மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

6374

இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும் …

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.  

இறுதியாக, கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டித் தொடரிலும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் மாத்திரம் வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது இவ்வாறிருக்க, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரஸல் ஆர்னல்ட், ரொஷான் மஹானாம உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இலங்கை அணியின் தோல்வி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், திலகரத்ன டில்ஷான் இவ்வாறானதொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கை அணிக்கு என்னால் ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால் அதை நான் நிச்சயம் செய்வேன். காரணம் உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. அதற்குள் எமது குறைபாடுகளையெல்லாம் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் உலகில் சிறந்த களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என முன்னிலை அணியாக வலம்வந்த இலங்கை தற்போது மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் தோவ்வியைத் தழுவி முதல் சுற்றுடன் ஆசிய கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேறியது உண்மையில் கவலையளிக்கிறது. ஆனால், தற்போதுள்ள வீரர்களை உரிய முறையில் வழிநடத்த வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட இருப்பவர்கள்.

அதுமாத்திரமின்றி, எனக்கு மீண்டும் தேசிய அணியில் இணைந்து விளையாடுவதற்கு எந்த எண்ணமுமில்லை. தற்போது நான் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றேன்.

ஆனாலும், நாட்டுக்கும் இலங்கை அணிக்கும் என்னுடைய சேவை மீண்டும் தேவைப்பட்டால் இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு ஓய்வுபெறும் எண்ணம் இருக்கவில்லை. 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை விளையாடுவதற்கு ஆவலுடன் இருந்தேன். ஏனெனில் அந்தக் காலப்பகுதியில் நான் விளையாடிய விதம், தொடர்ந்து போர்மில் இருந்து ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட விதங்களுடன் தொடர்ந்து விளையாடவே இருந்தேன்.

ஆனாலும் அப்போது என்னை இலக்கு வைத்து ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றன. அதுமாத்திரமின்றி, அப்போதைய தேர்வுக்குழுவினர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். புதுமுக வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து என்னை அணியிலிருந்து நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். எனவே, இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்குவதற்காக நான் ஓய்வுபெற்றேன்” என அவர் தெரிவித்தார்.

”எனக்கு இப்போது அணிக்குள் வந்து பெரியளவில் எதையும் செய்ய முடியாது. ஆனால், ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. குறைந்த பட்சம் எனது அனுபவத்தையாவது பகிர்ந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்” என்றார்.

அதிர்ச்சி தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை

அபுதாபி நகரில் நேற்று (17) நடைபெற்று முடிந்திருக்கும் …

கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து டில்ஷான் ஓய்வுபெறுவதற்கு முன் 330 ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்கள் உள்ளடங்கலாக 10,290 ஓட்டங்களைக் குவித்திருந்தார். ஒரு நாள் போட்டிகளில் 39.27 என்ற துடுப்பாட்ட சராசரியையும், 86.23 என்ற ஓட்ட வேகத்தையும் அவர் கொண்டிருந்தார்.  

அதுமாத்திரமின்றி, இரண்டு வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றுச் சென்ற டில்ஷான், அதன்பிறகு பல்வேறு நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட டி-20 லீக் போட்டிகளிலும் விளையாடி வந்தார்.

அத்துடன், தற்போது நடைபெற்றுவருகின்ற வர்த்தக அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் மாஸ் யுனிச்செல்லா அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.

இதுதொடர்பில் டில்ஷான் மேலும் கருத்து வெளியிடுகையில், ”நான் மாஸ் யுனிச்செல்லா அணிக்காக விளையாடுவதால் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 2019 உலகக் கிண்ணம் தொடர்பிலான கனவை மறந்துவிட்டுதான் கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுத்தேன். ஆனால், அதற்கான ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என தற்போது உணர்கிறேன். சந்தர்ப்பமொன்று கிடைத்தால் நிச்சயம் அதை நான் செய்வேன்” என்றார்.

இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி …

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்ற 41 வயதான டில்ஷானை மீண்டும் தேசிய அணிக்குள் இணைத்துக் கொள்வது என்பது எந்தளவு தூரத்துக்கு சாத்தியமானது என்பதை தேர்வுக் குழுவினர், பயிற்சியாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனாலும், 2015 உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்து 3 வருடங்கள் கழிந்து அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் தொடர் தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு டில்ஷான் போன்ற வீரர்களின் இவ்வாறான அறிவிப்புகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன், அவர்களது கருத்துக்களை செவிமடுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் மேற்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களின் பொதுவான கருத்தாகும்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் தமது நாட்டிற்காக விளையாடிய பல முன்னாள் வீரர்களை கூறமுடியும். பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவித் மியன்டாட், தற்போதைய பிரதமர் இம்ரான் கான், சஹீட் அப்ரிடி, அவுஸ்திரேலியாவின் பொப் சிம்சன், மேற்கிந்திய தீவுகளில் கால் ஹுபர், ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர், கென்யாவின் ஸ்டீவ் டிகோலோ மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகிய வீரர்களும் இவ்வாறு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…