தோல்விகளால் தலைமைப் பதவியிலிருந்து விலகமாட்டேன் – தரங்க

1108
Tharanga

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை பார்த்தால் ஒரு முறை மாத்திரமே 5-0 என வைட் வொஷ் தொடர் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. ஆனால் உபுல் தரங்கவின் தலைமையில் இந்த ஆண்டு இலங்கை அணி மூன்று தடவைகள் 5-0 என தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் அஞ்செலோ மெத்திவ்ஸ் காயமடைந்து அணியில் விளையாடாததால் உபுல் தரங்க தலைமை பொறுப்பை ஏற்றபோதும் இலங்கை அணி 5-0 என படுதோல்வியை சந்தித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் மெத்திவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகிய பின்னர் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணியின் நிரந்தரத் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவிடம் வைட் வொஷ் தோல்வியை சந்தித்ததோடு கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், பாகிஸ்தானிடம் வைட் வொஷ் தோல்வியை எதிர்கொண்டது.

எனினும் இதனை மறுக்கும் உபுல் தரங்க ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, “தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் சபையே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நான் அணியை விட்டு செல்ல விரும்பவில்லை. அணியை யார் வழி நடத்துவது என்பதை கிரிக்கெட் சபை தீர்மானிக்கும்” என்றார்.

“அணித் தலைவர் என்ற வகையில் தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்க விரும்புகிறேன். துடுப்பாட்ட வீரர்களும் கூட இந்தக் குற்றச்சாட்டுக்கு நியாயமான பங்கை ஏற்கவேண்டும். நாம் ஓர் அணியாக செயற்படவேண்டும். துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் பிரகாசிக்காமல் இருக்க முடியும், ஆனால் அனைத்து போட்டிகளிலும் அவ்வாறு இருக்க முடியாது. நாம் ஓர் அணியாக செயற்படாதபோது திறமையை காட்டுவது கடினமாகும்” என்று தரங்க குறிப்பிட்டார்.

துயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

இது இலங்கை அணியின் தொடர்ச்சியான 12 ஆவது ஒருநாள் தோல்வியாகும். இந்த ஆண்டில் இலங்கை அணி விளையாடிய 26 போட்டிகளில் வெறும் நான்கில் மாத்திரமே வென்றுள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்டமே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை அணி கடந்த 12 போட்டிகளிலும் 240 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை அணி இரண்டு தடவைகள் மாத்திரமே 200 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஒரே தவறை நாம் தொடர்ந்து செய்தோம். இந்தப் போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே நாம் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு அது தொடக்கம் நாம் ஆட்டத்திற்கு திரும்பவே இல்லை. கடந்த 15 தொடக்கம் 18 மாதங்களில் எமது துடுப்பாட்டத்தில் நாம் தடுமாற்றம் கண்டு வருகிறோம். நாம் மிக மோசமான திறமையை வெளிக்காட்டி வருவதற்கு அதுவே பிரதான காரணமாக உள்ளது” என்றும் தரங்க கூறினார்.

முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களில் இருவர் மாத்திரமே தொடரில் 75 இற்கும் அதிக ஓட்டங்களைப் பெற முடிந்ததோடு இலங்கை அணியால் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு நெருங்கக் கூட முடியவில்லை. அனைத்து போட்டிகளிலும் அதிக இடைவெளியுடனேயே தோற்றது.

“நாம் அதிகமாக ஆலோசனைகள் செய்தோம். என்ன செய்ய வேண்டும் என்று மதிப்பீடுகளை செய்தோம். ஆனால் ஆடுகளத்தில் அதனை செயற்படுத்த நாம் தவறிவிட்டோம்.

“ஆட முடியாத ஆடுகளங்கள் இருக்கவில்லை என்பதுவே உண்மையிலேயே ஏமாற்றத்திற்குரியதாகும். சிறந்த ஆடுகளங்கள் இருந்தன. நாம் திறமையாக செயற்படவில்லை. இன்று நாம் துடுப்பாட்ட வரிசையில் சிறு மாற்றம் கொண்டு வந்து சுழல்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக செயற்படும் நிரோஷன் திக்வல்லவை ஐந்தாவது இடத்தில் துடுப்பாட அனுப்பினோம். ஆனால் நாம் ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்” என்று தரங்க மேலும் கூறினார்.