கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80ஆம் வருட குழுவினரின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் வருடாந்த ஜனாதிபதிக் கிண்ண கால்பந்து தொடர் இம்மாதம் 07ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பல முன்னணி பாடசாலை கால்பந்து அணிகள் பங்குகொள்ளும் இந்தத் தொடரை இம்முறை பாடசாலைகள் கால்பந்து சங்கம் மற்றும் இலங்கை கால்பந்து சங்கம் என்பனவும் இணைந்து நடாத்துகின்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் சமூகத்திலும் கால்பந்தை பிரபலமடையச் செய்தல் மற்றும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவும் இன்றி, போட்டியில் பங்குகொள்ளும் வீரர்கள் மத்தியில் ஐக்கியத்தை உருவாக்குதல் ஆகிய குறிக்கோல்களுடன் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்படுகின்றது.  

டிவிஷன் I சம்பியனாக முடிசூடிய புனித ஜோசப் கல்லூரி

இந்த போட்டித் தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை கால்பந்து சம்மேளன மற்றும் பாடசாலை கால்பந்து சம்மேளன அதிகாரிகள், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள், போட்டித் தொடரில் பங்குகொள்ளும் ஏனைய பாடசாலைகளின் முக்கியஸ்தர்கள், வீரர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர், இளம் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டல் தேவைப்படுகின்றது. இதனைத் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் இலங்கையில் சிறந்த திறமையுள்ள வீரர்களை உருவாக்கும் நோக்கில் எமது பாடசாலையின் 80ஆம் வருட குழுவினர் இந்த போட்டித் தொடரை ஏற்பாடு செய்கின்றனர் எனத் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்டனி பாலேந்திரா, ”2020ஆம் ஆண்டாகும்பொழுது கால்பந்தை இலங்கையின் மிகவும் பிரபலமான விளையாட்டாக கொண்டுவரும் நோக்குடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம். அதன் காரணமாகவே இந்த வருடமும் இந்த போட்டித் தொடருக்கு நாம் எமது முழு ஆதரவினை வழங்குகின்றோம் என்று குறிப்பிட்டார்

இம்முறை இடம்பெறும் ஜனாதிபதிக் கிண்ணத் தொடருக்காக மொத்தமாக 24 பாடசாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. எனினும், கொழும்பு ஸாஹிரா கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, இசிபதன கல்லூரி மற்றும் யாழ் பத்திரிசியார் கல்லூரி அணிகள் பல்வேறு காரணங்களினால் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

நொக் அவுட் முறையிலான போட்டிகளாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டித்தொடரின் ஆரம்ப நாள் போட்டி 07ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெறும். அதன் பின்னர் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை காலிறுதிக்கு முன்னைய சுற்று மற்றும் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் திகதி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அரையிறுதிப் போட்டிகளும், ஜனவரி 22ஆம் திகதி அதே மைதானத்தில் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளன.

இத்தொடரில் வழங்கப்படும் பரிசுகள்

  • சம்பியன் – ஜனாதிபதிக் கிண்ணம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்
  • இரண்டாம் இடம் – கிண்ணம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்
  • மூன்றாம் இடம் – கிண்ணம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்

முக்கிய விருதுகள்

தொடரின் அனைத்து போட்டிகளுக்கும் ஆட்ட நாயகன் விருது

தொடரின் சிறந்த கோல் காப்பாளர் விருது (தங்க கையுறை)

தொடரில் அதிக கோல்களைப் பெறும் வீரர் விருது

தொடரில் மிகவும் மதிப்பு மிக்க வீரருக்கான விருது

தொடரில் கடமையாற்றும் நடுவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான விருதுகள்

மேலும், 2016ஆம் ஆண்டு இலங்கை பாடசாலை கால்பந்து அணி மற்றும் இலங்கை தேசிய அணியை பிரிதிநிதித்துவப்படுத்திய வீரர்களுக்கும் இத்தொடரின் நிறைவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தொடரின் அணிகள் மோதும் விதம்

Hameed al Hussainie - Annual President’s Cup