இங்கிலாந்துடனான தோல்விக்கு டோனி காரணமா?: கோஹ்லி விளக்கம்

2602
Getty

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மஹேந்திர சிங் டோனி தன்னால் முடிந்த அளவு போராடியதாகத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி, டோனி மற்றும் கேதர் யாதவ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் விளையாடிய விதம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். 

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று (30) நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது

இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 337 ஓட்டங்களைக் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கை இந்திய அணி பொறுமையாக ஆடியது. ஆனால், இந்திய அணியால் எவ்வளவு முயன்றும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது.

கடைசி நேரத்தில், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதும், கேதர் ஜாதவ் மற்றும் டோனியின் ஆமை வேக துடுப்பாட்டமும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன

இதன்மூலம் உலகக் கிண்ணத்தில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம்வந்த இந்தியா தனது முதல் தோல்வியை சந்தித்தது. மறுபுறத்தில் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது

இந்த நிலையில், இங்கிலாந்து அணியுடனான தோல்விக்கு டோனியின் பொறுமையான ஆட்டம் தான் காரணம் என வழக்கம் போல விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து பேசிய விராட் கோஹ்லி டோனி தன்னால் முடிந்த வரை போராடியதாக தெரிவித்துள்ளார்.

போட்டியின் பிறகு பேசிய விராட் கோஹ்லி, டோனி தன்னால் முடிந்த வரை போராடினார். அவர் பௌண்டரிகள் அடிக்க தன்னால் முடிந்த அளவிற்கு முயற்சித்ததாக நினைக்கிறேன். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினர். இக்கட்டான கடைசி கட்டத்தில் நினைத்த துடுப்பாட்ட பிரயோகங்களை எல்லாம் அடித்துவிட முடியாது. ஆனாலும், டோனி மற்றும் கேதர் யாதவ் ஆகிய இருவரும் விளையாடிய விதம் குறித்து உட்கார்ந்து மதிப்பீடு செய்தால் நன்றாக இருக்கும்என குறிப்பிட்டார்

இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவும், ரிஷப் பான்ட்டும் இணைந்து துடுப்பெடுத்தாடிய போது ஒரு கட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணியை வீழ்த்தும் என்ற ஒரு நிலையும் ஏற்பட்டது. இது குறித்து கோலி குறிப்பிடுகையில்

வெற்றிக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து அணியின் உடைமாற்றும் அறையில் பதற்றமும் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தோம்.  

ஆனால், நாங்கள் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் இவ்வாறானதொரு மிகப் பெரிய இலக்கை துரத்தியடிப்பது கடினமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டோம்

அவர்கள் சரியான இலக்குகளை நோக்கி பந்து வீசினர். இதனால் இறுதிவரை துடுப்பெடுத்தாவது என்பது மிகவும் கடினமான விடயமாகும். எனவே அடுத்த ஆட்டத்தில் நாங்கள் இதுதொடர்பில் மதிப்பீடு செய்து விடயங்களை மேம்படுத்த வேண்டும்என தெரிவித்தார்.

இந்திய பந்துவீச்சுக்கு எதிரான முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 13 சிக்ஸர்களை அடித்தாலும், இந்திய வீரர்களால் ஒரேயொரு சிக்ஸர் மாத்திரமே அடிக்க முடிந்தது, அதுவும் இறுதி ஓவரில். எட்ஜ்பெஸ்டன் மைதானத்தில் மிகக் குறுகிய பௌண்டரி எல்லை 59 மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இருந்தது. இதுதொடர்பில் கோஹ்லி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்

ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது முக்கியமான விடயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த மைதானத்தின் மிகக் குறுகிய பௌண்டரி எல்லை 59 மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இருந்தது. பொதுவாக சர்வதேசப் போட்டிகளை பொறுத்தமட்டில் இது குறைந்தபட்ச தூரமாகும். ஒரு தட்டையான ஆடுகளத்தில் இந்த தூரம் வினோதமானது

இது போன்ற விடயங்கள் தொடர்ந்து இடம்பெறுவது பைத்தியகாரத்தனம் என்றே சொல்லலாம். 59 மீற்றர் எல்லையில் துடுப்பாட்ட வீரர்களுக்கு ரிவர்ஸ் ஸ்வீப் பிரயோகத்தின் மூலம்தான் சிக்ஸர்களை அடிக்க முடியும்என தெரிவித்தார்

இதேநேரம், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அதிகளவு ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர். இருவரும் தங்கள் 20 ஓவர்களில் 160 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பற்றினர்

ஆப்கான், பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு – ஐ.சி.சி விசாரணை

லீட்ஸ் நகரில் நேற்று (29) நடைபெற்ற….

அவர்கள் (பந்து வீச்சாளர்கள்) நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் பந்து வீசியிருந்தனர். ஆனால் குறுகிய பௌண்டரி எல்லையுடன் அதிகம் எதையும் செய்ய முடியாது. ஒரு கட்டத்தில் அவர்கள் 360 ஓட்டங்களை நோக்கி செல்வார்கள் என்று நான் நினைத்தேன். அந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதை தடுக்க நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் நாங்கள் அவர்களை இன்னும் கட்டுப்படுத்தியிருக்கலாம், பென் ஸ்டோக்ஸ் ஒரு நல்ல இன்னிங்ஸை விளையாடினார்.

எனவே, எந்தவொரு வீரரும் தோல்வியை சந்திக்க விரும்பவில்லை. ஆனால் மறுபுறம் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உடைமாற்றும் அறையில் மனநிலை முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கு இதுவொரு பின்னடைவாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று கோஹ்லி கூறினார்.

இதேவேளை, இங்கிலாந்துடனான தோல்விக்குப் பிறகு இந்திய அணி, 11 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலேயே உள்ளது. எனினும், அரையிறுதிக்கு தகுதிபெறுவதை இன்னும் உறுதி செய்யத் தவறிய இந்தியா, அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடனும், பின்னர் இலங்கை அணியுடனும் தங்கள் இறுதி இரண்டு லீக் நிலை ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<