2018 டெஸ்ட் துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி, பந்துவீச்சில் ககிஸோ ரபாடா முதலிடம்

979

2018ஆம் ஆண்டு முடிவில் ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரப்படுத்தல்களின்படி துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லியும், பந்துவீச்சில் ககிஸோ ரபாடாவும், சகலதுறையில் சகீப் அல் ஹசனும் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டு என்பது தற்காலத்தில் எல்லோராலும் விரும்பக்கூடிய பொழுதுபோக்காக மாறியிருக்கின்றது. நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை எனும் சபையானது இயக்கி வருகின்றது.

இலங்கை A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்

உலக கிரிக்கெட் விளையாட்டை நெறிப்படுப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20), அணிகள் ரீதியாக, துடுப்பாட்ட வீரர்கள்  ரீதியாக, பந்துவீச்சாளர்கள் ரீதியாக, சகலதுறை வீரர்கள் ரீதியாக என பல்வேறான தரவரிசைகளை வெளியிட்டு வருகின்றது.

இது ஒவ்வொரு வீரர்கள், அணிகள் கடந்த காலங்களில் பெறும் அடைவு  மட்டத்தினை வைத்து காலத்துக்கு காலம் ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்தாண்டின் இறுதியில் (2018) டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த அணிகள், வீரர்கள் போன்ற அனைத்தினது தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று (31) வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஓட்ட இயந்திரம் (Run Machine) என்றழைக்கப்படும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முன்னிலை பெற்றுள்ளார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா முன்னிலை பெற்றுள்ளார்.

துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோஹ்லி தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளார். 931 புள்ளிகளுடன் 34 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். கோஹ்லி அவருடைய வாழ்க்கையில் அதி உச்ச புள்ளியாக 937 புள்ளிகளை இந்த ஆண்டிலேயே பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையின் புள்ளிப் பட்டியலில் பெற்றுக் கொண்ட அதிகூடிய புள்ளியாகவும் காணப்படுகின்றது. இவர் இந்தாண்டில் மொத்தமாக 1,322 டெஸ்ட் ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து இலங்கை அணியின் இளம் வீரர் குசல் மெண்டில் 1,023 டெஸ்ட் ஓட்டங்களை பெற்று இந்தாண்டின் இரண்டாவது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரராக காணப்படுகின்றார்.

விராட் கோஹ்லி, குசல் மெண்டிஸ் ஆகிய இருவருமே இந்தாண்டில் 1000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த வீரர்களாக காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம

இலங்கை அணியுடனான போட்டியின் போது இரட்டை சதமடித்த ஹென்றி நிக்கலஸ் தரவரிசையில் இரண்டு படிகள் முன்னேறி ஏழாமிடத்தை பிடித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஜொலித்த வீரர்களாக விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் (2018 மார்ச் வரையில்), ஹென்றி நிக்கலஸ், திமுத் கருணாரத்ன, டொம் லேத்தம், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் காணப்படுகின்றனர்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் பின்வருமாறு,

  1. விராட் கோஹ்லி – (931 புள்ளிகள்)
  2. கேன் வில்லியம்சன் – (897 புள்ளிகள்)
  3. ஸ்டீவ் ஸ்மித் – (883 புள்ளிகள்)
  4. சடீஸ்வர் புஜாரா – (834 புள்ளிகள்)
  5. ஜோ ரூட் – (807 புள்ளிகள்)
  6. திமுத் கருணாரத்ன – (715 புள்ளிகள்)
  7. அஞ்செலோ மெத்திவ்ஸ் – (687 புள்ளிகள்)
  8. தினேஷ் சந்திமால் – (675 புள்ளிகள்)

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சனை பின்தள்ளி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா இந்தாண்டு இறுதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

2018 இல் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 52 டெஸ்ட் விக்கெட்டுக்களுடன் ககிஸோ ரபாடாவே முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாமிடத்தை 50 விக்கெட்டுக்களுடன் இலங்கை அணியின் சகலதுறை வீரர் டில்ருவன் பெரேரா பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது ஒரே ஆண்டில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா 12 இடங்கள் முன்னிலை பெற்று பதினாறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் அதே தொடரில் பிரகாசித்த அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் 5 இடங்கள் முன்னிலை பெற்று மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ட்ரென்ட் போல்ட் 7 இடங்கள் முன்னிலை பெற்று ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2018ஆம் ஆண்டில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜொலித்த வீரர்களாக ககிஸோ ரபாடா, ஜேம்ஸ் அண்டர்சன், பெட் கம்மின்ஸ், முஹம்மட் அப்பாஸ், ஜெசன் ஹோல்டர், ஷனோன் கேப்ரியல், ஜஸ்பிரிட் பும்ரா, மெஹ்தி ஹசன் மற்றும் மிச்சல் ஸ்டாக் ஆகியோர் காணப்படுகின்றனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியல் பின்வருமாறு,

  1. ககிஸோ ரபாடா – (880 புள்ளிகள்)
  2. ஜேம்ஸ் அண்டர்சன் – (874 புள்ளிகள்)
  3. பெட் கம்மின்ஸ் – (836 புள்ளிகள்)
  4. வேர்னன் பிலான்டர் – (817 புள்ளிகள்)
  5. முஹம்மட் அப்பாஸ் – (813 புள்ளிகள்)
  6. ட்ரென்ட் போல்ட் – (771 புள்ளிகள்)
  7. டிம் சௌதி – (767 புள்ளிகள்)
  8. ஜெசன் ஹோல்டர் – (751 புள்ளிகள்)
  9. ஷனோன் கேப்ரில் – (742 புள்ளிகள்)
  10. ஜஸ்பிரிட் பும்ரா – (708 புள்ளிகள்)
  11. மெஹ்தி ஹசன் – (696 புள்ளிகள்)
  12. மிச்சல் ஸ்டாக் – (695 புள்ளிகள்)

பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மொர்தஸா

சகலதுறை வீரர்களின் வரிசையில் சகீப் அல் ஹசன் 415 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். இந்தாண்டில் சகலதுறையில் ஜொலித்த வீரர்களாக ஜேசன் ஹோல்டர், வேர்னன் பிலான்டர், பெட் கம்மின்ஸ், டிம் சௌத்தி, ககிஸோ ரபாடா, கொலின் டி கிரான்ட்ஹோம் மற்றும் சாம் கரன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

டெஸ்ட் சகலதுறை வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் பின்வருமாறு,

  1. சகீப் அல் ஹசன் – (415 புள்ளிகள்)
  2. ஜேசன் ஹோல்டர் – (365 புள்ளிகள்)
  3. ரவீத்திர ஜடேஜா – (364 புள்ளிகள்)
  4. வேர்னன் பிலான்டர் – (362 புள்ளிகள்)
  5. பென் ஸ்டோக்ஸ் – (342 புள்ளிகள்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<