ஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்கிறார் மாலிங்க

1624

தனக்கு வயதானாலும் உடற்தகுதி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்த லசித் மாலிங்க, 10 ஓவர்கள் பந்துவீசி, 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுகின்ற மனஉறுதி இன்னமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.   

இதேநேரம், இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெறுகின்ற எண்ணம் தற்போதைக்கு இல்லை என குறிப்பிட்ட லசித் மாலிங்க, தான் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டியும் இறுதி ஆட்டம் எனவும், திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனால் அது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாகவோ அல்லது கடைசி தொடராகவோ அமைந்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்தார்.

புதிய அணியாக, புதிய சவாலாக ஆசிய கிண்ணத்தை சந்திக்கும் இலங்கை

இம்முறை ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றுகின்ற அணிகளை …

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி, நேற்று மாலை (11) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் டுபாய் நோக்கி பயணமாகினர்.

இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடக் கிடைத்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

நான் காலி மாவட்டம் ரத்கமை என்ற கிராமத்தலிருந்து இருந்து வந்த ஒரு வீரர். நான் கொழும்புக்கு வரும்போது யாரையும் அறிந்திருக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை தேர்வுக்குழு உறுப்பினர்களையோ, பயிற்றுவிப்பாளர்களையோ, அதிகாரிகளையோ தனிப்பட்ட முறையில் நான் தெரிந்து இருக்கவில்லை. எனவே, கடந்த 14 வருடங்களாக பந்துவீச்சில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாகவே தற்போது நான் இந்த இடத்தில் உள்ளேன். இன்றும் எனது பந்துவீச்சை தான் மனப்பூர்வமாக நம்பியுள்ளேன். அந்த தன்னம்பிக்கையுடன் நான் விளையாடி வருகின்றேன்.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் …

இதேநேரம், 50 ஓவர்கள் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதி இருக்கின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாலிங்க கருத்து வெளியிடுகையில்,

எனது உடற்தகுதி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். 10 ஓவர்கள் பந்துவீசி 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுகின்ற மனஉறுதி இன்னமும் என்னிடம் உள்ளது. எனவே, ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடி அதை நிரூபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்என்றார்.

இதுஇவ்வாறிருக்க, உங்களுடைய கடைசி ஒரு நாள் தொடராக ஆசிய கிண்ணப் போட்டிகள் அமையுமா என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

நான் 14 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றேன். எனவே ஒவ்வொரு போட்டியும் எனக்கு இறுதிப் போட்டிதான். தேசிய அணிக்காக 10 அல்லது 15 வருடங்கள் தொடர்ச்சியாக நான் விளையாடவில்லை. அதேபோல, பெரும்பாலான போட்டிகளில் என்னால் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போயிருக்கலாம். எனினும், நான் நீண்டகால குறிக்கோளுடன் விளையாடவில்லை. கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மைதானத்திற்குச் சென்று அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்கவே விளையாடியிருந்தேன்.

ஆனாலும், எனக்கு இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனால் அது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாகவோ அல்லது கடைசி தொடராகவோ அமைந்தாலும் எனக்கு கவலையில்லை. மாறாக, நல்ல நிலையில் இருக்கும் போது அணியிலிருந்து நீக்கினால் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதை தாங்கிக் கொள்ளவோ முடியாதுஎன குறிப்பிட்டார்.

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் …

நான் 23 வயது நிரம்பிய இளம் வீரர் அல்ல. எனக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை மாத்திரமே விளையாட முடியும். ஆனாலும், அண்மையில் நிறைவுக்கு வந்த கனடா குளோபல் லீக் மற்றும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி-20 போட்டித் தொடர் ஆகியவற்றில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தேன். எனவே, ஒரு கிரிக்கெட் வீரராக செய்ய வேண்டிய அனைத்தையும் நான் முழுமையாக செய்து முடித்திருந்தேன். அதன்பிறகும் என்னை அணியில் இணைத்துக்கொள்வதா? இல்லையா? என்ற முடிவு தேர்வுக் குழுவினரின் கைகளில் இருந்தது.  

