ஈடன் கார்டன் மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த ரசல், பாண்டியா

80
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் என்ரே ரசல், சுப்மான் கில் மற்றும் கிரிஸ் லின் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடைய தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சொந்த மைதானத்தில் முதல் தோல்வியை சந்தித்த சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (26) நடைபெற்ற…………

தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்திருந்திருந்த கொல்கத்தா அணி, நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், தங்களுடைய 100வது ஐ.பி.எல். வெற்றியையும் பதிவுசெய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, என்ரே ரசலின் அதிரடி மற்றும் கிரிஸ் லின், சுப்மான் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டங்களின் உதவியுடன் 232 ஓட்டங்களை குவித்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்த பருவகாலத்தில் இதுவரையில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டமாக பதிவாகியது.

கொல்கத்தா அணி சார்பில் இரண்டாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரசல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதேநேரம், சுப்மான் கில் 45 பந்துகளில் 76 ஓட்டங்களையும், கிரிஸ் லின் 29 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதன் பின்னர், பாரிய வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், குறைவான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை பெற்றது. 8.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. எனினும், ஹர்திக் பாண்டியா களம் நுழைந்து கொல்கத்தா பந்து வீச்சாளர்ளுக்கு நெருக்கடி கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை வீணடித்த ராஜஸ்தான்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ………

ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத நிலையில், பாண்டியா அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தார். எனினும், 34 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களை குவித்த நிலையில் அவர் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சில், என்ரே ரசல் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்படி, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில், 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், ப்ளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பதற்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் சிறந்த ஓட்ட சராசரியுடன் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 232/2 (20), என்ரே ரசல் 80 (40), சுப்மான் கில் 76 (45), கிரிஸ் லின் 54 (29), ஹர்திக் பாண்டியா 31/1

மும்பை இந்தியன்ஸ் – 198/7 (20), ஹர்திக் பாண்டியா 91 (34), சூர்யகுமார் யாதவ் 26 (14), என்ரே ரசல் 25/2

முடிவு – கொல்கத்தா அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<