளிகள்
  7. இலங்கை – 91 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 70 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 69 புள்ளிகள்
  10. ஜிம்பாப்வே – 13 புள்ளிகள்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<