21 வயதாகும்போது இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதே விஷ்வ சதுரங்கவின் எதிர்பார்ப்பு

595
Vishwa chathuranga

பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கித் தந்துள்ள, அதேபோன்று கிரிக்கெட் விளையாட்டில் முன்னணியிலுள்ள பாடசாலைகளை கொண்டுள்ள நகரம்தான் மொரட்டுவ. அந்த வகையில் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் விஷ்வ சதுரங்க இலங்கையின் வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராவார்.

எட்டு வயதில் தனது தந்தையின் வழிகாட்டலுக்கமைய கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கிய விஷ்வ சதுரங்க, பின்னாளில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சிறு வயது முதலே திறமையை வெளிக்காட்டிய விஷ்வ, பாடசாலையின் 13 வயதிற்குட்பட்டோருக்கான அணி சார்பாக 2 சதங்களை குவித்ததுள்ளார். தொடர்ச்சியாக தனது திறமையை வெளிக்காட்டியமையினால் அவர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஹசிம் அம்லாவை கட்டுப்படுத்துவதே இலங்கை அணியின் நோக்கம்

பல எதிர்கால கனவுகளுடன் இருக்கும் அவர் தான் தொடர்பிலான பல விடயங்களை தெரிவித்துள்ளார்.

பாடசாலை கிரிக்கெட்டில் மறக்க முடியாத இன்னிங்சாக, 2016/2017 பருவகாலத்தில் மஹிந்த கல்லூரிக்கு எதிரான போட்டியில் 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதனை அவர் நினைவு கூறினார். “எனது பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் அதுவே மிகவும் சிறப்பான இன்னிங்ஸ் எனலாம். நான் 146 ஓட்டங்களை குவித்தேன். அத்துடன் அப்போட்டியில் நான் அணித்தலைவராக இருந்தமையினால், அதனை என்னால் என்றுமே மறக்க முடியாது.”

விஷ்வ ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் என்ற போதிலும் அவரது முன்மாதிரியாக பிரபல வலது கை துடுப்பாட்ட வீரரான A.B. டி வில்லியர்ஸ் உள்ளார். இது குறித்து, “டி வில்லியர்ஸ் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர். அவர் ஆடுகளத்தின் சகல பக்கங்களிலும் ஓட்டங்களை பெறுவது அற்புதமான விடயமாகும். அவர் வலது கை துடுப்பாட்ட வீரர் என்ற போதிலும், நான் அவரது விளையாட்டுப் பாணியையே ரசிக்கின்றேன்.” என்றார்.

மேலும், இலங்கையின் தலை சிறந்த இடது கை துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரவும் தனக்கு பிடித்தமான மற்றும் முன்மாதிரியான வீரர் என அவர் தெரிவித்தார்.

விளையாட்டைப் போன்றே பாடசாலைக் கல்வியும் முக்கியமானது என்பதை விஷ்வ அறிந்துள்ள நிலையில், கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டிலும் சமனாக கவனம் செலுத்தி வருவதாக கூறினார். “எனது பெற்றோர் பிரத்தியேக வகுப்புக்களுக்காக ஆசிரியர்களை வீட்டிற்கே வரவழைப்பதால் என்னால் கல்வியிலும் கவனம் செலுத்துவது இலகுவாக உள்ளது.”

பாடசாலை அணியில் தான் வெளிக்காட்டிய திறமைகளை பற்றிக் கூறும்போது, “நான் மூன்று வருடங்களாக அணியில் விளையாடி வருகின்றேன். முதலாம் வருடம் 300+ ஓட்டங்களையும், கடந்த வருடம் 500+ ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதுடன் இம்முறை இதுவரையில் 600+ ஓட்டங்களை பெற்றுள்ளேன்” என்றார்.

பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுத்தொடரில் வெளிக்காட்டிய திறமையை தொடர்ந்து விஷ்வ சதுரங்க இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் உள்ளவாங்sகப்பட்டார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் இவர் 81 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

இஸ்ஸதீனின் இரு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்ற ராணுவப்படை

தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண தொடரின் இலங்கை குழாமில் இவர் இடம்பிடித்ததுடன், இச்சுற்றுப்போட்டியில் இலங்கை அணி சார்பாக இவரே அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இது தொடர்பில் அவர் “ஆசிய கிண்ணத் தொடர் சிறந்த அனுபவமாக அமைந்தது. இத்தொடரில் நான் மொத்தமாக 193 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், இரண்டு போட்டிகளில் தலா 68 ஓட்டங்கள் வீதம் குவித்தேன்” என்றார்.

19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் தான் கற்றுக் கொண்ட விடயங்கள் பற்றி வினவிய போது, “போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் முதல் அனைத்து ஆயத்தங்களும் பாடசாலை மட்ட போட்டிகளை விட கடினமானதாகவே காணப்படும். எனினும் அதன் கடினத்தன்மை காரணமாக போட்டிகளின் போது உடல் உளைச்சலை பெரிதாக உணர முடியாது. துடுப்பாட்டத்திலும் நான் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். எச்சரிக்கையாகவும் கவனமாகவும் துடுப்பெடுத்தாடுதல், பௌண்டரிகள் மட்டுமன்றி சிறு ஓட்டங்களை பெறுவதிலும் கவனம் செலுத்துதல் என்பவற்றை கற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

இவரது 19 வயதிற்குட்பட்ட இறுதி தொடராக 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகள் அமையவுள்ளதால் அது தொடர்பாகவும் இவர் கருத்து வெளியிட்டார். “தென்னாபிரிக்காவில் அதிக வேகமான ஆடுகளங்கள் காணப்படும். நான் எனக்கே உரித்தான விளையாட்டுப் பாணியையே அங்கும் தொடர உள்ளேன். 3-4 போட்டிகளில் அரைச்சதங்களை குவிப்பதே எனது எதிர்பார்ப்பு.”

தனது இலக்கு குறித்து தெரிவித்த அவர், “எனது முக்கிய இலக்கு 21 வயதாகும்போது இலங்கை அணியில் இடம்பிடித்து, கிரிக்கெட்டுடன் சார்ந்ததாக எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதே ஆகும்” என்றார்.

இறுதியாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு உதவியர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். “முதலில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட என்னை ஊக்குவித்த எனது தாய் மற்றும் தந்தைக்கு என நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது முதல் பயிற்றுவிப்பாளரான சுரங்க பெரேரா ஒரு சிறந்த ஆலோசகராக இருந்தார். அது தவிர, அனைத்து முன்னைய மற்றும் தற்போதைய பயிற்றுவிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதேபோல் எனது குடும்ப அங்கத்தவர்கள், அணியின் மற்றைய வீரர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை படிக்க