இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஹேமந்த தேவப்பிரிய நியமனம்

320
Hemantha Devapriya appointed as Head Coach for Sri Lanka Women’s Team

முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஹேமந்த தேவப்பிரிய, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரான ஹேமந்த தேவப்பிரிய முதல் முறையாக 1980/81ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 வயதுக்குட்பட்ட இலங்கை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

1981ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் தர போட்டிகளிலும், தொடர்ந்து 1982/83ஆம் ஆண்டு ஆரோசா இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியும், பின்னர் 1988/89 முதல் 1995/96ஆம் ஆண்டு வரை கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் தென் மாகாண அணிக்காகவும் அவர் விளையாடினார்.

1980ஆம் ஆண்டு காலி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான ஹேமந்த தேவப்பிரிய, அதில் அதிரடியாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 1981ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மேலும் பல அரைசதங்கள் உட்பட அதிகூடிய ஓட்டங்களை குவித்தார்.

தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர்கள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அந்த வேளையில், 1982ஆம் ஆண்டு ஒக்டோபர்-டிசம்பர் மாதங்களில் ஆரோசா இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமையினால் அவ்வணிக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, அவ்வணிக்கு உத்தியோகபூர்வ போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, ஹேமந்த தேவப்பிரியவிற்கும் அதன் பின்னர் சர்வதேச பொட்டிகளில் விளையாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

தனது குறுகிய முதல் தர கிரிக்கெட் வாழ்கையில், 70 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 1761 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன், ஹேமந்த தேவப்பிரிய ECB, III ஆம் தர பயிற்சியாளர் தகுதியினை கொண்டிருப்பதோடு, இலங்கையில் இரண்டாம் நிலை சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளராகவும் உள்ளார்.

மேலும், கடந்த 15 வருடங்களாக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் இவர், கொழும்பு கிரிக்கெட் கழகம், என்.சி.சி, பியங்கர கிரிக்கெட் சங்கம் என்பவற்றில் சேவையாற்றினார். அண்மைக் காலங்களில் புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் சங்கத்திலும் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமை பயிற்சியாளராக கடமையாற்றி வந்த முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான லங்கா டி சில்வாவுக்கு பதிலாகவே ஹேமந்த தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.