நாங்கள் பத்து அணிகளையும் சமமாகவே நடத்துகின்றோம் – ஐ.சி.சி

1465

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.), சில அணிகளுக்கு பக்க சார்பாக நடந்துவருகின்றது எனக் கூறப்படும் விடயத்தினையும், சில அணிகளுக்கு சாதகமாக ஆடுகளங்களை தயார்படுத்தியது எனக் கூறப்படும் விடயத்தினையும் முற்றாக மறுத்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முன்னாள் சம்பியன்களில் ஒன்றான இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடுவதற்கு வழங்கப்பட்ட ஆடுகளங்கள் சரியான தரத்தில் அமைந்திருக்கவில்லை என ஐ.சி.சி. இடம் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தது.

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு…

இலங்கை அணியின் முகாமையாளரும், சிரேஷ்ட தேர்வாளருமான அசந்த டி மெல் ஐ.சி.சி. தரமற்ற மைதானங்களை வழங்குகின்றது என முதல் நபராக  சுட்டிக்காட்டியிருந்தார்.

”இந்த உலகக் கிண்ணத்தில் எமக்கு வழங்கப்பட்ட மைதானங்கள் குறித்து நாம் சந்தோஷமின்றி இருக்கின்றோம். எல்லா போட்டிகளிலும் நாங்கள் (புற்கள் அதிகம் கொண்ட) பச்சை ஆடுகளங்களிலேயே விளையாட நேரிட்டது. அதேநேரம், நாம் நாளை அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடப்போகும் ஓவல் அரங்கிலும் அதிக புற்களை விட்டு வைத்துள்ளனர். ஓவல் அரங்கில் நடந்த கடைசி இரண்டு போட்டிகளிலும் அவ்வாறு இருக்கவில்லை. அவர்கள் (ஐ.சி.சி.) எல்லா அணிகளுக்கும் சரியான தரத்தை பேண வேண்டும்.”

புற்கள் அதிகம் கொண்ட கார்டிப் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த தமது முதலாவது உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியினர் மிகவும் மோசமான தோல்வியினை தழுவியிருந்தனர். இந்நிலையில், இலங்கை அணி தமது ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் புற்கள் அதிகம் கொண்ட ஓவல் மைதானத்தில் உலகக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் அவுஸ்திரேலிய அணியினை சனிக்கிழமை (15) எதிர்கொள்ளவுள்ளது.

எனினும், இலங்கையின் முறைப்பாட்டில் உண்மை இல்லை என மறுத்துள்ள ஐ.சி.சி. இந்த உலகக் கிண்ணத் தொடரில் தயார் செய்யப்படும் ஆடுகளங்கள் சுயாதீனமான முறையில் செயற்படும் ஆலோசனையாளர் மூலம் மேற்பார்வை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.

”நாங்கள் சுயாதீனமாக செயற்படும் ஒரு ஆடுகள ஆலோசனை உத்தியோகத்தரை போட்டிகளை நடாத்தும் மைதானங்களில் உள்ள ஆடுகள பராமரிப்பாளருடன் இணைந்து வேலை செய்வதற்காக ஐ.சி.சி இன் எல்லா நிகழ்ச்சிகளிலும் எடுத்திருக்கின்றோம். அதன்படி, ஆடவருக்கான 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும் எந்த மாற்றங்களும் கிடையாது.”

”இதுவரையில் இங்கிலாந்து நிலைமைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட ஆடுகளங்கள் குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது உள்ளத்தில், பத்து அணிகளும் சமமாக நடாத்தப்பட்டு அவர்கள் அனைவரும் இந்த (உலகக் கிண்ண) நிகழ்ச்சிக்காக மிகவும் வசதியான தயார்படுத்தல்களில் ஈடுபட வேண்டும் என்பது தொடக்கத்தில் இருந்தே அவாவாக இருந்தது.”

உலகக் கிண்ணத்தில் 23 வருட பதிவை மாற்றுமா இலங்கை – ஆஸி மோதல்?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்…

அதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடருக்காக வழங்கப்பட்ட மைதானங்கள் குறித்து அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண மோதலுக்கு முன்னர் கருத்துக்களை வெளியிட்ட இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, அனைத்து அணிகளுக்கும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது ஆடுகளங்கள் வழங்கப்படுவது நீதமான முறையில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நான் ஏற்கனவே குறிப்பிட்டதன் அடிப்படையில், ஒருநாள் போட்டிகளில் மக்கள் பொழுதுபோக்கினையே எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு 100 ஓவர்கள் கொண்ட போட்டிகளே தேவையாக இருக்கும். நீங்கள் இன்று இடம்பெற்ற இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டியினை பார்த்தீர்கள் என்றால் அது தட்டையான ஆடுகளத்தில் இடம்பெற்றது, ஆடுகளம் வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால், ஓவல் ஆடுகளத்தை பார்த்தால், அது பச்சை நிறத்தில் இருக்கின்றது. எல்லா ஆடுகளங்களும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். எங்களுக்கு நீதமான முறையில் உள்ள ஆடுகளங்கள் வேண்டும். அது மட்டுமே எங்களுக்கு வேண்டும்.”

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<