இலங்கையின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் ஹேரத்திற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமான முறையில் செய்யப்பட்டுவிட்டன.

காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை முடித்துள்ளதால் ரங்கன ஹேரத்தும் தன்னுடையை பந்துவீச்சினை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முழுமையாக நிறைவு செய்துள்ளார். இப்போட்டியில் மொத்தமாக மூன்று விக்கெட்டுக்களை சாய்த்துள்ள ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 433 விக்கெட்டுக்களை 28.07 என்ற சராசரியுடன் கைப்பற்றியிருக்கின்றார்.

இலங்கைக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

இதுமட்டுமின்றி, ஹேரத் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 8ஆவது இடத்தில் இருந்தவாறும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்.

டெஸ்ட் போட்டிகளில் இப்படியாக பாரிய சேவை ஒன்றினை இலங்கை அணிக்காக ஹேரத் ஆற்றிய போதிலும் மகிழ்ச்சியான ஒரு ஓய்வு அவருக்கு இந்த டெஸ்ட் போட்டி மூலம் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்திருக்கிறது.  ஏனெனில், இலங்கை அணி கடந்த மூன்று நாட்களிலும் காலி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பினை படிப்படியாக இழந்து வந்திருக்கின்றது.

ரங்கன ஹேரத்திற்கு நல்ல பிரியாவிடை ஒன்றை கொடுக்க வேண்டுமாயின், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏதாவது அதிசயங்கள் செய்ய வேண்டும். அல்லது மழையினால் எஞ்சிய நாட்களின் ஆட்டம் தடைப்பட்டு போட்டி சமநிலை அடைய வேண்டும். இலங்கையில் இப்போது மாரி காலம் என்ற போதிலும் காலி டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் மழை பெய்யவில்லை. இப்போட்டியின் எஞ்சிய நாட்களிலும் மழை பெய்யாது போனால் இலங்கை அணியின் சுழல் நாயகனுக்கு நல்ல பிரியாவிடை ஒன்றை கொடுப்பதும் கொடுக்காமல் போவதும் துடுப்பாட்ட வீரர்களின் கைகளிலேயே இருக்கும்.

காலி டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்காக உள்ள 462 ஓட்டங்களை ஒருவேளை இலங்கை அணி அடையும் எனில் அது உலக சாதனையாக மாறும் என்பதோடு ஹேரத்திற்கு கொடுக்கும் மிகச் சிறந்த பிரியாவிடைப் பரிசாகவும் இருக்கும்.

ஆனால் நிலைமைகளைப் பார்க்கும் போது காலி மைதானத்தில் இதற்கு முன்னர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடி அவை எதிலும் வெற்றி பெறாத இங்கிலாந்து அணியினர், காலி மைதானத்தில் தமது முதல் டெஸ்ட் வெற்றியை சுவைத்து விடுவார்கள் போலவே உள்ளது.

இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாளின் முதல் இடைவேளை தவிர போட்டியின் ஏனைய எட்டு இடைவேளைகளிலும் முழு ஆதிக்கத்தை காட்டியிருந்தது. ஆனால், போட்டியில் ஆரம்பத்தில் அசத்திய இலங்கை அணிக்கு போட்டியினை எதிரணிக்கு கொடுக்கும் அளவுக்கு என்ன நடந்தது? ஒருவேளை இலங்கை அணி துடுப்பாட்டத்தில் விட்ட தவறுகள் போட்டி இங்கிலாந்தின் கைக்கு மாறும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் குறைந்தது 90 அல்லது 100 ஓவர்கள் விளையாடியிருந்தால் நிலைமையை ஓரளவு சமாளித்திருக்கலாம்.

மறுமுனையில் இங்கிலாந்து அணியினை எடுத்துப் பார்க்கும் போது அவர்கள் மொத்தமாக 190 ஓவர்கள் ஆடியிருந்ததோடு அவ்வணி வீரர்களில் இருவர் சதங்களையும் குவித்திருக்கின்றனர். ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஒரேயொரு வீரர் மட்டுமே அரைச்சதம் பெற்றிருந்தார்.

