சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன்

98

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்

இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன்

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச…

ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெறுகின்ற மிகப் பெரிய குத்துச்சண்டைப் போட்டித் தொடரான கிங் ஒவ் த ரிங்  சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகள் சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் கடந்த 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றன.

இதில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஷானுஜன் களமிறங்கினார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த மொஹமட் ஹனோனுடன் போட்டியிட்ட அவர், பலத்த போட்டிக்கு மத்தியில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், ஆண்களுக்கான 41 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அத்தாப் மன்சில், ஜோர்தான் நாட்டு வீரர் அப்துல்லாஹ் மிராத்திடமும், ஆண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சுபான் ஹன்சஜ, அயர்லாந்து நாட்டு வீரர் ரையன் டுனேவிடம் தோல்வியை சந்தித்து வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தெவ்மின ஹெட்டியாரச்சி மற்றும் ஆண்களுக்கான 56 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட பிரசாத் மதுரங்க, சேத்திய ஏக்கநாயக்க ஆகியோர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இவ்வாறதொரு சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்தடவையாகும்.  

இதேநேரம், குறித்த தொடரில் இலங்கை குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளராக றேயால் கல்லூரியின் அப்துல்லாஹ் இப்னு செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<