இலங்கையின் 12 வருட உலக சாதனையை முறியடித்த பாகிஸ்தான்

2023

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று (20) புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கிய பக்ஹர் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக், ஒரு நாள் போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுக்காக அதிகூடிய ஓட்டங்களை பகிர்ந்து உலக சாதனைப் படைத்துள்ளதுடன், தங்களது அணியின் அதிகூடிய ஒரு நாள் ஓட்டங்களை பதிவுசெய்யவும் உதவியுள்ளனர்.

வருடத்தின் முதலாவது ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, இன்று ஆரம்பமாகிய நான்காவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.  ஆரம்பம் முதல் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களை பக்ஹர் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி மிரட்டியது. விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஆடிய குறித்த இருவரும் சதமடித்தனர்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பக்ஹர் ஷமான் முதலில் தனது சதத்தை அடித்து களத்தில் நிற்க, தொடர்ந்து இமாம் உல் ஹக் சதம் கடந்தார். சதம் கடந்தும் இருவரும் நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பக்ஹர் ஷமான் தனது ஒரு நாள் வாழ்வின் முதலாவது 150 ஓட்டங்களை 115 பந்துகளில் பெற்றுக்கொண்டார். இவ்வாறு ஓட்டங்களை குவித்த இருவரும் 39.3 ஓவரில் இணைப்பாட்டமாக 287 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, சனத் ஜயசூரிய மற்றும் தரங்க ஆகியோர் கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் பெற்றிருந்த 286 என்ற முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட உலக சாதனையை முறியடித்தனர்.

தொடர்ந்தும் பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள் விரைவாக உயர்த்தப்பட இமாம் உல் ஹக், 42 ஓவரில் தனது விக்கெட்டினை வெலிங்டன் மசகட்ஷாவிடம் பறிகொடுத்து, சாதனை இணைப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இமாம் உல் ஹக் 122 பந்துகளை எதிர்கொண்டு, எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி 304 என்ற முதல் விக்கெட் இணைப்பாட்ட உலக சாதனையை பதிவுசெய்தது.

காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

ஒரு நாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்காக அதிக ஓட்டங்களை இணைப்பாட்டாக பெற்ற வரிசையில் தற்போது 304 ஓட்டங்களுடன் பக்ஹர் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால், இலங்கை அணியின் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஜோடி 286 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் மற்றும் ட்ராவிஷ் ஹெட் 284 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி பக்ஹர் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோரின் இன்றைய இணைப்பாட்டமானது, பாகிஸ்தான் அணியின் அதிகூடிய முதல் விக்கெட் இணைப்பாட்டமாகும். இதற்கு முதல் பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹபீஸ் மற்றும் இம்ரான் பர்ஹாட் ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரே மைதானத்தில் இணைப்பாட்டமாக 228 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இவர்களது இந்த இணைப்பாட்டம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டம் என்ற சாதனைப்பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கிரிஸ் கெயில் மற்றும் சேமியல்ஸ் 372 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்த இடத்தை கங்குலி மற்றும் ட்ராவிட் ஜோடி பிடித்துள்ளது. இவர்கள் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 2ஆவது விக்கெட்டுக்காக 318 ஓட்டங்களை குவித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாகவே பக்ஹர் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோரின் இன்றைய சாதனை ஓட்டம் பதிவாகியுள்ளது.

ரசிகர்களிடம் முதன்முறையாக வெறுப்பை சம்பாதித்த ஏபி டி வில்லியர்ஸ்

இவர்களது இணைப்பாட்ட சாதனையை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தங்களது அதிகூடிய ஒரு நாள் ஓட்ட சாதனையை நிலை நாட்டியதுடன், பக்ஹர் ஷமான், பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் பதிவுசெய்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தம்புள்ளையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 385 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 399 ஓட்டங்களை குவித்து, தங்களது சாதனையை புதுப்பித்துள்ளது.

இந்த சாதனையுடன் பக்ஹர் ஷமான் இன்று தனது முதலாவது ஒரு நாள் இரட்டை சதத்தை (210*) கடந்து, பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும், அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

சயீட் அன்வர் 1997ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 194 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், குறித்த ஓட்ட எண்ணிக்கையை பக்ஹர் ஷமான் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க