சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு

394

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் …

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் அவர் விளங்கினார்.  

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நாளை (12) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போட்டிகள் தனது இறுதிப் போட்டியாக அமையலாம் என ஹேரத் தெரிவித்தார்.   

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை அணிக்காக நீண்ட காலம் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் 11 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். ஆனாலும், ஏழு வருடங்கள் நான் கிரிக்கெட் கழகங்களுக்காக மாத்திரம் விளையாடி வந்தேன். அப்போது நான் பந்துவீச்சு தொடர்பான பல நுட்பங்களையும், விடயங்களையும் உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதன் பிரதிபலனாகவே இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜூலை 12 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருக்கும் …

எந்தவொரு வீரருக்கும் விளையாட்டை நிறுத்துவதற்கான காலம் வரும். அதேபோன்றதொரு தீர்மானத்தை எடுப்பதற்கான காலம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேர்வுக்குழு, பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எனது இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்த்துள்ளேன்.

பெரும்பாலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடர் எனது இறுதி சர்வதேச போட்டித் தொடராக அமையும் என நம்புவதாக” அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் வலது கையின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடவில்லை. தற்போது அவரது உபாதை குறித்து கருத்து வெளியிட்ட போது,

உண்மையில் எனது உபாதை 100 சதவீதம் குணமடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக நான் பயிற்சிகளில் ஈடுபட்டேன். எனவே, இந்தப் போட்டித் தொடருக்கு நான் சிறப்பான முறையில் தயாராகியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியில் தற்போது உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து திருப்தியடைகின்றீர்களா என்ற கேள்விக்கு ஹேரத் பதிலளிக்கையில், ”உண்மையில் டில்ருவன் பெரேரா நீண்ட காலமாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றார். அவருடைய அனுபவங்கள் எதிர்வரும் காலங்களில் அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகென் ஆகிய இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அவருடன் இணைந்து இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் இணையவுள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். எனவே, எதிர்காலத்தில் இன்னும் திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியில் உருவாகுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் மற்றுமொரு சாதனை படைத்தார். இலங்கை அணிக்காக அதிக காலங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.  

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க (18 வருடங்கள் 175 நாட்கள்) இலங்கை அணிக்காக அதிக காலங்கள் விளையாடிய வீரராக முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கலக்கப்போகும் திஸர பெரேரா

இங்கிலாந்து உள்ளூர் கழகமான க்ளொஸ்டர்…

இறுதியாக, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டித் தொடர் குறித்து ஹேரத் கருத்து தெரிவிக்கையில், ”நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், டெஸ்ட் தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணியுடன் நாங்கள் விளையாடவுள்ளோம். ஆனாலும் நாம் இலங்கையில் விளையாடுகின்ற காரணத்தினால் எமக்கு நிறைய சாதகங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட ஹேரத், தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 97 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அதன்போது, ஹேரத் வீசிய பந்தில் ரொமேஷ் களுவிதாரனவின் பிடிகொடுத்து அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய தலைவர் ஸ்டீவ் வோவ் ஆட்டமிழந்தார். இதுதான் ஹேரத்தின் முதல் டெஸ்ட் விக்கெட்டாகவும் அமைந்திருந்தது.  

தற்போது 40 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக இன்று வரை 90  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன், இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 400 டெஸ்ட் விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டிய 2ஆவது வீரராகவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…