“நான் தவறு செய்துவிட்டேன்” ;  பகிரங்கமாக கூறிய பங்களாதேஷ் நடுவர்

1167
Image Courtesy - The Daily Star

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I  போட்டியின் போது, கள நடுவராக செயற்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த தன்வீர் அஹமட், தவறுதலான முடிவுகளை எடுத்துவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சகீப் அல் ஹசன், கார்லோஸ் பரத்வெயிட் ஆகியோருக்கு இரட்டிப்பு அபராதம்

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளின் தலைவர்கள் …

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில், பங்களாதேஷ் அணி 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடியது. இதன் போது அணியின் நான்காவது ஓவரை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒசேன் தோமஸ் வீசியிருந்தார். இந்த ஓவரின் 5வது பந்தை நோ போல் பந்து (No Ball) என, கள நடுவராக செயற்பட்ட தன்வீர் அஹமட் அறிவித்தார்.

குறித்த நோ போல் பந்துக்காக வழங்கப்பட்ட ப்ரீ இட் (Free Hit) பந்துக்கு லிடன் டாஸ் சிக்ஸரை விளாசினார். எனினும், தோமஸின் பந்துவீச்சு தொலைக்காட்சி மூலம் காட்டப்பட்ட போது குறித்த பந்து நோ போல் பந்து அல்ல என தெளிவாக தெரிவிந்தது. இந்நிலையில், அதே ஓவரின் இறுதிப் பந்தையும் நடுவர் நோ போல் பந்து என குறிப்பிட்டு ப்ரீ இட் வழங்க, குறித்த பந்துக்கும் சிக்ஸர் விளாசப்பட்டது. எனினும், அந்த பந்தும் நோ போல் பந்து இல்லையென தொலைக்காட்சி காணொளியில் தெரிய வந்தது.

இதனால், மேற்கிந்திய தீவுகளின் தலைவர் கார்லோஸ் பிராத்வைட் மற்றும் வீரர்கள் குறித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது 8 நிமிடங்கள் வரை போட்டி இடைநிறுத்தப்பட்டதுடன், கார்லோஸ் பிராத்வைட் நான்காவது நடுவர் மற்றும் போட்டி மத்தியஸ்தரான ஜெப் கிளெவ்ன் ஆகியோருடன் சென்று கலந்துரையாடினார். பின்னர், போட்டி நடைபெற, மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்நிலையில் குறித்த தீர்ப்புகளை வழங்கியிருந்த தன்வீர் அஹமட் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். முதன்முறையாக சர்வதேச தொடரொன்றில் நடுவராக செயற்பட்ட தன்வீர் அஹமட் குறிப்பிடுகையில்,

பங்களாதேஷை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய…

பந்து வீச்சு எல்லையும், பந்து வீசுபவரின் பாதமும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் முடிவுகளை எடுப்பது கடினமாகிவிட்டது. அத்துடன் பந்து வீச்சாளர் வேகமாக பாதத்தினை பதித்து சென்று விடுவதால் அதனை கனிப்பதற்கு மிகவும் கடினம். நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படுவது இதுதான் முதன்முறை. நான் தவறு செய்து விட்டேன்.

நான், உள்ளூர் போட்டிகளில் நடுவராக செயற்பட்ட காலத்தில் எவ்வித தவறான முடிவுகளையும் எடுத்திருக்கவில்லை என்பதை பார்க்க முடியும். நான் ஒரு தவறினை இழைத்துவிட்டேன். இனி தவறுகளை திருத்திக் கொள்வேன். ஒருவருக்கு நல்ல நாள், கெட்ட நாள் என இருக்கும். அன்றைய தினம் எனக்கு கெட்ட தினமாக அமைந்துவிட்டது. நான் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. எனது தவறை பற்றியே இப்போதும் சிந்தித்து வருகிறேன்என்றார்.

இதேவேளை, இரண்டாவது T20I  போட்டியிலும், மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களின் மட்டையில் பட்டு காலில் பட்ட பந்துகளுக்கும் நடுவர்கள் ஆட்டமிழப்பை வழங்கியிருந்தனர். எனினும் DRS  முறையி்ன் ஆட்டமிழப்புகள் இல்லையென உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பிலும் பிராத்வைட் போட்டி மத்தியஸ்தர் ஜெப் கிரௌனிடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.