உலகின் ஏழு கண்டங்களிலும் மரதன் ஓடிய முதல் இலங்கையராக ஹசன்

401

மரதன் ஓட்ட வீரரான ஹசன் எசுபலி (Hassan Esufally) மிகவும் கடுமையான நிபந்தனைகள் கொண்ட அந்தாட்டிக் கண்டத்தின், அந்தாட்டிக் ஐஸ் மரதன் (Antarctic Ice Marathon) தொடரினை நிறைவு செய்ததன் மூலம், உலகின் ஏழு கண்டங்களிலும் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய முதல் இலங்கையர் என்னும் புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டத்திற்கு தயாராகும் இலங்கை வீரர் ஹசன்

ஹசன் எசுபலி அதிக குளிர், பனிக்கட்டிப் பாறைகள், மிகக் குறைவான பார்வை வீச்சு என ஆபத்துக்கள் நிறைந்த 42.2 கிலோ மீட்டர் ஓடுபாதையினை அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடரின் போது ஓடி நிறைவு செய்திருந்தார். அவர் குறித்த மரதன் தொடரை முடிக்க 8 மணித்தியாலயங்கள் மற்றும் 35 நிமிடங்களை எடுத்திருந்தார்.  

மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை கொண்டிருக்கும் இந்த மரதன் ஓட்டத் தொடரில் எசுபலியுடன் சேர்த்து உலகின் முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த வீரர்கள் அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் பற்றி பேசும் பொழுது இந்த ஆண்டு இடம்பெற்ற மரதன் தொடரே ஏனைய ஆண்டுகளை விடவும் மிகவும் கடினமாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்தாட்டிக் கண்டத்தில் நடைபெறும் ஒரேயொரு மரதன் தொடராக இருக்கும் இந்த அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர், உலகின் தென் துருவத்திற்கு சில நூறு மைல்கள் தூரத்திலேயே நடைபெறுவது வழக்கமாகும்.  

2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

இந்த அந்தாட்டிக் ஐஸ் மரதன் ஓட்டத் தொடரில் பங்கெடுத்திருந்தது தொடர்பில் பேசிய ஹசன் எசுபலி, ” அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் உலகின் மிகவும் கடினமான மரதன் தொடர் என்பதால்  அதனை எதிர்பார்த்த நேர இடைவெளி ஒன்றில் நிறைவு செய்தது மகிழ்ச்சியான விடயம் ” என ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், மேலும் பேசிய எசுபலி உலகின் ஏனைய கடினமான மரதன் தொடர்களில் பங்கேற்றது அந்தாட்டிக் ஐஸ் மரதன் ஓட்டத் தொடரினை நிறைவு செய்ய பலவகைகளிலும் உதவியாக இருந்தது எனவும்  தெரிவித்திருந்தார்.

அந்தாட்டிக் மரதன் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக ஹசன் எசுபலி, உலகின் மிகவும் கடின மரதன் தொடராக கருதப்படும் இன்கா ஓடுபாதை (Inca Trail) மரதன் தொடரை ஓடி முடித்த முதல் இலங்கையராகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர எசுபலி ஐரோப்பாவின் ஸ்டொக்ஹோம் மரதன் தொடர், ஆசியாவின் கொழும்பு மரதன் தொடர், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மரதன் தொடர், அமெரிக்காவின் போஸ்டன் மரதன் தொடர் மற்றும் ஆபிரிக்காவின் பிக் பைவ் (Big Five) மரதன் தொடர் என்பவற்றினையும்  ஓடி நிறைவு செய்திருக்கின்றார்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க