இலங்கை கிரிக்கெட்டில் பயிற்சியாளர்களாக இணையவுள்ள ஹசான் திலகரட்ன மற்றும் உபுல் சந்தன

1887
Hashan-Tilakaratne-and-Upul-chandana

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்படவிருக்கும் புதிய வீரர்களின் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு திறமைகளை மேம்படுத்தும் நோக்கில்,   இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர்களான ஹசான் திலகரட்ன மற்றும் உபுல் சந்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை, பயிற்சியாளர்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கவுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மேலாளரான சிமன் வில்ஸ்சின் நெரிபடுத்தலின் கீழ், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக சமிந்த வாஸ் செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில், ஹசான் திலகரட்ன மற்றும் உபுல் சந்தன ஆகியோர் தமது முன்னைய சக அணி வீரரான வாசுடன் (பயிற்சியாளராக) அணியில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த நியமனங்களுக்கான பரிந்துரைகள், அரவிந்த டி சில்வா தலைமையில் முன்னர் இருந்த இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த 2௦16ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1௦ஆம் திகதி, அரவிந்த டி சில்வா தலைமையிலான குறித்த சபையின் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டார்.

முன்னைய செய்திகள்

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக சமிந்த வாஸ்

கடந்த 6 – 8 மாதங்களாக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்திரேலிய அணியை முதல்

நேர்த்தியான இடது கை துடுப்பாட்ட வீரரான ஹசான் திலகரட்ன, இலங்கை அணிக்காக 83 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2௦௦ ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், அவர் 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 11 டெஸ்ட் போட்டிகளுக்கு அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

சிறந்த களத்தடுப்பாளரும், லெக் ஸ்பின் சுழல்பந்து வீச்சாளருமான உபுல் சந்தனவுடன், 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியில் ஹசான் திலகரட்னவும் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, 16 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உபுல் சந்தன, சிறந்த சகலதுறை ஆட்டக்காரராவார்.

இவ்விரு நியமனங்கள் குறித்த தகவல் மிக விரைவில் இலங்கை கிரிக்கெட் சபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.