இந்த கோடைகாலத்தில் இங்கிலாந்தின் சொந்த மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை காண்பித்திருந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான கீட்டோன் ஜென்னிங்ஸ் காலி டெஸ்ட் போட்டியில் சதம் பெற்று தன்னை உள்வாங்கிய தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி நடந்து இருக்கின்றார். இப்போட்டியில் ஜென்னிங்ஸ் பெற்ற சதம் அவருடைய இரண்டாவது டெஸ்ட் சதம் என்பதோடு இதற்கு முன்னர் பெறப்பட்ட அவரின் டெஸ்ட் சதமும் ஆசிய துணைக்கண்ட நாடு ஒன்றிலேயே கிடைத்தது. இது கீட்டோன் ஜென்னிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் திறமையான ஒருவர் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி

போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி நடுவர் தீர்ப்பை மீளாய்வு செய்வதில் சில தவறுகளை விட்டிருந்தது. இதனால் போட்டியின் மூன்றாம் நாளில் சற்று அவதானமாக இருந்த இலங்கை வீரர்கள் நடுவர் தீர்ப்பு மீளாய்வு முறையை பயன்படுத்த தவறியிருந்தனர். இதனால் ஜென்னிங்ஸ் சில பிழையான நடுவர் தீர்ப்புக்கள் மூலம் தப்பித்திருந்தார். எது எப்படியாயினும் கீட்டோன் ஜென்னிங்ஸ் மிக நீண்ட நேரம் துடுப்பாட கூடியவர் என்பதை நிரூபிக்க தவறவில்லை.

இப்போட்டியில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக துடுப்பாடிய ஜென்னிங்ஸ் தன்னால் முடிந்த எல்லா விதமான துடுப்பாட்ட பாணிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போட்டியில் ஜென்னிங்ஸ் துடுப்பாடிய விதம் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்கும் சதங்கள் பெறுவதற்குரிய துணுக்குகள் சிலவற்றை விட்டுச் சென்றிருந்தது.  இந்த துணுக்குகளை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சரியாக இனம்கண்டு இப்போட்டியின் எஞ்சிய நாட்களில் ஓட்டங்களை குவிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  

போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணி உண்மையில் இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுக்களையும் விரைவாக கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால், இலங்கை அணி அதனை செய்யத் தவறி முழு ஆதிக்கத்தையும் இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.

இங்கிலாந்து அணி போட்டியின் ஆதிக்கத்தை முழுமையாக எடுத்தமைக்கு இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் தசை உபாதை ஒன்றினால் மூன்றாம் நாள் ஆட்டத்தில் மைதானத்திற்கு வராததும் ஒரு காரணமாகும். சந்திமால் இல்லாத இலங்கை அணிக்கு தலைவராக செயற்படும் பொறுப்பு தான் இலங்கை அணித்தலைவராக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை வெற்றி பெறச் செய்த சுரங்க லக்மாலுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், என்ன செய்ய? இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே 139 ஓட்டங்களால் முன்னிலை பெற்றதால் போட்டியில் இலங்கை வீரர்களால் ஒரு நல்ல நிலையினைப் பெற முடியவில்லை.

எனினும் ஒரே ஆறுதலாக இருந்தது இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேன்ஸின் ரன் அவுட் செய்த இலங்கை அணியின் களத்தடுப்பாகும். இதன் மூலம் கடந்த காலங்களில் களத்தடுப்பில் மோசமாக செயற்பட்ட இலங்கை அணி தற்போது முன்னேற்றத்தினை காண்பித்திருக்கின்றது.

இலங்கை அணிக்கு இப்போட்டியில் வெற்றிபெற மிகப் பெரிய வேலை ஒன்று எஞ்சியிருக்கின்றது. காலி மைதானம் எதிர்பார்த்த அளவிற்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக அமையாத காரணத்தினால் இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை செய்வதை இயலாத விடயமாக நினைக்க தேவையில்லை என இலங்கை அணியின் சுழல்பந்து பயிற்றுவிப்பாளார் பியால் விஜேதுங்க தெரிவித்திருக்கின்றார்.

பயிற்றுவிப்பாளார்கள் நம்புவது ஒரு புறமிருக்க இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இப்போட்டியில் எஞ்சியிருக்கும் இரண்டு நாட்களிலும் ஸ்திரமாக இருந்தாலே நல்ல சவால் ஒன்றினை எதிரணிக்கு வழங்கி போட்டியில் வெற்றி பெற முடியும்.

AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்து அணி வீரர் கீட்டன் ஜென்னிங்ஸின் துடுப்பாட்டத்தில் இருந்து துணுக்குகள் சிலவற்றை கற்றிருப்பார்கள் எனில் எஞ்சிய இரண்டு நாட்களில் இப்போட்டியில் நல்ல முடிவு ஒன்றினைப் பெற்று ரங்கன ஹேரத்திற்கும் மிக மகிழ்ச்சியான பிரியாவிடை ஒன்றை கொடுக்க முடியும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<