அதுமாத்திரமின்றி, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகியதாக இருக்கும் போது அந்த காலப்பகுதியில் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதற்காக காத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம் என நான் நினைத்தேன். அதற்காகவே என்னை அணியில் இணைத்துக்கொள்ளுமாறு தேர்வுக்குழுவினருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தேன். இதன்பிரதிபலனாக இலங்கை அணியில் மீண்டும் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரையும் விமர்சித்தமை தொடர்பில் மாலிங்க அண்மைக் காலமாக அதிகமாக ஊடகங்களில் கதைக்கப்பட்டார். இது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

ஒரு வீரராக விளையாட்டை பாதுகாப்பதே எம் அனைவரது தலையாய கடமையாகும். ஒரு ஊடக நிறுவனமொன்றில் அல்லது வேறொரு தொழில்சார் விளையாட்டில் ஈடுபட்டிருந்தால் அதை பாதுகாக்க முயற்சி செய்வேன். ஆனால், தற்போது நான் ஒரு விளையாட்டு வீரர். விளையாட்டை பாதுகாப்பதே எனது நோக்கமாகும். எனது நடவடிக்கைகள் வெளியில் உள்ளவர்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். அதை அவர்களுக்கு பல்வேறு கோணங்களில் விமர்சிக்கலாம். ஆனால் இலங்கை அணியில் உள்ள 15 வீரர்களையும், இலங்கை கிரிக்கெட்டையும் பாதுகாப்பது தான் எனது நோக்கமாகும். எனவே நான் ஒருபோதும் கிரிக்கெட் தொடர்பில் வரம்புமீறி எந்தவொரு கருத்தையும் முன்வைத்தது கிடையாது. ஆனால் அசாதாரணம் ஒன்று இடம்பெற்றால் அதற்காக குரல் கொடுப்பதை நான் ஒருபோதும் நிறுத்தவும் மாட்டேன். இதில் கடந்த 10 மாதங்களில் நான் தெரிவித்த ஒருசில கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் நிறைய மாற்றங்களையும், நல்ல முடிவுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளன. எனவே, கிரிக்கெட் விளையாட்டுக்காக நான் எப்போதும் உண்மையைத்தான் பேசியிருக்கிறேன் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒரு நாள் அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கு வேகப்பந்து வீச்சுதான் முக்கிய காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக அண்மையில் நிறைவுக்குவந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இறுதி 10 ஓவர்களில் எதிரணிக்கு ஓட்டங்களை வாரிவழங்கி அணிக்கு நெருக்கடியையும், தோல்வியையும் பெற்றுக்கொடுப்பதற்கு அனுபவம் குறைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் தான் காரணமாக இருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கூற்றை போட்டியின் பிறகு ஊடகவியலாளர் சந்திப்புக்களில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனாலும், மாலிங்கவின் வெளிப்படையான கருத்துக்கள், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அவரால் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆகியவற்றால் அவரை அணியில் இருந்து புறக்கணிப்பதற்கு கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டன.

“உலகின் மிக மோசமான DRS கணிப்பாளர் கோஹ்லி” : மைக்கல் வோர்கன்

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர் முடிவு மீளாய்வு …

மறுபுறத்தில் மாலிங்க மீண்டும் தேசிய அணியில் இடம்பெறவேண்டுமானால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் தேர்வுக் குழுவின் தலைவர் கிரெஹம் லெப்ரோய் ஆகியோர் பல தடவைகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, அண்மையில் நிறைவுக்கு வந்த எஸ்.எல்.சி டி-20 லீக்கில் லசித் மாலிங்க களமிறங்கியிருந்தார். குறித்த தொடரில் எதிர்பார்த்தளவு விக்கெட்டுக்களை அவரால் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தன்னுடைய உடற்தகுதியினை நிரூபித்துக்காட்டியிருந்ததை காணமுடிந்தது.

இதுஇவ்வாறிருக்க, சுமார் ஒரு வருடங்களுக்குப் பிறகு லசித் மாலிங்கவை மீண்டும் இலங்கை அணியில் இணைத்து கொள்ள தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கையுடன் போர்முக்கு திரும்பி விக்கெட்டுக்களை கைப்பற்றி வருகின்ற மாலிங்கவுக்கு, இந்த ஆசிய கிண்ணம் மறுவாழ்க்கை கொடுக்கும் போட்டித் தொடராக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அதுமாத்திரமின்றி, ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடத்தையும், அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ள லசித் மாலிங்க, தனக்கு கிடைத்த வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்தினால் 2014 டி-20 உலகக் கிண்ணத்தைப் போல ஆசிய கிண்ணத்தையும் இலங்கை அணியால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.