இந்த ஆண்டும் பலத்த எதிர்ப்பார்ப்புக்களோடு இடம்பெறும் ஆனந்த – நாலந்த மோதல்

152

கிரிக்கெட்டின் பித்துக்காலத்தினை (March Madness) அலங்கரிக்கும் மற்றுமொரு கிரிக்கெட் பெரும் போட்டியான பழுப்பு வர்ணங்களின் சமர் (Battle of the Maroons), இந்த ஆண்டு 90ஆவது தடவையாக மார்ச் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறுகின்றது.

  • கடந்த கால வரலாறு

முதன் முறையாக 1924ஆம் ஆண்டில் விளையாடப்பட்டிருந்த இந்த கிரிக்கெட் பெரும் போட்டி இதுவரை 89 தடவைகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 19 தடவைகள் மாத்திரமே போட்டி முடிவு ஒன்று கிடைத்திருக்கின்றது. கடைசியாக 2003ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரியே, இந்த கிரிக்கெட் பெரும் போட்டிக்கான வெற்றிக் கிண்ணமான “வைத்தியகாலநிதி N.M. பெரேரா” கிண்ணத்தை தற்போது தக்க வைத்துக்கொண்டுஉள்ளது.

அதிக ஓட்டங்கள் குவிக்க எதிர்பார்க்கப்படும் இம்முறை புனிதர்களின் சமர்

புனிதர்களின் சமர் என அழைக்கப்படும்….

ஆனந்த கல்லூரி அணி குறித்த வெற்றிக் கிண்ணத்தை சஞ்சய கங்கொடவிலவின் தலைமையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேநேரம், இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் நாலந்த வீரர்கள் 1953ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்தவொரு வெற்றியினையும் பதிவு செய்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக சாந்த கலவிட்டகொட காணப்படுகின்றார். நாலந்த கல்லூரி வீரரான கலவிட்டகொட இந்த அதிகபட்ச இன்னிங்ஸ் ஓட்டங்களை 1997ஆம் ஆண்டில் 149 ஓட்டங்களுடன் பதிவு செய்திருந்தார். இதேநேரம், ஆனந்த கல்லூரி சார்பில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக திலின கண்டம்பி காணப்படுகின்றார். கண்டம்பி, 1999ஆம் ஆண்டில் 147 ஓட்டங்களுடன் இந்த பதிவினை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் பின்னர் விளையாடிய திலின கண்டம்பி ஆனந்தநாலந்த கல்லூரிகள் இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராகவும் இருக்கின்றார்.

இதேநேரம், இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பிரதி நாலந்த வீரர் யோகான் குணசேகரவினால் பதிவு செய்யப்பட்டிருந்தது. யோஹான் குணசேகர 1976ஆம் ஆண்டில் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். மறுமுனையில் ஆனந்த கல்லூரியில் P.W. பெரேரா இன்னிங்ஸ் ஒன்றில் சிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்த வீரராக காணப்படுகின்றார்.

Photos: Ananda – Nalanda Annual Cricket Encounter 2019 – Press Conference

ThePapare.com | Viraj Kothalawala | 26/02/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

அதேவேளை, இந்த கிரிக்கெட் பெரும் போட்டி ஒன்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்கிற பெருமையை நாலந்த வீரரான அனுர ரணசிங்க தன்னகத்தே கொண்டிருக்கின்றார். அனுர ரணசிங்க 1976ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் பெரும் போட்டியில் 67 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ஆனந்த கல்லூரி

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் பெரும் போட்டியில் ஆனந்த கல்லூரி அணி, கடந்த ஆண்டு கிரிக்கெட் பெரும் போட்டியில் சதம் ஒன்றினைப் பெற்ற கமேஷ் நிர்மாலினால் வழிநடாத்தப்படுகின்றது. நிர்மாலுக்கு முன்னர் அவரின் சகோதரரான தினேஷ் சந்திமாலே ஆனந்தநாலந்த கல்லூரிகள் இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டியில் சதம் கடந்த வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்வரிசையில் துடுப்பாடும் கமேஷ் நிர்மால் இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட் தொடரிலும் 1,000 இற்கு மேலான ஓட்டங்களை பெற்றிருக்கின்றார்.

