தனது நோக்கத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால்

816

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சந்திமால் நிமிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ThePapare.com இற்கு பிரத்தியேகமாக  கருத்துக் கூறிய தினேஷ் சந்திமால், இலங்கை கிரிக்கெட் அணியை உலக தர வரிசையில் முதலிடத்துக்கு கொண்டு வருவதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், ஜிம்பாப்வே அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரின் தோல்வியை அடுத்து, அணித் தலைமைத்துவத்திலிருந்து விலகியதன் காரணமாக, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தினேஷ் சந்திமாலும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைவராக உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால திட்டம் குறித்து புதிய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலிடம் papare.com சார்பாக நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ”எனக்கு இந்த வாய்ப்பினை பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் சபைக்கும் மற்றும் இலங்கை தெரிவுக் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எதிர்காலத்தில் எனக்கு பாரிய பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் என்னுடைய நேரம், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின்  மூலம் என்னுடைய (இலங்கை) அணியை வலுவான நிலைக்கு வழிநடத்த எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறினார்.

எமது தடுமாற்றம் இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் : சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி சிரேஷ்ட வீரர் குமார்..

அணித் தலைவர் என்ற வகையில் இலங்கை அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு கொண்டு செல்வதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அதனை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் செய்வது கடினம்.  முதலில் ஜிம்பாப்வே அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் 6ஆவது இடத்தைக் கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம். எனக்கு இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட சிறந்த அணியொன்று கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அணியை முன்பிருந்த அதே வலுவான நிலைக்கு எடுத்துச் செல்லவே எதிர்பார்த்துள்ளேன்.

அந்த வகையில், தோல்வியின் போதும் வெற்றியின் போதும் எங்களுக்கு ஆதரவளித்து எங்களை உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பருவகாலமானது எங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள காலம். முன்னரைப் போன்றே எங்களுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். என்னுடைய இந்த இளம் வீரர்களுக்கு சுதந்திரமாக விளையாட விட வேண்டும். ஏதாவது குறை இருப்பின் அணித் தலைவர் என்ற ரீதியில் நான் அவற்றினை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளேன்.

குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?

தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ..

”அதேநேரம், எமது வீரர்கள் விரைவில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றேன். ரசிகர்களைப் போன்றே நாமும் போட்டிகளில் வெற்றியை எதிர்பார்த்தே களமிறங்குகின்றோம். இலங்கை அணி விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்பும். தொடர்ந்து உங்கள் ஆதரவை எமக்குத் தருமாறு வேண்டிக்கொள்கின்றேன்” என்று தினேஷ் சந்திமால் இறுதியாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வெற்றி நடையை ஆரம்பிக்க புதிய அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கும் மற்றும் அவர் வழிநடாத்தும் இலங்கை அணிக்கும் ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.