கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்து, மாத்தளை புனித தோமஸ் கல்லூரி தொடர்ந்தும் இரண்டாவது முறையாக எரிக் ஹுலன்கமுவ ஹொக்கி கிண்ணத்தை தம்வசப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டும் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியை வெற்றிக்கொண்டிருந்த நிலையில், அதே அணிகள் நேற்று மாலை கொழும்பு ஆஸ்ட்ரோ ஹொக்கி அரங்கில் இவ்வருடத்திற்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான முன்னாள் தேசிய ஹொக்கி வீரர் எரிக் ஹுலன்கமுவின் ஞாபககார்த்த கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் விளையாடின.

கல்கிஸ்ஸ அணியின் முன்வரிசை ஆட்டக்காரரான நாலபெரும, தனது அணியை இம்முறை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அணியினரின் சிறந்த தடுப்புகள் காரணமாக நாலபெருமவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் போட்டியின் முதல் பாதியில் கடைசி நிமிடங்களில், இடப்பக்க முன்வரிசை வீரர்களால் D வட்டத்துக்குள் குறுக்காக உள் செலுத்திய பந்தை திசைதிருப்பி மாத்தளை புனித தோமஸ் கல்லூரி வீரர்கள் கோலாக மாற்றிக்கொண்டனர்.

முதல் கோலை பெற்றுக்கொண்ட உத்வேகத்தில் போட்டியின் இரண்டாம் பாதியில் மிகவும் லாவகமாக மாத்தளை புனித தோமஸ் கல்லூரி விளையாடி, தமது பார்வையாளர்களை உட்சாகப்படுத்தியது. கல்கிஸ்ஸ புனித தோமஸ் அணிக்கு நான்கு பெனால்டி கோனர் வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த வாய்ப்புக்களை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தவறினர்.

பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இரண்டாவது பாதியில் இரு அணிகளாலும் எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் சிறந்த வீரராக மாத்தளை புனித தோமஸ் கல்லூரி அணியின் T.C.S. பண்டார, நடுவர் குழுவால் தெரிவு செய்யப்பட்டார்.

அதே நேரம் 15 வயதுகுட்பட்ட ஹொக்கி போட்டியில், மாத்தளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரி ஆகிய மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் பெறாமையினால் 0-0 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் முடிவுற்றமை குறிப்பிபிடத் தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்