இதேநேரம், ஆனந்த கல்லூரியின் துடுப்பாட்டம் கமேஷ் நிர்மாலோடு மட்டுமில்லாது கனிஷ்க ரண்திலக்க, கலன விஜேசிரி மற்றும் தமிந்த ரேஷான் ஆகியோரினாலும் பலப்படுத்தப்படுகின்றது.

இதில் ரண்திலக்க மற்றும் விஜேசிரி ஆகியோர் பாடசாலைகளுக்கான இந்தப் பருவகாலத்தில் ஓட்ட மழை பொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டம் ஒரு புறமிருக்க ஆனந்த கல்லூரியின் பந்துவீச்சு துறையினை அதன் உபதலைவரான சாமிக்க குணசேகர வலுப்படுத்துகின்றார். வேகப்பந்து வீச்சாளரான குணசேகர அண்மைக்காலமாக பாடசாலை கிரிக்கெட்டில் ஜொலிக்காத போதிலும் ஆனந்த கல்லூரிக்கு எப்போதும் வலுச்சேர்க்கும் ஒருவராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Photos: Ananda College U19 Cricket Team Preview 2018/19

ThePapare.com | Sharmeegan Sridheran | 26/02/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

இதேநேரம், ஜனிது ஜயவர்தன மற்றும் சவிரு பண்டார ஆகியோர் சுழல் வீரர்களாக ஆனந்த கல்லூரிக்கு வலுச்சேர்க்கவிருக்கின்றனர். இதில், ஜனிது ஜயவர்தன இந்தப்பருவகாலத்தில் 41 விக்கெட்டுகளையும் பண்டார 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • நாலந்த கல்லூரி

இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் நாலந்த அணியானது லக்ஷித மனசிங்கவினால் வழிநடாத்தப்படுகின்றது. சகலதுறை வீரரான மனசிங்க இந்தப் பருவகாலத்தில் 62.1 என்கிற சராசரியுடன் 1,117 ஓட்டங்களை குவித்திருக்கின்றார். இதற்குள் 5 சதங்களும், 4 அரைச்சதங்களும் அடங்குகின்றன. இதேநேரம், பந்துவீச்சில் மனசிங்க இந்தப் பருவகாலத்தில் 70 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

லக்ஷித மனசிங்க ஒரு புறமிருக்க நாலந்த கல்லூரிக்கு துடுப்பாட்ட வீரராக பலம் சேர்க்க அவிஷ்க பெரேரா, ரனின்து டி சில்வா ஆகியோர் மற்றும் டில்ஹார பொல்கம்பொல  ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர். இந்த மூன்று வீரர்களும் இந்த பருவகாலத்தில் நாலந்த கல்லூரியின் ஓட்ட இயந்திரங்களாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: Nalanda College U19 Cricket Team Preview 2018/19

ThePapare.com | Waruna Lakmal | 26/02/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

அதேவேளை, இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தினேத் சமரவீர நாலந்த கல்லூரி அணிக்காக விக்கெட்டுகளை சாய்க்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராக இருக்க, இலங்கை கனிஷ்ட அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான சமிந்து விஜேசிங்கவும் நம்பிக்கை தருகின்றார். இவர்களோடு இடதுகை சுழல் வீரரான கவிஷ மதுரப்பெருமவும் நாலந்த அணிக்காக பலம் சேர்க்க கூடியவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களில் மதுரப்பெரும இந்த பருவகாலத்தில் 60 விக்கெட்டுகளை சாய்த்திருப்பதோடு, சமிந்த விஜேசிங்க 42 விக்கெட்டுக்களுடன் 400 ஓட்டங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • இறுதியாக…  

இரண்டு பாடசாலை அணிகளும் போராடக்கூடிய கிரிக்கெட் வீரர்களை கொண்டிருப்பதால் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் பெரும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கை கனிஷ்ட அணி வீரர்கள் சிலரை கொண்டிருப்பதாலும், பலம் வாய்ந்த அணிக்குழாத்தை கொண்டிருப்பதாலும் நாலந்த கிரிக்கெட் அணி இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் சிறிது ஆதிக்கம் செலுத்தும் எனவும் கூறப்படுகின்றது.

இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை ThePapare.com ஊடாகவும் டயலொக் அலைவரிசை 77 ஊடாகவும், MyTV செயலி ஊடாகவும் இரசிகர்களுக்கு கண்டுகளிக்க முடியும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<