லண்டனில் நடைபெற்று வரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் துருக்கி வீரர் ரமில் குலியெவ் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 2009ஆம் ஆண்டிலிருந்து 200 மீற்றரின் ஒலிம்பிக் சம்பியனான உசைன் போல்ட்டின் பெயரின் கீழ் இருந்த இந்தப் பதக்கம், சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு கைமாறியது.  

16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியனும், ஐமைக்காவின் நட்சத்திர வீரருமான உசேன் போல்ட் ஏற்கனவே அறிவித்ததன் படி பங்கேற்கவில்லை. எனவே, 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தென்னாபிரிக்க வீரர் வேன் நீக்கெர்க் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துருக்கி வீரர் ரமில் குலியெவ் பந்தய தூரத்தை 20.09 வினாடியில் கடந்து தங்க பதக்கத்தை பெற்றார். தென்னாபிரிக்க வீரர் வேன் நீக்கெர்க் (20.11 வினாடி). 2ஆவது இடத்தையும், ட்ரினிடாட்-டொபாக்கோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (20.11 வினாடி) 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

Turkey player-2
ரமில் குலியெவ்

அசர்பைஜான் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 27 வயதான ரமில் குலியெவ், பொருளாதார நெருக்கடி காரணமாக அண்டை நாடான துருக்கியில் கடந்த 2011ஆம் ஆண்டு குடியேறினார். 2 வருட இடைவேளைக்குப் பிறகு துருக்கி நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட அவர், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் முதற்தடவையாக துருக்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.

பின்னர், 2015இல் உலக பல்கலைக்கழக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 200 மற்றும் 100 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்ற ரமில், இவ்வருடம் நடைபெற்ற ஐரோப்பிய குழுநிலை மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளின் ஆண்களுக்கான 200 மீற்றரில் யாரும் எதிர்பாராத விதத்தில் 400 மீற்றர் உலக சம்பியனான தென்னாபிரிக்க வீரர் வேன் நீக்கெர்க்கை வீழ்த்தி உலக மெய்வல்லுனர் அரங்கில் துருக்கிக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராகவும் ரமில் குலியெவ் வரலாறு படைத்தார்.

வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா!

லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச்…

இதேவேளை, உணவு நஞ்சாகி ஒருவகை வைரஸ் நோய்க்கு ஆளாகி 400 மீற்றரில் ஓடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசக் மக்வாலா, அவரது 48 மணி நேரக் கேடு முடிவடைந்ததால் 200 மீற்றரில் மீண்டும் ஓடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அரையிறுதிக்கு தகுதி பெற அவர் தனியாக ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனியாக ஓடிய மக்வாலா 20.20 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து அரையிறுதிக்கு வாய்ப்பை பெற்றார். பின்னர், அரையிறுதியில் 2ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவர், இறுதிப் போட்டியில் 6ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்.

நிறைவேறியது சீன வீராங்கனையின் கனவு

பெண்களுக்கான குண்டு எறிதலில் 28 வயதான சீனாவின் கோங் லிஜியோவ் 19.94 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் மொத்தம் 5 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற கோங் லிஜியாவுக்கு தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு நீண்ட நாட்களாக கைநழுவிப் போனது. அந்த ஏக்கத்தை சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு அவர் இந்த முறை தீர்த்து இருக்கிறார்.

கோங் லிஜியோவ்
கோங் லிஜியோவ்

ஹங்கேரி வீராங்கனை அனிதா மார்டன் 19.49 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை மிச்செல் கார்ட்டர் 19.14 மீற்றர் தூரம் வீசி வெண்கலப் பதக்கமும் வென்றனர். எனினும் ஒலிம்பிக் சம்பியனான நியூசிலாந்தின் வெலீரி அடெம்ஸ் உபாதை காரணமாக இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை.

இம்முறை மெய்வல்லுனர் தொடரில் குண்டு எறிதலில் சுமார் 24 வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை கோங் லிஜியோவ் போட்டியின் பின்னர் அளித்த பேட்டியில், ‘இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். பந்தயத்தில் மழை பாதிப்பை ஏற்படுத்தியது. மழை பெய்யாமல் இருந்தால் 20 மீற்றருக்கு மேல் வீசி இருப்பேன். கடந்த காலங்களில் எனது கடின உழைப்புக்கு பலனாக இந்த தங்கப் பதக்கம் கிட்டியது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

நோர்வேக்கு முதல் தங்கம்

ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் 25 வயதான நோர்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 48.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். கார்ஸ்டென், ”டெக்கத்லான்” பந்தயத்தில் இருந்து 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்துக்கு மாறியவர் ஆவார். இப்போட்டியில் துருக்கி வீரர் யாஸ்மனி கோபெல்லா 48.49 வினாடியில் போட்டித் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சம்பியனான அமெரிக்காவின் கெர்ரோன் கிளமென்ட் 48.52 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

 கார்ஸ்டென் வார்ஹோல்ம்
கார்ஸ்டென் வார்ஹோல்ம்

19 வயது பஹ்ரேன் வீராங்கனை அபாரம்

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 19 வயதான சல்வா ஈத் நசிர் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டி ஆரம்பமானது முதல் சக வீராங்கனைகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சல்வா, அமெரிக்காவின் அலீசன் பீலிக்ஸ் உள்ளிட்ட பிரபல வீராங்கனைகளுக்கு சவாலளித்து உலக அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

உபாதையுடன் போட்டியிட்ட நிமாலிக்கு கடைசி இடம் : வருணவுக்கு ஏமாற்றம்

லண்டனில் நடைபெற்றுவருகின்ற உலக மெய்வல்லுனர் தொடரின் 7ஆம் நாளான நேற்றைய தினம்…

நைஜீரிய நாட்டு தாய்க்கும், பஹ்ரைன் நாட்டு தந்தைக்கும் பிறந்த சல்வா ஈத் நசிர், சிறுவயது முதல் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக ஆர்வமுடையவராகக் காணப்பட்டார். இதில் 2014ஆம் ஆண்டு அரேபிய நாடுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியின் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் சம்பியனாகத் தெரிவான அவர், அதே வருடம் சீனாவின் நன்ஞிங்கில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 52.74 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து 2015ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுடன், றியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகி 50.88 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சல்வா ஈத் நசிர்
சல்வா ஈத் நசிர்

எனினும், இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை பிலிஸ் பிரான்சிஸ் 49.92 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை சல்வா இட் நாசர் 50.06 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் 50.08 வினாடியில் பந்தய துரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 7 நாட்கள் நிறைவில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. அவ்வணி 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற தென்னாபிரிக்கா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.