‘நான் தலைமைப் பதவியில் இருந்து ஓட மாட்டேன்’ – மெதிவ்ஸ்

939
Mathews

இலங்கை,  இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இதுவரை  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற அடிப்படையிலும் ஒருநாள் தொடரை 3-0 என்ற அடிப்படையிலும் இலங்கை அணி இழந்துள்ளது.

இந்த அணிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற 5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் தோல்வி அடைந்து இருந்தது.  இந்தத் தோல்வியின் பின் இலங்கை அணியின் தலைவர் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

அதில் அவர் பேசுகையில் “நாம் சிறப்பான கிரிக்கட்டை விளையாடவில்லை. கடந்த 2 மாதங்களாக நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஏதாவதில் குறை ஏற்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஒரு போட்டி அமையவில்லை. இங்கிலாந்து வீரர்களைப் பாராட்டுகிறேன். அவர்கள் அற்புதமான கிரிக்கட் விளையாட்டை விளையாடினார்கள். அவர்கள்  எமக்கு சிறிதளவு வாய்ப்பையேனும் தரவில்லை. எமக்கு மிகவும் சவாலாக இருந்தார்கள், அவர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு மூன்று துறைகளிலும் எம்மைவிடச் சிறப்பாக செயற்பட்டு இருந்தார்கள்.

3-0 என்ற ரீதியில் தொடரை வென்றது இங்கிலாந்து

இரண்டு வருடங்களுக்கு முன்பும் இங்கிலாந்து அணி தற்போது நாம் உள்ள நிலைமையை போல் தான் இருந்தார்கள். புதுமுக வீரர்கள் அணியில் இணைந்து அவர்களது திட்டங்களை ஒழுங்காக முன்னெடுக்க முடியாமல் இருந்தார்கள். இந்த நிலை 6 – 10 மாதங்கள் வரை நீடித்தது. அதன் பின் தான் அவர்கள் பழைய நிலையை அடைந்தார்கள். நாளுக்கு நாள் முன்னேறி இருந்தார்கள். அதன் விளைவாகக் கடந்த 6 மாதங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்த அணியோடும் அது தமது மண்ணிலும் சரி எதிரணி மண்ணிலும் சரி சிறப்பாக விளையாடினார்கள். இங்கிலாந்து மண்ணில் அவர்களைத் தோற்கடிப்பது கடினம்” என்று கூறியிருந்தார்.

செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் மெதிவ்ஸிடம்  தலைமைப் பதவியைப் பற்றிக் கேட்டு இருந்தார். அதற்கு மெதிவ்ஸ் பதில் அளிக்கும் போது ” தலைமைப் பதவியில் நல்ல தருணங்கள் போன்று கடினமான மோசமான  தருணங்களும் வருவதுண்டு. இது தலைவர் என்ற ரீதியில் எனக்கும் எமது அணிக்கும் கடினமான தருணமாகும். அதனால் இதைக் கண்டு ஓடமுடியாது. எதிர்நோக்கும் கடினமான நிலைமைகளை எதிர்கொண்டு அதில் இருந்து மீள வேண்டும். எனக்கு மிகச் சிறந்த அணி உள்ளது, இவ்வணி எப்போதும் எனக்கு உதவும் அணியாகவே இருந்து வருகிறது.

நாம் தொடர்ந்து ஒரு அணியாக முன்னேறுவதற்கு வழிகள் செய்து அவற்றில் எமது நேரத்தை செலவிட்டால் எமக்கு இந்த மோசமான நிலையில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்